Election bannerElection banner
Published:Updated:

பெங்களூருவின்`காட்பாதர்' மரணம்..இறுதிச்சடங்கில் துப்பாக்கிச்சூடு சர்ச்சை-யார் இந்த முத்தப்பா ராய்?!

முத்தப்பா ராய்
முத்தப்பா ராய்

ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்தார்.

பெங்களூருவின் `காட்பாதர்' என்று அழைக்கப்பட்ட முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு 68 வயது ஆகிறது. இவரது இறுதிச் சடங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

யார் இந்த முத்தப்பா ராய்?

மங்களூருவைப் பிறப்பிடமாகக்கொண்டு வங்கிப் பணியாளராக வாழ்க்கையை நடத்திய இவர் பெங்களூரு நகரின் முன்னாள் நிழல் உலக தாதா. தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்ற பெரிய டான்களுக்கே குடைச்சல் கொடுத்த படா பெங்களூரு டான். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் என அசால்ட்டாய் ஆட்கள் வைத்து ஏ.டி.எம் மெஷின் போல பணம் கொடுத்தால் ஆட்களை ஸ்கெட்ச் போட்டு ‘செய்யும்’ பலே தாதா. இதனாலேயே ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்லப்பிள்ளையாய்க் குறுகிய காலத்திலேயே ஆக்டோபஸாய் பெங்களூருவையே அசாதாரணமாய் வளைத்துவிட்டார் ‘அப்பா’ என செல்லமாக அழைக்கப்படும் முத்தப்பா ராய்.

முத்தப்பா ராய்
முத்தப்பா ராய்

70 மற்றும் 80-களில் கிங் மேக்கராய் அறியப்பட்டவர். 1996-ல் தாதா வாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக அறிவித்து பரிதாபத்தை அள்ளிக்கொண்டார். காரணம் 1994-ல் இவரது எதிரிகள் சிலரால் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு வருடங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். குணமாகி எழுந்ததும் துபாய்க்கு இடம் பெயர்ந்தவர் தன் சேட்டைகளை விட்டுவிட்டார். கர்நாடகா போலீஸ் இவரை விட்டுவைத்ததற்கு மிக முக்கியக் காரணம் இருக்கிறது. கொடூரமான தாதாக்களாக கர்நாடகாவையே அலறவைத்த எம்.பி.ஜெய்ராஜ் மற்றும் ‘ஆயில்’ குமார் என்ற இருவரையும் போட்டுத் தள்ளி பெங்களூரு நகரை அமைதியாக்கியவர் இவர். இவர்கள் இருவரின் மீதும் பல கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் உண்டு.

துபாய்க்குப் போனதும் தாதா தொழிலில் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் போட்டு ஒரு மருந்து கம்பெனி ஆரம்பித்தார். இன்றுவரை ஆப்பிரிக்காவின் மிக முக்கிய மருந்து பிசினஸ் இவரது கன்ட்ரோலில்தான்! நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை 2001-ல் யூ டர்ன் அடித்தது. பெங்களூரு ரியல் எஸ்டேட் ஜாம்பவான் சுப்பராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி ஆனார். துபாயிலிருந்து அவரைக் கைதுசெய்ய கர்நாடகா போலீஸ் துபாய் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஒரு வழியாக ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு 2002 டிசம்பர் 1-ம் தேதி அவரை இந்தியாவுக்குப் பாதுகாப்பாய் அனுப்பிவைத்துக் கைது செய்ய வழிசெய்தது.

முத்தப்பா ராய்
முத்தப்பா ராய்

2008 வரை வழக்குகளை இழுத்து சாதுர்யமாக நீர்த்துப்போகச் செய்து வெளியே வந்தார். 2008-ல் ‘ஜெய கர்நாடகா’ என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கத்தை படு தீவிரமாய் கர்நாடகா எங்கும் விரிவுபடுத்தினார். ‘ஸ்தாவரகே அல்லிவுண்டு-ஜங்கமகே அல்லிவில்லா’ (நகராதது அழியும். நகர்ந்துகொண்டே இருப்பது வாழும்) என்ற புகழ்பெற்ற பசவண்ணா என்ற கவிஞரின் கோஷத்தை இயக்கத்தின் கொள்கையாக அறிவித்து பரபரவென இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாய் வளர்ந்தார்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்தார். 2016-ம் ஆண்டு ‘யுவ சம்மேளனா’ என்ற இளைஞர் பாசறையை ஆரம்பித்து ‘ஊழலுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்’ என கோஷம் போட்டிருக்கிறார். மோடி ஆதரவாளராய்த் தன்னைக் காட்டிக் கொள்வதால் மத்தியில் வரை இவர் செல்வாக்கு நீள்கிறது எனக் கூறப்படுகிறது. இவரது வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவின் சர்ச்சைக்குரிய இயக்குநரான ராம் கோபால் வர்மா இவரது வாழ்க்கையைக் கேள்விப்பட்டு நேரில் சந்தித்துப் பேசி படமாக்கத் திட்டமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை எடுத்து வந்தவர் வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார்.

முத்தப்பா ராய்
முத்தப்பா ராய்

இவரது உடல் பிடால்டியில் உள்ள எஸ்டேட்டில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் காவலர்கள், ராணுவ வீரர்களுக்குச் செய்வதுபோல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வலைதளங்களில் பதிவிட சர்ச்சையாக மாறியுள்ளது. இதையடுத்து போலீஸார் முத்தப்பாவின் ஆதரவாளர்கள் 7பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு