நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆம்ஸ்டர் சைலஸ் என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து 51 சவரன் நகை 30,000 ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றனர். அத்துடன், அதே கிராமத்தில் உள்ள 5 வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த வீடுகளில் எதுவும் கிடைக்காததால் தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்களைப் பிடிக்க நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன், வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா ஆகியோர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி உவரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. கொள்ளைச் சம்பவங்கள் நடந்த பகுதிகளிலிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது பாவாடை கொள்ளையன் உருவம் கிடைத்தது.
அதையடுத்து, கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தியபோது ஆனைகுடி கிராமத்தின் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற மினி லோடு ஆட்டோவை கைப்பற்றி அதில் இருந்த முகவரியை வைத்து விசாரித்தபோது தென்காசி மாவட்டம் தாட்டான்பட்டியை சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் மகன் பெஞ்சமின் (வயது 34) என்பவருடைய வாகனம் என்பது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் பெஞ்சமினை பிடித்து விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.உவரி காவல்துறை
அவரைப் பிடித்து விசாரித்தபோது ஆசிரியர் ஆம்ஸ்டர் சைலஸ் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ``நான் என் மனைவி காளீஸ்வரி, தம்பி ஈசாக் ஆகிய மூவரும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்குவோம். அந்தப் பகுதியில் நாலைந்து மாதங்கள் தங்கியிருந்து சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடுவோம்.
வீடுகளில் கொள்ளையடிக்கச் செல்லும்போது நான் பாவாடை அணிந்து அதை மடக்கிக் கட்டிக் கொள்வேன். என் மனைவியும் தம்பியும் வெளியில் நின்று ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணிப்பார்கள். வீட்டுக்குள் ஆள் இருந்தாலும் நான் துணிந்து உள்ளே சென்று சத்தமில்லாமல் திருடிவிடுவேன். விழுப்புரம், திருப்பூர், மதுரை என பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியிருக்கிறோம்.

பகலில் வேலைக்குச் செல்வது போல லோடு ஆட்டோவில் எங்காவது சுற்றித் திரிந்து வீடுகளை நோட்டமிட்டு இரவில் திருடுவோம். பல மாவட்டங்களில் வீடுகளில் திருடினாலும் நெல்லை மாவட்டத்தில் எங்களை போலீஸார் பிடித்துவிட்டார்கள்” எனக் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாவாடை கொள்ளையன் பெஞ்சமினுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவரையும் அவர் மனைவி காளீஸ்வரி தம்பி ஈசாக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெஞ்சமின் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல கொள்ளை சம்பவம் குறித்துத் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து 51 சவரன் நகை, 30,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. அத்துடன், அவர்களிடம் இருந்த லோடு அட்டோ, இரு கார்கள், மூன்று பைக்குகள், ஐந்து செல்போன்கள், ஒரு டிராக்டர் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆம்ஸ்டர் சைலஸ் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் பாவாடை கொள்ளையன் மற்றும் அவரது கும்பலைப் பிடித்த காவல்துறையினரைப் பொதுமக்கள் பாராட்டினார்கள்.