ராமநாதபுரத்தை அடுத்த ஆர்.காவனூர், கிராமம் ஆசாரிமடம் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரின் மகள், ராமநாதபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவந்தார். இவர் படிக்காமல் தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்திவந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதை அவரின் பெற்றோர் கண்டித்துவந்துள்ளனர். 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் படிக்காமல் செல்போன் பயன்படுத்திக்கொண்டிருந்த மகளிடன் தந்தை பூமிநாதன் சத்தம் போட்டு செல்போனை வாங்கி வைத்திருக்கிறார். அப்போது, தான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனக்குப் படிப்பு வரவில்லை எனக் கூறிய அவரை பெற்றோர் இருவரும் கடுமையாகத் திட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் இரவு வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கியிருக்கிறார். மறுநாள் திங்கட்கிழமை காலை எலி பேஸ்ட் சாப்பிட்டதை பெற்றோரிடம் தெரிவிக்காமல் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென வாந்தி எடுத்திருக்கிறார். மாணவியிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக அவர் கூறியதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனடியாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு மாணவியை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவர்கள் மாணவி உடல்நிலை மோசமாகிவிட்டது, காப்பாற்றுவது கடினம் எனக் கூறிவிட்டதால், `நாங்கள் நாட்டு மருந்து கொடுத்து எங்கள் பிள்ளையை காப்பாற்றிக்கொள்கிறோம்’ என மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து நாட்டு மருந்து கொடுத்து மகளின் உயிரைக் காப்பாற்ற பெற்றோர் போராடினர்.

பின்னர் நேற்று அதிகாலை மாணவி பேச்சுமூச்சு இல்லாமல் இருந்ததைத் தொடர்ந்து மீண்டும் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு மாணவி உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து நீண்டநேரம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து மகளின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் மாணவி உடல் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.