Published:Updated:

மும்பை: மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்குத் தேடுதல் நோட்டீஸ்

பரம்பீர் சிங்
பரம்பீர் சிங்

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்கு போலீஸார் தேடுதல் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ரூ.100 கோடி லஞ்சப் புகார் தெரிவித்ததிலிருந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகிறார். இதுவரை பில்டர்கள், கான்ஸ்டபிள்கள் என பல்வேறு தரப்பினரும் பரம்பீர் சிங்குக்கு எதிராக போலீஸில் புகார் செய்துவருகின்றனர். தானேயில் மட்டும் நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நான்கு வழக்குகளும் மிரட்டி பணம் பறித்தது தொடர்பானவை. சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பில்டர் ஒருவர் 2016-ம் ஆண்டு பரம்பீர் சிங் தானேயில் பணியாற்றியபோது தன்னிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியதாகப் புகார் செய்துள்ளார்.

பரம்பீர் சிங்
பரம்பீர் சிங்
மும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனங்களின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்!

இதே போன்று மற்றொரு கிரிக்கெட் சூதாட்டத் தரகரும் பரம்பீர் சிங்குக்கு எதிராக மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகப் புகார் செய்திருக்கிறார். பரம்பீர் சிங் மட்டுமல்லாமல் மேலும் 28 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பரம்பீர் சிங் மற்றும் 28 பேருக்கு எதிராக தானே போலீஸார் தேடுதல் நோட்டீஸ் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த நோட்டீஸ் வெளியிடப்படுவதாகவும், இதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். தேடுதல் நோட்டீஸ் வெளியிடும்போது எல்லைகள், விமான நிலையங்கள் உஷார் படுத்தப்படும். இதன் மூலம் குற்றவாளி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது தடுக்கப்படும் என்று தானே போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே பரம்பீர் சிங், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிராகத் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாநில அரசு நியமித்துள்ள ஒரு நபர் கமிட்டி விசாரணைக்கு எதிராக பரம்பீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தபடி விசாரணை நடைபெறுகிறது. அப்படியிருக்கும்போது புதிதாக ஒரு விசாரணை கமிஷன் தேவையற்றது என்று பரபீர் சிங் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பரம்பீர் சிங் மீதான வழக்கில் அவரைக் கைதுசெய்ய கோர்ட் தற்காலிகத் தடை விதித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு