Published:Updated:

வெள்ளைச் சட்டை கறுப்பு பேன்ட்... சென்டிமென்ட் திருடன் சித்ரவேல்!

- 400 மூதாட்டிகளிடம் திருட்டு... 100 பெண்களோடு உல்லாசம்... 60 வழக்குகள்

பிரீமியம் ஸ்டோரி

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் குறிவைத்து ஏமாற்றுபவன், மதுரையைச் சேர்ந்த திருடன் சித்ரவேல். சென்டிமென்ட்டாகப் பேசி ஏமாற்றுவதில் பலே கில்லாடி. `இவனது பாச நடிப்பை உண்மையென நம்பி, தங்க நகைகளை ஏமாந்த மூதாட்டிகளின் பட்டியல் 400-ஐ தாண்டும்’ என்கிறார்கள் தாம்பரம் போலீஸார்!

கடந்த அக்டோபர் 8-ம் தேதி, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த 70 வயது சரோஜா, தாம்பரம் பேருந்து நிலையத்தில் காலை 11 மணி அளவில் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது வெள்ளைச் சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்த இளைஞன் ஒருவன் சரோஜாவின் அருகில் சென்று, “உங்களைப் பார்த்தா என் அம்மா மாதிரியே இருக்கீங்க...” என்று ஆரம்பித்திருக்கிறான். “இந்த வயசுல இப்படி நகையெல்லாம் போட்டுக்கிட்டு வராதீங்க... கழுத்துல மறைச்சுப் போட்டுக்குங்க” என்று அட்வைஸ் செய்திருக்கிறான். மிக அன்பான விசாரிப்பின் மூலம், சரோஜாவின் குடும்பச் சூழலைப் அறிந்துகொண்டு “உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வருதாம்மா?” என்று கேட்டிருக்கிறான். “இல்லையேப்பா...” என்று சொன்ன சரோஜாவின் குரலில் இருந்த வருத்தத்தைப் புரிந்துகொண்டு, கையிலிருந்த பேப்பர் கட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து “இதுதான் அப்ளிகேஷன் ஃபார்ம். ஃபில் பண்ணி பக்கத்து போஸ்ட் ஆபீஸ்ல குடுத்தா, அடுத்த மாசத்திலிருந்து பணம் வரும். உங்களை மாதிரி இருக்கறவங்களுக்கு உதவத்தான் நான் இதெல்லாம் பண்றேன். நீங்களே பண்ணிக்கறீங்களா... நான் ஹெல்ப் பண்ணவா?” என்று அன்பொழுகக் கேட்டிருக்கிறான்.

வெள்ளைச் சட்டை கறுப்பு பேன்ட்... சென்டிமென்ட் திருடன் சித்ரவேல்!

“இப்படி உதவி செய்யற நீ நல்லா இருக்கணும்ப்பா. என் சொந்தக்காரங்ககூட இதெல்லாம் பண்ணினதில்லை. நீயே பண்ணிக்குடுப்பா” என்று மூதாட்டி சொல்ல, படிவத்தைப் பூர்த்திசெய்துவிட்டு “பக்கத்துலதான் போஸ்ட் ஆபீஸ். நீங்களே போய் குடுத்துருவீங்களா... அதுக்கும் நான் ஹெல்ப் பண்ணணுமா?” என்று இன்னும் ‘கனிவாக’க் கேட்டிருக்கிறான். “டைமிருந்தா வாயேன்பா” என்று மூதாட்டி சொல்லவும், “என் அம்மா மாதிரி இருக்கீங்க... அதான் வர்றேன்” என்று உடன் சென்றவன், போஸ்ட் ஆபீஸ் வாசலில் வைத்து, “அம்மா... இந்த நகையெல்லாம் பார்த்தா எதுக்கு உதவித்தொகைன்னு கேட்டுருவாங்க... அதைக் கழட்டிக் குடுங்க... நீங்க உள்ள போய் ஃபார்ம் குடுத்துட்டு வாங்க. என்னைப் பார்த்தா உதவித்தொகை தர மாட்டாங்க” என்று கூறியிருக்கிறான். அவனை நம்பி நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு உள்ளே சென்ற மூதாட்டியிடம், “இங்கல்லாம் இந்த ஃபார்ம் வாங்க மாட்டோம்மா!” என்று போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் சொல்ல, வெளியில் வந்த சரோஜாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாசக்காரன் எஸ்கேப் ஆகியிருந்தான். உடனே, தாம்பரம் காவல் நிலையத்தை நாடினார் மூதாட்டி சரோஜா.

பழைய பல்லாவரம், கட்டபொம்மன் தெருவில் குடியிருக்கும் 71 வயதான சரோஜாவுக்கும் இதேபோல சம்பவம் நடந்து, அது கடந்த ஜூன் மாதம் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்தது. சீனியர் சிட்டிசன்களைக் குறிவைத்து நகை பறிக்கும் இந்தத் திருடனைத் தேடும் முயற்சியில், சம்பவ இடங்களின் சிசிடிவி-யில் பதிவாகியிருந்த அங்க அடையாளங்கள் 37 வயது சித்ரவேலின் அடையாளங்களுடன் ஒத்துப்போயின. அவன்தான் என உறுதிசெய்த தாம்பரம் போலீஸார், செல்போன் சிக்னலைக்கொண்டு தாம்பரம் மார்க்கெட்டில் வைத்து சித்ரவேலைக் கைதுசெய்திருக்கின்றனர்.

சித்ரவேல்
சித்ரவேல்

இது குறித்து தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் பேசினோம். ``சித்ரவேல் மீது நெல்லை மாவட்டம், வள்ளியூர், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ராஜபாளையம், உசிலம்பட்டி, மதுரை, பழனி, பரமக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், திண்டிவனம், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, பூந்தமல்லி, பூக்கடை, தாம்பரம் என 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. சிறையில் சில மாதங்கள், வெளியில் பல மாதங்கள் என வாழ்ந்துவரும் சித்ரவேல், மூதாட்டிகளிடம் நகைகளை ஏமாற்ற ஒவ்வொரு முறையும் புதுப்புது டெக்னிக்குகளைப் பயன்படுத்துவான். அரை மணி நேரத்திலேயே மூதாட்டிகளின் மகனாகவோ அல்லது பேரனாகவோ மாறும் அளவுக்குப் பாசம் காட்டி அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவான். ‘இப்பல்லாம் வீட்ல வயசானவங்ககிட்ட பரிவா யாரும் பேசுறதில்லை. அவங்ககிட்ட அன்பா நாலு வார்த்தை பேசினாலே ஈஸியா நம்பிருவாங்க... அவங்க உடல்நிலையைப் பத்தி அக்கறையா விசாரிக்கிற மாதிரி கொஞ்சம் சென்டிமென்ட்டா பேசினா எல்லா விவரமும் சொல்லிருவாங்க. எல்லாத்துக்கும் மேல திருடின பிறகு அவங்க நம்மளை ஓடியாடித் தேட மாட்டாங்க’ என்று முதியோர்களைக் குறிவைக்க சித்ரவேல் பல காரணங்கள் வைத்திருக்கிறான். சிறு வயதில் பக்கத்து வீட்டில் திருடிய குற்றத்துக்காகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான். அங்கிருந்து வெளியில் வந்த சித்ரவேல், தன்னுடைய 14-வயதில் மூதாட்டி ஒருவரிடம் தங்க செயினை வழிப்பறி செய்திருக்கிறான். அதை விற்று பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் கொடுத்து உல்லாசமாக இருந்திருக்கிறான். அதன் பிறகு, இன்றுவரை அதைத் தொடர்கிறான்.

வெள்ளைச் சட்டை கறுப்பு பேன்ட்... சென்டிமென்ட் திருடன் சித்ரவேல்!

தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிறைகளுக்குச் சென்றுவந்தும்கூட சித்ரவேல் திருந்தவில்லை. திருமணத்தை ஒரு தீர்வாக நினைத்து, வீட்டில் அவனுக்கு 23 வயதில் மணம்முடித்து வைத்தனர். ஆனால், திருந்தாத அவன் நடத்தையால் மனைவி பிரிந்துசென்றுவிட்டார். திருட்டுக்கான காரணம் கேட்டால், ‘விதவிதமான பெண்களோடு உல்லாசமாக இருந்து பழகிவிட்டது. திருடும் நகைகளைப் பரிசாகக் கொடுத்து அவர்களோடு உல்லாசமாக இருப்பேன். அப்படி, இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களோடு சந்தோஷமாக இருந்திருக்கிறேன்’ என்கிறான். சித்ரவேலைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் அவன்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தைப் பாய்ச்ச இருக்கிறோம்” என்றனர்.

நம்மைச் சுற்றி சித்ரவேலைப்போல சென்டிமென்ட் திருடர்கள் பலரும் இருக்கலாம். அறிமுகம் இல்லாதவர்கள் வலிய வந்து உதவும்போது, சீனியர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு