Published:Updated:

`சயனைடு' மல்லிகா ஸ்டைலில் கேரளக் கொலைகள்! - 2 வித்தியாசங்களின் அதிர்ச்சிப் பின்னணி

ஜோலி, சயனைடு மல்லிகா
ஜோலி, சயனைடு மல்லிகா

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ரோஜோவுக்கு தன் வீட்டில் தண்ணீர் குடிக்கவே பயமாக இருந்தது.

கேரளாவையே உலுக்கிக்கொண்டிருக்கிறது ஜோலியின் சீரியல் கொலைகள். காவல்துறையில் ஜோலி அளித்த முதற்கட்ட வாக்குமூலத்தில் குடும்ப உறவுகளைக் கொலை செய்ததற்கான காரணங்கள் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது. ஜோலியின் கணவரின் சகோதரர் ரோஜோ அளித்த புகாரின் பேரில்தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தனது குடும்பத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் மரணங்கள் ரோஜோவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஜோலி மீது ரோஜோவுக்கு சந்தேகம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர் தன் வீட்டில் தண்ணீர் குடிக்கவே ரோஜோவுக்குப் பயமாக இருந்தது. 2016-ல் அளித்த புகாரில் இப்போதுதான் உண்மை வெளிவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

ஜோலி 17 வருடங்களாக தனது குடும்ப உறவுகளை, ஒவ்வொருவராகக் கொலை செய்துள்ளார். ஒவ்வொரு கொலையும் ஜோலிக்குத் தைரியத்தைக் கொடுக்க அவர் 6 கொலைகளை செய்துவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின்றன. தங்கத்தை பிரித்தெடுக்கும் சயனடை மூலம் அனைவரையும் கொன்றதாக ஜோலி வாக்குமூலம் அளித்துள்ளார். ஜோலிக்கு நெருக்கமானவர்களோ, `அவள் மிகவும் அமைதியானவள். அனைவரிடமும் அன்பாக பழக்கக்கூடியவர். அவரது இந்தச்செயல் அதிர்ச்சியளிக்கிறது' என்று கூறியுள்ளனர். ஜோலியின் வாக்குமூலம் கேரளாவையே உலுக்கி வருகிறது. இந்த வழக்கில் ஜோலிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என சமூகவலைதளத்தில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

சயனைடு பாணி கொலைகள் இந்தியாவுக்குப் புதிதல்ல. தனது பெயருடன் சயனைடை அடைமொழியாக கொண்ட மல்லிகா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தனது நாள்களை கழித்துவருகிறார். இந்த `சயனைடு' மல்லிகாதான் இந்தியாவில் தண்டனை பெற்ற முதல் சீரியல் கில்லர் எனக் கூறப்படுகிறது. மல்லிகாவின் இயற்பெயர் கெம்பம்மா. பெங்களூரு பக்கத்தில் இருக்கும் கக்கலிபுரம் கிராமம்தான் கெம்பம்மாவின் ஊர். கணவர் டெய்லர், குடும்பம் வறுமையில் வாடியது. பணத்தின் மீது மோகம் கொண்ட கெம்பம்மா சிட்பண்ட் பிசினஸ் நடத்தினர். அதில் நஷ்டம் ஏற்படவே, கணவர் பிரிந்துவிடுகிறார். வறுமையைப் போக்க கூலி வேலைக்குச் சென்றார். பின்னர் ஒரு நகைக்கடையில் பணிபுரிந்தார். நேர்மையாக இருந்தால் செல்வந்தர் ஆக முடியாது என்ற எண்ணம் கெம்பம்மாவின் மனதில் ஆழமாகப் பதிந்தது இந்த நகைக்கடையில்தான்.

கொலை
கொலை

பேராசை, கெம்பம்மாவைக் கொலை செய்யத் தூண்டியது. 1999-ம் ஆண்டு மம்தா ராஜன் என்ற பெண்ணைக் கொலை செய்கிறார். இவர் கையாண்ட பாணியே வித்தியாசமானது. கோயிலுக்கு வந்து தங்களது கஷ்டங்களை கடவுளிடம் கொட்டித்தீர்க்கும் பெண்கள்தான் கெம்பம்மாவின் டார்க்கெட். எல்லா இடங்களிலும் ஒரே பெயரைப் பயன்படுத்த மாட்டார். சாவித்திரியம்மா, கெம்பம்மா, லட்சுமி என இடங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றுவார். முதலில் அந்தப் பெண்களின் குறைகளைக் கேட்பார். நோயை குணப்படுத்துவேன், குழந்தை வரம் கிடைக்க பரிகாரங்கள் செய்வேன் எனக் கூறி பெண்களை நம்பவைக்கத் தொடங்கினார். கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள்தான் இவரது டார்கெட். பரிகாரங்கள், பூஜைகள் செய்தால் உங்களது கஷ்டங்கள் போகும் எனக் கூறுவார். அதை நம்பி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த நீரை தீர்த்தமாக கொடுத்து அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிப்பார். தங்க நகை பாலிஷ் போடும் கடையில் இருந்துதான் சயனைடு இவருக்குக் கிடைத்துள்ளது.

2000-ம் ஆண்டு இப்படித்தான் ஒரு பெண் தன் கஷ்டத்தைக் கூறி இவரிடம் சென்றுள்ளார். சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என அவரின் வீட்டுக்குச் சென்று சயனைடு கலந்த தீர்த்தத்தைக் கொடுத்தார். வீட்டில் இருந்த நகை மற்றும் பொருள்களை திருடியுள்ளார். அந்தப்பெண் கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இந்த வழக்கில் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். 2007-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளையில் தீவிரமாக இறங்கினார். 3 மாதத்தில் இவர் 5 பெண்களிடம் கைவரிசை காட்டினார். பெங்களூரு பேருந்து நிலையத்தில் நகைகளுடன் நின்றிருந்த கெம்பம்மாவை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் நகைகளுக்காகப் பெண்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதையும் சிலரைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

சயனைடு மல்லிகா
சயனைடு மல்லிகா

இந்த விவகாரம் 2009-ம் ஆண்டு பெரிதும் பேசப்பட்டது. பெங்களூரு முதன்மை நீதிமன்றம் `சயனைடு மல்லிகா’ எனும் கெம்பம்மாவுக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 2012-ம் ஆண்டு மற்றொரு வழக்கில் இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் `சயனைடு மல்லிகா’ அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு பெண்களுக்கு இடையேயான ஒற்றுமை சயனைடு மற்றும் பேராசை. காதல் திருமணம் செய்து கொண்ட ஜோலி தன் ஆசைப்படி வாழ விரும்பி தனது உறவுகளைக் கொலை செய்துள்ளார். ஏழ்மை நிலையை விரும்பாத மல்லிகா பணத்தைக் குறிக்கோளாக கொண்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு