Published:Updated:

`ஏழு பேருக்கு தூக்கு தண்டனை!’ - தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் பின்னணி

சுப்பையா கொலை வழக்கு
சுப்பையா கொலை வழக்கு

சென்னையில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலைசெய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். 50 ஆண்டுகளாக நடந்துவந்த சொத்து தகராறால் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். சம்பவம் தொடர்பாக பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், வில்லியம், போரிஸ், ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐயப்பன் அப்ரூவராக மாறி வாக்குமூலம் வழங்கியது முக்கிய ஆதாரமாக மாறியது.

மருத்துவர் சுப்பையா
மருத்துவர் சுப்பையா

கன்னியாகுமரியிலுள்ள அஞ்சுகிராமத்தில் 10 கோடி மதிப்பிலான இரண்டே கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் பிரிக்கும் பிரச்னையில் இரு தரப்பினருக்கிடையே கடந்த ஐம்பது ஆண்டுகளாக மோதல் நீடித்துவந்தது. இந்த நிலத்தைப் பங்கு பிரிக்கும் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்தநிலையில், கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி, பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையாவை கூலிப்படையினர் கொடூரமான முறையில் 20 இடங்களில் வெட்டிச் சாய்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் செப்டம்பர் 23-ம் தேதி உயிரிழந்தார். இவரைக் கூலிப்படையினர் வெட்டும் காட்சிகள் எதிரிலிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருந்தன. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, தமிழகத்தையே அதிரவைத்தன.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கெனவே மருத்துவர் சுப்பையா கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் பொன்னுசாமியும் அவரின் மனைவி மேரி புஷ்பமும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து பொன்னுசாமியின் மகன் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னாளில் வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வ பிரகாஷ், ஐயப்பன் ஆகியோரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். கடந்த 2015-ம் ஆண்டு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 173 ஆவணங்கள், 42 சான்றுப் பொருள்கள், ஐந்து நீதிமன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எதிரிகள் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் சுப்பையா வெட்டப்பட்ட காட்சி
மருத்துவர் சுப்பையா வெட்டப்பட்ட காட்சி

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன், ரகுநாதன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். இந்த வழக்கின் அனைத்துக் கட்ட விசாரணைகளும், வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பதாகச் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்தார். ஆகஸ்ட் 2-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார். இதன் காரணமாக வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று ஆகஸ்ட் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அப்ரூவர் ஆன ஐயப்பன் தவிர மீதமுள்ள ஒன்பது பேரும் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டது. இந்த ஒன்பது பேரில், மேரி புஷ்பம், ஏசுராஜன் இருவர் தவிர மீதமுள்ள ஏழு நபர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

வரதட்சணைக்காக மனைவியைக் கொன்ற கணவர்; ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு