நெல்லை மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தப் பள்ளியில் 1200-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள். மொத்தம் 48 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அங்கு சாதிய மோதல் காரணமாக நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இரு சாதிய குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இரு குழுக்களாக செயல்பட்ட மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் அதுவே கைகலப்பாக மாறியபோது, ஆசிரியர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்த வணிகவியல் படிக்கும் மாணவரின் பாடப்புத்தகம் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயிருக்கிறது. அதை எதிர்தரப்பைச் சேர்ந்த மாணவர் எடுத்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் வந்ததால், இது பற்றி விசாரித்திருக்கின்றனர். அப்போது இரு சாதிய குழுக்களுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இரு தரப்பினரும் தாங்களாகவே மோதலின்றி சென்று விட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது.

பள்ளி தொடங்கியதும் இன்று மீண்டும் அந்த விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளையின்போது, பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் சாப்பிட்ட பின்னர் கைகழுவிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரின் வகுப்பில் படிக்கும் வேறு மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவரை முதுகில் குத்தியிருக்கிறார்.
கத்திக் குத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆசிரியர்கள் ஓடிவந்து அந்த மாணவனை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சாதிய மோதல் குறித்துக் கேள்விப்பட்ட உள்ளூர் சாதிய அமைப்பினர் பள்ளியின் முன்பாக திரண்டனர். அவர்கள், கத்திக் குத்துக்கு உள்ளான மாணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன், பொதுமக்களைச் சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து கத்திக்குத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.