அலசல்
சமூகம்
Published:Updated:

மது... போதைப்பொருள்... கொலை மிரட்டல்... பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...

விக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
விக்கி

தி.மு.க பிரமுகர் மகன் போக்சோவில் கைது!

‘நடந்ததை வெளியே சொன்னால், உன் அப்பா அம்மா இருவரையும் கொன்றுவிடுவேன்’ என்று மாணவியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க பிரமுகரின் மகன் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறான்.

சென்னை புறநகர்ப் பகுதியில் வசித்துவரும் கொத்தனார் ஒருவரின் மூத்த மகளான சுதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அந்தப் பகுதியிலிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளிக்குச் சென்ற சுதா திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். பதறிப்போன வகுப்பாசிரியை, சுதாவுக்கு முதலுதவி செய்து, அவரைத் தனியே அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமைகளை, கண்ணீர்மல்க ஆசிரியையிடம் விவரித்திருக்கிறாள் சுதா.

அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான தி.மு.க பிரமுகர் ஒருவரின் மகனான விக்கி, மாணவியுடன் நட்பாகப் பழகிவந்திருக்கிறான். இந்த நிலையில், தன் நண்பனின் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்ற விக்கி, மதுபானத்தில் போதைப்பொருள் ஒன்றைக் கலந்துகொடுத்து, மயக்கத்திலிருந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுதாவின் அம்மா அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் விக்கி.

மது... போதைப்பொருள்... கொலை மிரட்டல்... பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...

இது குறித்து சேலையூர் போலீஸாரிடம் விசாரித்தோம். ``மாணவியும் விக்கியும் நட்பாகப் பழகிவந்தனர். இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்ற விக்கி, அங்குவைத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறான். இதனால் கோபமடைந்த மாணவி, விக்கியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த விக்கி சுதாவைத் தொடர்ந்து மிரட்டிப் பணியவைத்திருக்கிறான். மீண்டும் மாணவியைத் தன் நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற விக்கி, அங்குவைத்து மதுவுடன் போதை பவுடர் ஒன்றைக் கலந்துகொடுத்து மாணவியைக் குடிக்கவைத்திருக்கிறான். மாணவி அரை மயக்கத்துக்குச் சென்ற நிலையில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இந்த நிலையில்தான் மாணவி கர்ப்பமடைந்த விவரம் வெளியில் தெரியவந்திருக்கிறது. தற்போது விக்கியைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

மாணவி சுதாவின் அப்பா நம்மிடம், “நாங்கள் போலீஸில் புகாரளித்ததற்காக விக்கியின் தந்தையான தி.மு.க பிரமுகரும், அவரின் குடும்பத்தினரும் என்னை அடித்து உதைத்தனர். அதனால் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு வந்துவிட்டோம். இருந்தும், பல வகைகளில் அவர்கள் எங்களுக்குத் தொல்லை கொடுத்துவருகிறார்கள். பயத்தின் காரணமாக என் மகளைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறோம்” என்றார்.