Published:Updated:

`பணியில் சேர்ந்த முதல்நாள்; இருட்டறை துப்பாக்கிச் சூடு!' - ஆவடியில் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்

ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை
ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை

சென்னை ஆவடியில் உள்ள ஹெச்.வி.எப், காவலாளி அறையிலிருந்து பயங்கரத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதைக்கேட்டு அங்கு வந்து பார்த்தபோது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இறந்துகிடந்தார்.

சென்னையை அடுத்த ஆவடியில் திண் ஊர்தி தொழிற்சாலை (ஹெச்.வி.எஃப்) உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப்பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்துள்ளது. பீரங்கி தயாரிக்கும் ஹெச்.வி.எஃப்-பில் அந்நியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. ஊழியர்கள், அதிகாரிகள் செல்ல நுழைவு வாயில்கள் உள்ளன. உரிய அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே ஹெச்.வி.எஃப்-க்குள் செல்ல முடியும். மேலும் ஊழியர்கள், அதிகாரிகளுக்குத் தேவையான குடியிருப்புகள், மருத்துவமனை, கேன்டீன் என அனைத்து வசதிகளும் அந்த வளாகத்துக்குள்ளேயே உள்ளன. நுழைவு வாயில்களில் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆவடி ஹெச்.வி.எஃப்
ஆவடி ஹெச்.வி.எஃப்

இந்தநிலையில், இன்று அதிகாலை, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிகள் அறையிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. அதைக்கேட்டு கண்விழித்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர், துப்பாக்கியோடு இருந்தார். அந்தத் துப்பாக்கியில் இருந்த குண்டுகள் வெளியேறி இருந்தன. பதற்றத்துடனும் கோபத்துடனும் இருந்த அந்த ராணுவ வீரரின் அருகில் செல்ல அங்குள்ளவர்கள் பயந்தனர்.

ராணுவ வீரர் நிலாம்பசின்ஹா
ராணுவ வீரர் நிலாம்பசின்ஹா

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒரு வீரர் இறந்து கிடந்தார். அவருடன் இருந்த 3 வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தனர். இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கும் ஹெச்.வி.எஃப்-பில் உள்ள உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் மற்றும் டேங்க் பேட்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ராணுவ வீரரின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Vikatan

போலீஸார் நடத்திய விசாரணையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த வீரரின் பெயர் கிரீஜேஷ்குமார் (48), ஹிமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. துப்பாக்கியால் சுட்டவரின் பெயர் நிலாம்பசின்ஹா (49), திரிபுராவைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. நிலாம்பசின்ஹாவைக் கைது செய்த போலீஸார் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் மீதமுள்ள குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிச் சூடு குறித்து நிலாம்பசின்ஹாவிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சடலமாக கிரீஜேஷ்குமார்
சடலமாக கிரீஜேஷ்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``ஆவடி ஹெச்.வி.எஃப்-பில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் பணி ஊழியர் கிரீஜேஷ்குமார் இறந்துள்ளார். அவரின் உடலில் தலை, கழுத்து ஆகிய பகுதியில் மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்ற விவரம் தெரியவரும். கிரீஜேஸ்குமார், ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது ஹெச்.வி.எஃப்-பில் பணியாற்றிவருகிறார். இவரின் குடும்பம் ஹிமாசலப்பிரதேசத்தில் உள்ளது. அவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் சென்னை வந்துகொண்டிருக்கின்றனர்.

துப்பாக்கியால் சுட்ட வீரர் நிலாம்பசின்ஹா, மேகலாயாவில் விமானப் படையில் பணியாற்றியுள்ளார். அவர், சென்னை ஆவடிக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்றுதான் முதல் பணி. இரவுப் பணி முடிந்த அவரை மாற்றிவிட அடுத்த ஷிப்ட்டில் உள்ள பாதுகாப்புப் பணி ஊழியர் வருவதற்குக் காலதாமதமாகியுள்ளது. இந்தச் சமயத்தில்தான் கார்டு அறை என்றழைக்கப்படும் இடத்தில் 4 பாதுகாப்பு வீரர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் துப்பாக்கியை எடுத்த நிலாம்பசின்ஹா, இருட்டாக இருந்த கார்டு அறையை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார்.

நிலாம்பசின்ஹா
நிலாம்பசின்ஹா

ஹெச்.வி.எஃப்-பில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் இன்சாஸ் என்ற வகை துப்பாக்கிகளை வைத்திருப்பார்கள். அதன் மூலம் 20 ரவுண்ட்களைச் சுட முடியும். நிலாம்பசின்ஹா, 7 ரவுண்ட்ஸ் சுட்டுள்ளார். மீதமுள்ள குண்டுகள் துப்பாக்கியில் உள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

ஆவடி ஹெச்.வி.எஃப் பணிக்காக வந்த நிலாம்பசின்ஹாவுக்குக் கடும் மனஅழுத்தம் இருந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, கார்டு அறை இருட்டாக இருந்ததால் உள்ளே இருப்பவர்கள் அவரின் கண்களுக்குத் தெரியவில்லை. மேலும், இவர்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் கிரீஜேஷ்குமாரைத் தவிர மற்ற 3 பேரும் அப்படியே அந்த இடத்தில் பதுங்கிக் கொண்டனர்.

கிரீஜேஷ்குமார்
கிரீஜேஷ்குமார்

ஆனால் கிரீஜேஷ்குமார் மட்டும் எழுந்து, துப்பாக்கிச் சூடு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்க வந்துள்ளார். அப்போது இருட்டறையில் அவர் நடமாடுவது நிலாம்பசின்ஹாவுக்குத் தெரிந்துள்ளது. இந்தச் சமயத்தில்தான் துப்பாக்கிக் குண்டுகள் கிரீஜேஷ்குமார் உடலில் துளைத்துள்ளன. இந்தியில் சத்தம் போட்டப்படியே அவர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். நிலாம்பசின்ஹாவின் ஆத்திரம் தீர்ந்து, அவர் அங்கிருந்து சென்றபிறகு பதுக்கியிருந்த 3 பேரும் பின்வழியாகத் தப்பியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி நிலாம்பசின்ஹாவிடம் விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு