Published:Updated:

தூத்துக்குடி: லாரி ஷெட்டில் பதுக்கப்பட்ட 20 டன் செம்மரக்கட்டை! - ரகசியத் தகவலால் சிக்கியது

பறிமுதல் செய்யப்பட்ட லாரி
News
பறிமுதல் செய்யப்பட்ட லாரி

தூத்துக்குடியிலிருந்து கன்டெய்னர் மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காக லாரியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 டன் மதிப்பிலான ரூ.10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியிலிருந்து வெளிநாட்டுக்குக் கடத்துவதற்காக லாரியில் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன், காவலர்கள் அருள்முருகன், கலைவாணன் அடங்கிய குழுவினர், தூத்துக்குடியிலுள்ள சில கனரக லாரி யார்டு பகுதியில் சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

இதில், புதூர்பாண்டியாபுரம் பகுதியிலுள்ள ஒரு லாரி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியைச் சோதனையிட்டபோது, அதில் செம்மரகட்டைகள் இரண்டு அடுக்காக அடுக்கி பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான விசாரணையில் கனரக வாகன யார்டு பகுதி உரிமையாளர் ராகேஷும், செம்மரக்கட்டைகள் கடத்தல் லாரியின் உரிமையாளர் மில்லர்புரத்தைச் சேர்ந்த ராஜேஷும் தொழில்ரீதியாக நீண்டகால நண்பர்களாக இருந்துவந்தது தெரியவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகளை லாரி மூலம் ராஜேஷ் கடத்திவந்து, தூத்துக்குடியில் ராகேஷுக்குச் சொந்தமான யார்டு பகுதியில் பதுக்கிவைத்திருந்து, பின்னர் கன்டெய்னர் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தொடர்ச்சியாகக் கடத்திவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், தற்போது பிடிபட்டுள்ள செம்மரக்கட்டைகள் கன்டெய்னரில் ஏற்றுவதற்குத் தயாராக இருந்த நிலையில், அதற்குரிய கப்பலில் இடமில்லாததால் லாரி ஷெட்டிலேயே பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக புதியம்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராஜேஷ், ராகேஷ், லாரி டிரைவர் ஆகியோரைத் தேடிவருகின்றனர். ``செம்மரக்கட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட அந்த லாரி, கடந்த சில நாள்களுக்கு முன்பாகவே ஆந்திராவிலிருந்து தூத்துக்குடி டோல்கேட் வழியாக ஊருக்குள் வந்தது. ஆனால், திரும்பிச் செல்லவில்லை. இதற்கிடையில்தான், செம்மரக்கட்டைகள் லாரியில் பதுக்கிவைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்துதான் லாரி ஷெட்களில் தீவிரமாகத் தேட ஆரம்பித்தோம். புதூர் பாண்டியாபுரத்திலுள்ள லாரி ஷெட்டில் தார்ப்பாய் மூடப்பட்ட நிலையில் நின்றிருந்த லாரியைச் சோதனையிட்டோம். அதில் 5 அடி நீளமுள்ள இரண்டு அடுக்குகளாக அடுக்கப்பட்ட 100 செம்மரக்கட்டைகள் இருந்தன. முதற்கட்ட விசாரணையில் ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து தூத்துக்குடிக்கு லாரியில் கடத்திவரப்பட்டு, இங்கிருந்து கன்டெய்னர்கள் மூலம் கப்பலில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. பெரும்பாலும் ரெடிமேட் ஆடைகள் என்ற பெயரில் செம்மரக்கட்டைகள் மீது எட்டு அடுக்குகள் வரை ரெடிமேட் ஆடைகள் அடுக்கிவைக்கப்பட்டு கடத்தப்படுவதாகத் தெரிகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

இந்த செம்மரத்திலிருந்து மருந்துகள், மரச்சாமான்கள், இசைக்கருவிகள் ஆகியவை தயார்செய்யப்படுகின்றன. இதனால், இதற்கான விலையும் மவுசும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. லாரி ஷெட்டின் உரிமையாளர், லாரி உரிமையாளர், லாரி டிரைவர் ஆகிய மூன்று பேரையும் தேடிவருகிறோம். அவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்திய பிறகே முழு விவரம் தெரியவரும்” என்றனர் போலீஸார்.