Published:Updated:

சென்னை: கோயிலில் உண்டியல் உடைப்பு; தடுக்கப் போராடிய காவலாளி கொலை! - சிக்கிய சிறுவர்கள்

 கொலை
கொலை

சென்னையில் பழைமையான கோயிலின் உண்டியலை உடைத்துப் பணத்தைத் திருடியபோது, கொள்ளையர்களுடன் போராடிய காவலாளி அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பாபு . இவர் சென்னை ஐஸ்ஹவுஸ், நடேசன் சாலையில் பழைமையான தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் கடந்த இரண்டு மாதங்களாகக் காவலாளியாகப் பணியாற்றிவந்தார். கடந்த 17-ம் தேதி இரவு பாபு, பணியிலிருந்தபோது நான்கு பேர் முகமூடி அணிந்துகொண்டு கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் இரும்பு ராடால் கோயிலின் உண்டியலை உடைத்தனர். சத்தம் கேட்டு பாபு அங்கு வந்தார். உண்டியலை நான்கு பேர் உடைப்பதைப் பார்த்து பாபு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் சத்தம் போட்டப்படியே உண்டியலை உடைப்பதைத் தடுத்தார்.

கொள்ளை
கொள்ளை

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் நான்கு பேரும் சேர்ந்து இரும்பு ராடால் பாபுவைத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். பின்னர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மூட்டையில் கொள்ளையர்கள் கட்டினர். பாபுவின் அலறல் சத்தம், உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோயிலுக்குள் வந்தனர். அதைப் பார்த்த கொள்ளையர்கள் பண மூட்டையை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். அப்போது பாபுவின் செல்போனையும் எடுத்துக்கொண்டு சென்றனர்.

சென்னை: மோதலான வாய்த் தகராறு; செங்கல்லால் அடித்து இளைஞர் கொலை! - போதையில் நடந்த கொடூரம்

கோயிலுக்குள் வந்த பொதுமக்கள், கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்களைப் பிடிக்கவில்லை. கோயிலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாபுவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். இது குறித்து ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் எனத் தெரியவந்தது.

கொலை
கொலை

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களைப் பிடித்து, அவர்களை அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீஸார் சேர்த்தனர். அவர்களிடமிருந்து பாபுவின் செல்போனையும் போலீஸார் மீட்டனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவலாளி பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் கொள்ளை, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த போலீஸார் கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்தனர்.

காவலாளி பாபு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு