Published:Updated:

`அவர் செய்த தவற்றை மறைக்க' - சென்னைக் காவலர் குறித்து ஆசிரியை எழுதிய 1 பக்க அதிர்ச்சிக் கடிதம்

பத்மபிரியாவுடன் கணவர் ராஜராம்
பத்மபிரியாவுடன் கணவர் ராஜராம்

`என் கணவர், தான் செய்த தவற்றை மறைக்க, எல்லோரிடமும் என்னையும் என் குடும்பத்தினரையும் சிக்கலில் மாட்டிவிடுகிறார்' என்று தற்கொலை செய்துகொள்வதற்குமுன் ஆசிரியை ஒரு பக்கக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆயிரம் கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த ஆசிரியை பத்மபிரியாவுக்கு சோகமும் அதிர்ச்சியும் காத்திருந்தது. திருமணம் நடந்த அன்றே கணவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பத்மபிரியா, மனமுடைந்தார். தாய் வீட்டிலேயே இருந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து பத்மபிரியாவின் அம்மா மகேஷ்வரி, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், பத்மபிரியாவின் கணவர் ராஜாராமை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

காவலர் ராஜாராம்
காவலர் ராஜாராம்

இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் கூறுகையில், ``இன்ஜினீயரிங் படித்த பத்மபிரியா, அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன், பெற்றோர் சம்மதத்துடன் சென்னை ஆவடியில் காவலராகப் பணியாற்றிவரும் ராஜாராமை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவரின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. வரதட்சணை கொடுமை காரணமாக தாய்வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான் காவலர் ராஜாராமை கைதுசெய்துள்ளோம். ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"என்றனர்.

பத்மபிரியா எழுதியுள்ள கடிதத்தில், ``ஸாரி அம்மா, அப்பா, தம்பி. இனி உங்களுக்கு இடையூறாக இருக்க நான் நினைக்கல.

பத்மபிரியா எழுதிய தற்கொலை கடிதம்
பத்மபிரியா எழுதிய தற்கொலை கடிதம்
`திருமணமான அன்றே சுயரூபம் தெரிந்துவிட்டது..' - சென்னைக் காவலரால் விபரீத முடிவெடுத்த மனைவி

என்னால நீங்கள் சந்திக்கிற பிரச்னைகள் எல்லாம் போதும். நீங்கள் எல்லோரும் எனக்காகப் படுகிற கஷ்டத்தைப் பார்க்க முடியல. இது என் முடிவு. இதற்கும் என் குடும்பத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்ல. நான் இன்னைக்கு கஷ்டப்படுறதுக்கும் இந்த முடிவுக்கும் என் திருமணம்தான் காரணம்.

இந்த முடிவுக்கு என்னைக் கொண்டுபோனது என் கணவர் ராஜாராம் மற்றும் அவரின் குடும்பத்தினர். அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். இது நான் சுயநினைவுடன் எழுதியது. என் கணவர், தான் செய்த தவற்றை மறைக்க எல்லோரிடமும் என்னையும் என் குடும்பத்தினரையும் சிக்கலில் மாட்டிவிடுகிறார். தன் சுயநலனுக்காக என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டார்.

பத்மபிரியா
பத்மபிரியா

இதுமட்டுமில்லாமல், என் கணவர் வீட்டினர் என் குடும்பத்தினரைப் பழிவாங்க நினைக்கிறார்கள். அவர்களிடமிருந்து என் பெற்றோரையும் என் தம்பியையும் காப்பாற்ற வேண்டும் என்று காவல் துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

பத்மபிரியாவின் செல்போனில், தற்கொலைக்கு முன் பதிவு செய்த ஆடியோ, வீடியோ ஏதேனும் இருக்கிறதா என்றும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதோடு, சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு