Published:Updated:

தொடரும் பாலியல் குற்றங்கள்... பலியாகும் பள்ளி மாணவிகள்! - ‘‘என் மக சாவுக்கு நீதி கிடைக்கணும்!’’

மாணவிகள் மட்டுமல்ல... குழந்தைகளும் தப்பவில்லை!

பிரீமியம் ஸ்டோரி

‘யாரையும் சும்மா விடக் கூடாது’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு கோவை பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட ரணமே இன்னும் ஆறவில்லை... அதற்குள் கரூரில் பள்ளி மாணவி ஒருவர், ‘பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’ என்று உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்குக் கல்லூரியின் தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரமும் வெளியே வந்திருக்கிறது. தமிழகத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லையா... என்னதான் நடக்கிறது இங்கு?

கரூர் மாவட்டம், வெண்ணைமலைப் பகுதியில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த அந்த மாணவி, நவம்பர் 19-ம் தேதி பள்ளியிலிருந்து மாலையில் வீடு திரும்பியதும் தற்கொலை செய்துகொண்டார். தனது டைரியில் எழுதிய கடிதத்தில், யார் பெயரையும் குறிப்பிடாததால் இந்த விவகாரத்தைப் பள்ளி நிர்வாகம், காவல்துறை எனப் பல தரப்பும் மறைக்க முயல்வதாகப் புகார் எழுந்துள்ளது.

தொடரும் பாலியல் குற்றங்கள்... பலியாகும் பள்ளி மாணவிகள்! - ‘‘என் மக சாவுக்கு நீதி கிடைக்கணும்!’’

நீண்ட முயற்சிக்குப் பின்னர் மாணவியின் தாயைச் சந்தித்துப் பேசினோம். கணவரை இழந்த நிலையில் ஒரே மகள் மட்டுமே தனது எதிர்காலம் என்றிருந்தவரின் நம்பிக்கையைப் சிதைத்துப்போட்டிருக்கிறார்கள் வக்கிரம் பிடித்த பாலியல் குற்றவாளிகள்... “என் கணவர் 2018-ல இறந்துட்டாரு. என் பொண்ணு மட்டும்தான் என்னோட வாழ்க்கையா இருந்தா. நல்லா படிக்குற என் பொண்ணோட கனவே டாக்டர் ஆகுறதுதான். அதுக்காகத்தான் நீட் கோச்சிங் கிளாஸ் இருக்குற ஸ்கூலாப் பார்த்து சேர்த்துவிட்டேன். ஸ்கூலுக்கு லீவே போடாம எப்பவும் படிப்பு படிப்புன்னுதான் இருப்பா. ‘அம்மா நீ கவலையேபடாதே... சீக்கிரம் டாக்டராகி நான் உன்னை நல்லா பார்த்துக்குறேன்’னு சொல்லுவா. அப்படியிருந்த என் பொண்ணு, கடந்த ஒரு மாசமா தலைவலி, காய்ச்சல்னு அடிக்கடி லீவு போட்டா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ‘ஸ்கூல்ல ஒரு சார் தப்பாப் பேசுறாரு’னு சொன்னா. ரெண்டு மாசமா கெமிஸ்ட்ரியில குறைஞ்ச மார்க் வாங்குனதோட, நோட்டுல அழுற மாதிரி எமோஜி வரைஞ்சிருக்கா. அதையெல்லாம் நான் கவனிக்கத் தவறிட்டேனே...” என்று கதறியவரைத் தேற்றினோம்.

தொடர்ந்து பேசியவர், ‘‘எம் பொண்ணு இறந்ததும் விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் குடிச்சிருந்தார். புகார் கொடுக்க என்னோட வந்திருந்த சொந்தக்காரங்களை அடிச்சு உதைச்சார். விடியக்காலை 5 மணி வரைக்கும் எங்களை ஸ்டேஷன்ல வெச்சுருந்தாங்க. இப்பவரைக்கும் பள்ளித் தரப்புல இருந்து யாரும் வரலை. ஸ்கூல்லதான் ஏதோ நடந்திருக்கு. என் பொண்ணு சாவுக்கு நீதி கிடைக்கணும்’’ என்று கதறி அழுதவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

தொடரும் பாலியல் குற்றங்கள்... பலியாகும் பள்ளி மாணவிகள்! - ‘‘என் மக சாவுக்கு நீதி கிடைக்கணும்!’’

இந்த விவகாரம் பற்றி மாணவர்கள், காவல்துறை, சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பிலும் விசாரித்தோம்... ‘‘மாணவியின் செல்போனில் 26 நம்பர்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கு. வாட்ஸ்அப் உரையாடல்கள் அழிக்கப்பட்டிருக்கு. மாணவி படித்த பள்ளி நிர்வாகம், முக்கியப் பொறுப்பிலிருந்த ஆசிரியர் ஒருவரை டிஸ்மிஸ் செஞ்சுருக்கு. பள்ளி கேன்டீன்லவெச்சு ஒரு பெண் ஆசிரியை, அந்த மாணவியைக் கடுமையா திட்டியிருக்காங்க’’ என்கிறார்கள் பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர். கரூரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் சண்முகமோ, “காவல்துறை எதையோ மறைக்குது. இந்த விவகாரத்துல பல சந்தேகங்கள் இருக்கு. அதனால, வழக்கை சி.பி.ஐ விசாரிக்கணும்’’ என்று வருத்தப்பட்டார்.

பள்ளி நிர்வாகம் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘‘மாணவி தற்கொலைக்கு எங்க பள்ளி எந்தவிதத்திலும் காரணமில்லை. நாங்க யாரையும் டிஸ்மிஸ் பண்ணலை’’ என்றார்கள்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவடிவேலுவிடம் கேட்டதற்கு, ‘‘இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரிக்கிறோம். அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்’’ என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு முன்பு இன்ஸ்பெக்டர் கண்ணதாசனிடம் பேசியபோது, ‘‘அந்த மாணவி, கோவையில தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வீடியோவை அடிக்கடி பார்த்திருக்காங்க. கோவை மாணவியின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு, ‘சந்திரமுகி’ பட கேரக்டர்போல மனதளவில் பாதிக்கப்பட்டு, தற்கொலை செஞ்சுருக்கலாம். வேறு எதுவும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை’’ என்றார் அலட்சியமாக!

சுந்தர வடிவேலு
சுந்தர வடிவேலு

தற்கொலை செய்துகொண்ட குழந்தையின் கடைசி நிமிட மனப்போராட்டத்தை சற்றேனும் இந்தச் சமூகம் கவனத்தில்கொள்ள வேண்டும். இது கோவையிலும் கரூரிலும் நடந்த கொடூரங்கள் மட்டுமல்ல... நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகள் இருக் கிறார்கள்... ‘பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’ என்று சொல்லியிருக்கும் அந்தக் குழந்தையின் கடைசி நம்பிக்கையையாவது காப்பாற்ற இந்தச் சமூகமும் அரசும் முன்வர வேண்டும்!

மாணவிகள் மட்டுமல்ல... குழந்தைகளும் தப்பவில்லை!

பள்ளி மாணவிகள் மட்டுமல்ல... சமீபகாலமாக குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களும், அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உலகம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. இதையடுத்து, குழந்தைகளைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுப்பவர்கள், அதைப் பார்ப்பவர்கள், ஷேர் செய்பவர்களை நோக்கித் திரும்பியிருக்கிறது அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு. இது போன்று செய்பவர்களின் இன்டர்நெட் ஐ.பி அட்ரஸைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவரும் எஃபி.பி.ஐ., குற்றவாளிகளைப் பிடிப்பது தொடர்பாக 90 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இவற்றில், இந்தியாவும் அடக்கம்.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 16 அன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்திய சி.பி.ஐ., 83 நபர்களைக் கைதுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் செல்போன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பற்றி டெல்லி சி.பி.ஐ உயரதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை எடுத்து விற்கும் 50 நபர்களைக்கொண்ட நெட்வொர்க்கில், 5,000 பேர் ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் விரைவில் பிடிப்போம்’’ என்றார்கள்.

கார்த்திகேயன், சண்முகவேல் சங்கரன், வன்னிய பெருமாள்
கார்த்திகேயன், சண்முகவேல் சங்கரன், வன்னிய பெருமாள்

2019-ல் மத்திய அரசின் உள்துறையிடமிருந்து தமிழக காவல்துறைக்கு, சிறார் பாலியல் வீடியோக்களைப் பார்க்கும் சுமார் 800 ஐ.பி அட்ரஸ்கள் வந்தன. அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக ரவி இருந்தார். அவரிடம் இந்த விவகாரம் பற்றிப் பேசியபோது, ‘‘உள்துறை அனுப்பிய ஐ.பி அட்ரஸ்களில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை டௌன்லோடு செய்தவர்கள், ஷேர் செய்தவர்கள்தான் அதிகம். அது தொடர்பாக 16 பேரைக் கைதுசெய்தோம். திருச்சியில் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிலர் வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்’’ என்றார்.

“நமது காவல்துறையின் கால தாமதத்தால் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள்” என்று கவலையுடன் பேசிய ‘சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா’வின் தலைவரான வழக்கறிஞர் கார்த்திகேயன், ‘‘சைபர் க்ரைம் குற்றவாளிகளைப் பிடிப்பதில் நம்மூரில் காலவிரயம் செய்கிறார்கள். இதனால், முக்கியமான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அலுவலகத்திலிருந்து ஐ.பி அட்ரஸ்கள் டெல்லிக்கு வந்து, அங்கிருந்து சென்னை டி.ஜி.பி அலுவலகம் வழியாகக் காவல் நிலையங்களுக்குச் சென்று சேர்வதற்கே பல மாதங்கள் ஆகின்றன. காவல் நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடிப் போகும்போது, சம்பந்தப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் மாற்றப்பட்டிருக்கும். இந்தக் காலவிரயத்தை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர் சண்முகவேல் சங்கரன் நம்மிடம், ‘‘குழந்தைகள் பாலியல் வீடியோக்களைப் பார்க்கும் குற்றவாளி, மனநிலை பாதிக்கப்பட்டவனாகத்தான் இருப்பான். அவன் சிறைத் தண்டனை பெற்றுத் திரும்பினாலும் மீண்டும் குற்றங்களைத் தொடர்வான். அதனால்தான், அமெரிக்காவில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபர் பற்றிய முழு விவரங்களை அரசு வலைதளங்களில் வெளியிட்டு, அந்த நபரை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் காவல்துறைக்குத் தகவல் சொல்லாமல் எங்கும் செல்ல முடியாது. தமிழகத்திலும் இதே பாணியைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், இது போன்ற குற்றங்கள் குறையும்’’ என்றார்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் போலீஸ் பிரிவின் கூடுதல்

டி.ஜி.பி வன்னிய பெருமாளிடம் பேசினோம்... ‘‘குழந்தைகள், பெண்கள் பிரச்னைகள் தொடர்பாக எங்கள் கன்ட்ரோல் ரூமுக்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் அழைப்புகள் வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மூலம் மாதத்துக்கு 150 புகார்கள் வருகின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், 17,478 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளோம். அவற்றில், 1,196 வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது. விசாரணை அளவில் 2,094 வழக்குகளும், நீதிமன்றத்தில் 7,232 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தால் 4,843 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சைல்டு வெல்ஃபேர் அதிகாரிகள் 1,542 பேர் இருக்கிறார்கள். பெண்கள் உதவி டெஸ்க் அதிகாரிகள் 800 பேர் இருக்கிறார்கள். எங்களுடன் மற்ற அரசுத்துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் இணைந்து பணிசெய்யும் ஒன் ஸ்டாப் சென்டர்கள் 32 இடங்களில் உள்ளன. எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார்.

இத்தனை பேர் இருந்தும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; மாறாக அதிகரித்திருக்கிறது என்பதுதான் வேதனை!

சினிமா ஆசைகாட்டி தூண்டில்... தலைமறைவான அ.ம.மு.க பிரமுகர்!

கரூர் விவகாரம் கனன்றுகொண்டிருக்கும்போதே திண்டுக்கல் மாவட்டம் நர்ஸிங் கல்லூரி ஒன்றிலிருந்து அடுத்த அதிர்ச்சி புகார் வந்திருக்கிறது. கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு விடுதிக் காப்பாளர் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் நீள்கிறது அந்த பகீர் புகார். இதையடுத்து ஜோதிமுருகன் தலைமறைவாகியிருக்கிறார்.

அர்ச்சனா,ஜோதிமுருகன்
அர்ச்சனா,ஜோதிமுருகன்

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜோதிமுருகன் திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் ராமபிரபா, சுரபி, கபி ஆகிய பெயர்களில் நர்ஸிங் உள்ளிட்ட கல்லூரிகளை நடத்திவருகிறார். அ.ம.மு.க கட்சிப் பிரமுகரான இவர், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜோதிமுருகன் குறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘ஆரம்பத்துல பேக்கரி நடத்துன ஜோதிமுருகன் கேட்டரிங் காலேஜ், நர்ஸிங் காலேஜ், ஸ்கூல்னு வரிசையா கல்வி நிறுவனங்களைத் தொடங்குனாரு. ஏற்கெனவே அவரோட நர்சரி பள்ளியில, குழந்தைகள் மர்மமான முறையில் இறந்திருக்காங்க. 2011-ல் பாலியல் தொல்லை காரணமா மூணு நர்ஸிங் மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதால, ஜோதிமுருகன் கைதாகி வெளியே வந்தார். இப்ப, மறுபடியும் மாணவிகள்கிட்ட அத்துமீறியிருக்காரு. இதைக் கண்டிச்சு நர்ஸிங் கல்லூரி மாணவிகள் சாலை மறியல்ல ஈடுபட்ட பிறகே, இந்த விவகாரம் வெளியே வந்திருக்கு’’ என்றார்கள். மாணவிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து விடுதியின் காப்பாளர் அர்ச்சனா கைதுசெய்யப் பட்டிருக்கிறார். ஜோதிமுருகன் தலைமறைவான நிலையில், அவரின் தந்தை மற்றும் நண்பர்கள் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

தொடரும் பாலியல் குற்றங்கள்... பலியாகும் பள்ளி மாணவிகள்! - ‘‘என் மக சாவுக்கு நீதி கிடைக்கணும்!’’

நர்ஸிங் மாணவிகள் சிலரிடம் பேசினோம்... ‘‘ஜோதிமுருகன் அடிக்கடி ராத்திரி 9 மணிக்கு மேல மீட்டிங்னு சொல்லிக்கிட்டு ஹாஸ்டலுக்கு வருவார். அப்போ விடுதிக் காப்பாளர் அர்ச்சனா, தாளாளருடன் செல்ஃபி எடுத்துக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவார். சில நேரத்துல மாணவிகளைத் தன்னோட கார்ல அழைச்சுக்கிட்டுப் போயிருக்காரு. இவரோட தொந்தரவு பொறுக்க முடியாம நிறைய மாணவிகள் கல்லூரியிலிருந்து வெளியேறிட்டாங்க. சினிமாதுறையில் நிறைய பேரைத் தெரியும்னு சொல்வார். ‘சினிமாவுல நடிக்கவெக்கிறேன்’னு சொல்லியும் மாணவிகளிடம் தூண்டில் போட்டிருக்காரு’’ என்றார்கள் ஆத்திரத்துடன்.

திண்டுக்கல் எஸ்.பி சீனிவாசன் நம்மிடம், ‘‘போக்சோ சட்டத்தின் கீழ் அர்ச்சனா, ஜோதிமுருகன் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அர்ச்சனாவைக் கைதுசெய்துவிட்டோம். ஜோதிமுருகனைத் தேடிவருகிறோம்’’ என்றார் சுருக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு