அலசல்
சமூகம்
Published:Updated:

“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..!”

செல்வமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வமுருகன்

- மரணத்துக்கு முன் மனைவியிடம் கதறிய செல்வமுருகன்

‘‘சாத்தான்குளம் சம்பவத்தைப்போல் கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸாரும் விசாரணைக் கைதி ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டார்கள்’’ என்ற செய்தி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கவே, வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் டி.ஜி.பி-யான திரிபாதி. மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணையில் இறங்கியிருக்கிறது. நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தவர் செல்வமுருகன். முந்திரி வியாபாரம் செய்துவந்த இவர்மீது ஏற்கெனவே ‘வழிப்பறி’ வழக்கு ஒன்றும், நண்பருடன் சேர்ந்து வீடு புகுந்து ‘திருட முயன்றதாக’ வழக்கு ஒன்றும் இருக்கின்றன. இந்தநிலையில், ‘செயின் பறிப்பு’ வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினரால் அக்டோபர் 30-ம் தேதி கைதுசெய்யப்பட்டவர், விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இவர் உடல்நலக் குறைவு காரணமாகச் சிறையில் மரணமடைந்ததாகச் சொல்கிறது சிறைத்துறை வட்டாரம்.

“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..!”

‘‘பணத்துக்காகப் பொய் வழக்கு போட்டதுடன், அடித்துக் கொலை செய்த போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உடலை வாங்க மறுத்து, செல்வமுருகன் குடும்பத்தினர் போராடிவருகின்றனர். அழுது வீங்கிய முகத்துடன் இருந்த செல்வமுருகனின் மனைவி பிரேமாவிடம் பேசினோம். ‘‘28-ம் தேதி காலையில வடலூர் போறேன்னு சொல்லிட்டுப் போன என் வீட்டுகாரரு வீடு திரும்பாம இருக்கவும், ‘அவரைக் காணோம்’னு நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி அழுதேன். ‘நாளைக்குக் காலையில வந்து புகார் கொடுங்க’னு சொல்லி அனுப்பின போலீஸ்காரங்க, மறுநாள் காலையில எங்க வீட்டுக்காரரு செல்போன்ல இருந்து பேசுனாங்க. ‘உன் வீட்டுக்காரரைத் திருட்டு கேஸ்ல அரெஸ்ட் பண்ணியிருக்கோம்’னு சொன்னவங்க, ஒரு லாட்ஜுக்கு வரச் சொன்னாங்க. என் தங்கச்சிகூட அங்கே போனப்ப, முதுகு, கழுத்து, கால்ல ரத்தத்தோட நடக்கவே முடியாத நிலையில என் வீட்டுக்காரரை கார்ல வெச்சிருந்தாங்க. உடம்பெல்லாம் வீங்கி இருந்துச்சு. ‘நகையைத் திருடினேன்னு ஒத்துக்கச் சொல்லி இங்கே ரூம்ல கட்டிவெச்சு அடிக்கிறாங்க’னு கதறி அழுதாரு.

“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..!”

‘உன் வீட்டுக்காரரு நகையைத் திருடிட்டாரு. 10 பவுன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்தா சின்னதா பெட்டி கேஸ் மட்டும் போட்டுட்டு விட்டுடுறோம்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. ‘அவரு தப்பு பண்ணியிருந்தா எங்கே ஒப்படைக்கணுமோ அங்கே ஒப்படைங்க. அதை விட்டுட்டு, ஏன் அடைச்சுவெச்சு அடிக்கிறீங்க?’னு கேட்டதுக்கு, ‘நாங்க சொல்றதைச் செய். இல்லைன்னா என்கவுன்ட்டர் பண்ணிடுவோம்’னு அவரைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. மறுநாள் 30-ம் தேதி காலையில போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனப்ப, ‘உன் வீட்டுக்காரரை ரிமாண்ட் பண்ணிட்டோம்’னு சொன்னாங்க.

2-ம் தேதி, என் வீட்டுக்காரரை மனுப் போட்டு பார்க்குறதுக்காக விருத்தாசலம் சிறைக்குப் போனோம். அப்போ அவரை ஆட்டோவுல ரெண்டு போலீஸ்காரங்க ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. பேசக்கூட முடியாம எங்களைப் பார்த்து அவரு அழுதாரு. நாங்களும் ஆஸ்பத்திரிக்குப் போனோம். ‘பசிக்குது... இட்லி வேணும்’னு கேட்கவும் வாங்கிக் கொடுத்தோம். ஆனா, ‘லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சதால என்னால சாப்பிட முடியலைம்மா’னு சொல்லிவெச்சுட்டாரு. டாக்டருங்க, ‘அவருக்கு ட்ரிப்ஸ் போடணும்’னு சொல்லியும் கேக்காம, ஜெயிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.

4-ம் தேதி நைட்டு, 11:45 மணிக்கு ஜெயில்லருந்து எனக்கு போன் பண்ணி, ‘அவருக்கு உடம்பு சரியில்லை... ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறோம்’னு சொன்னாங்க. அடுத்த 20 நிமிஷத்துல, வலிப்பு வந்ததால அவரு செத்துட்டாருனு சொன்னாங்க. அவர்மேல பொய் கேஸ் போட்டு சித்ரவதை பண்ணி அடிச்சே கொன்னுட்டாங்க. நீதி கிடைக்கலைன்னா நானும் எம்புள்ளைங்களும் தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியே இல்லை’’ என்று கதறினார்.

ராஜா
ராஜா

செல்வமுருகனின் நண்பரான ராஜாவிடம் பேசினோம். ‘‘30-ம் தேதி என்னையும் அந்த லாட்ஜுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கு முன்னாடி 28-ம் தேதியே தூக்கிட்டுப்போன செல்வமுருகனோட கையில விலங்கு மாட்டி, காலையும் கட்டி அங்கே ஒரு ரூம்ல வெச்சிருந்தாங்க. என் முன்னாடியே அவரை இரும்பு ராடாலயும் லத்தியாலயும் அடிச்சாங்க. அன்னிக்கு நைட்டே என்னை விட்டுட்டாங்க. அவரை ஜெயில்ல போட்டுட்டாங்க’’ என்றார் பீதியுடன். செல்வமுருகனுடன் இணைந்து வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் தொடர்புடையவர் இவர்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தைச் சந்தித்தோம், “அக்டோபர் 30-ம் தேதி, துர்க்கையம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்த காவ்யா என்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த செல்வமுருகன் கத்தியைக் காட்டி மிரட்டி, செயினைப் பறித்துக்கொண்டு சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்களே அவரைக் கையும் களவுமாகப் பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தார்கள். சிசிடிவி காட்சிகளிலும் அவர்தான் என்று உறுதியானது. திருடியதை அவரும் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அந்த செயினையும், அதற்கு முன்பு ஒரு வீட்டில் திருடிய நகைகளையும் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்தோம். அன்றே அவரை ரிமாண்ட் செய்துவிட்டோம். 2-ம் தேதியும், 4-ம் தேதியும் சிறையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அதனால்தான் அவர் உயிரிழந்திருக்கிறார்’’ என்றவர், எஃப்.ஐ.ஆர் மற்றும் புகார்தாரரின் விவரங்கள் உள்ளிட்டவற்றைத் தர மறுத்துவிட்டார்.

நமது விசாரணையில், ‘30-ம் தேதி இரவு 10 மணிக்குக் குற்றம் நடந்ததாகவும், அன்றைய இரவே அவரைச் சிறையில் அடைத்துவிட்டதாகவும்’ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருப்பது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற துர்கையம்மன் கோயிலில் மேற்கொண்ட விசாரணையில், 28-ம் தேதி மாலை 5:30 மணிக்குத்தான் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது என்று கோயில் அர்ச்சகரான சிவஜோதி சுவாமிகள், கோயில் அதிகாரி ராமலிங்கம் மற்றும் அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள் தெரிவித்தார்கள். காவ்யாவின் தாயாரிடம் பேசியபோது, 28-ம் தேதி மாலை குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்றதை உறுதிப்படுத்தினார்.

‘‘அன்றைய தினம் மாலையே செல்வமுருகனைப் பிடித்துச் சென்ற போலீஸார், இரண்டு நாள்கள் லாட்ஜில் அடைத்துவைத்து சித்ரவதை செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதை மறைக்க, 28-ம் தேதி நடைபெற்ற சம்பவத்தை 30-ம் தேதி நடைபெற்றதாக மாற்றி வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

‘‘நகைத்திருட்டு வழக்குகளில் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஆண்டு இறுதியில் பறிமுதல் செய்துவிட்டதைப்போலக் கணக்கு காட்டி வழக்கை முடிக்க வேண்டியிருக்கிறது. உயரதிகாரிகளின் அழுத்தம்தான் இதற்குக் காரணம். அதனால்தான், குற்றப் பின்னணி உள்ளவர்களைப் பிடித்து, அடித்துத் துவைத்து, அவர்களிடமே நகைகளை வாங்கி டார்கெட்டை முடிக்க வேண்டியிருக்கிறது. அப்படி டார்கெட்டை முடிப்பதற்காகச் செய்த விஷயம்தான் இப்போது சிக்கலாகிவிட்டது’’ என்கிறார்கள் கடலூர் மாவட்ட காக்கிகள் சிலர்.

கடலூர் மாவட்ட எஸ்.பி-யான அபிநவ்வைத் தொடர்புகொண்டு, ‘‘28-ம் தேதியே செல்வமுருகன் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக அனைவரும் கூறும் நிலையில், 30-ம் தேதி என்று காவல்துறை கூறுகிறார்களே...’’ என்று கேட்டபோது,

‘‘சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இருப்பதால், என்னால் கருத்து கூற முடியாது’’ என்றார். ‘‘ஆண்டு இறுதியில் நகைகளைப் பறிமுதல் காட்ட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்கிறார்களே...’’ என்றபோது, ‘‘அப்படி எந்த அழுத்தமும் இல்லை’’ என்றார்.

“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..!”

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 54-ன்படி, கைதுசெய்யப்பட்ட நபரின் உடல்நிலையை அரசு மருத்துவர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு, அந்தச் சான்றிதழை கைதியின் உறவினர்களிடம் அளிக்க வேண்டும். அதே போன்று, அந்த மருத்துவச் சான்றிதழையும், கைதியின் உடல்நிலையையும் பரிசோதித்த பிறகே சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதி வழங்க வேண்டும் என்பது விதி. இந்த நடைமுறைகள் சரிவரப் பின்பற்றப்படாததே காவல் நிலையத்தில் தாக்கப்பட்டவர்கள் சிறையில் மரணமடையும் சம்பவங்களுக்குக் காரணமாகிறது.

என்னதான் குற்றப் பின்னணியுள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை; வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதை காவல்துறை நியாயப்படுத்த முடியாது. காவல் நிலையத்தின்மீதும், காவலர்கள் மீதும் மக்களிடம் உருவாகியிருக்கும் மோசமான பிம்பம் நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகிறது. ரத்தம் தெறிக்கும் தண்டனைகளையும் சித்ரவதைகளையும் மட்டும்தான் தீர்வாகக் கருதுகிறதா காவல்துறை?