ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து கமுதக்குடி கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தொங்கியதால் நடத்துநர் திருப்பதி, மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், தொடர்ந்து மாணவர்கள் பேருந்தின் பக்கவாட்டில் கையால் ஓங்கி அடித்து சத்தத்தை எழுப்பியுள்ளனர். இதனால் பேருந்தை இடையே நிறுத்தி படிக்கட்டில் தொங்கிய மாணவர்களிடம் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் படிக்கட்டில் தொங்காமல் பேருந்துக்குள் செல்லுமாறும், இல்லையென்றால் இறங்கி அடுத்த பேருந்தில் வருமாறு, நடத்துநர் திருப்பதி சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடத்துநரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர், காட்டுபரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபின்பு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின் சீருடை அடையாளத்தை கொண்டு நடத்துநர் மூலம் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.