அரசியல்
Published:Updated:

துப்பாக்கி... வாக்கி டாக்கி... போலீஸ் வேடம்... கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரர்கள்!

பாலியல் வன்கொடுமை!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் வன்கொடுமை!

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுமே, தங்களை மிரட்டிய இளைஞர்கள் ‘வாக்கி டாக்கி’ வைத்திருந்ததாகத் தெரிவித்ததால், ‘வாக்கி டாக்கி’ பயன்படுத்துபவர்களின் விவரங்களைச் சேகரித்தது போலீஸ்.

தனிமையிலிருக்கும் காதல் ஜோடிகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்வதோடு, பணம், செல்போன், நகைகளைப் பறித்த ரெளடியை, சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்திருக்கிறது போலீஸ். விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல்கள் நம்மை மிரளவைக்கின்றன!

பாலியல் வன்கொடுமை!

11.12.2022-ம் தேதி இரவு 11 மணி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதி அருகே, 20 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆண் நண்பரின் பைக்கில் வந்திறங்கினார். நண்பருக்கு `Bye’ சொல்லிவிட்டு, விடுதியை நோக்கி நடந்த அந்தப் பெண்ணை வழிமறித்திருக்கிறார்கள் இரு இளைஞர்கள். “இந்த நேரத்துல தனியா எங்க போற?” என்று மிரட்டலாகக் கேட்ட அவர்கள், “உன்மீது எங்களுக்குச் சந்தேகமிருக்கிறது... ஸ்டேஷனுக்கு வா” என்று அதட்டியிருக்கிறார்கள். `போலீஸ்’ என்று எழுதப்பட்ட பல்சர் பைக், கையில் வாக்கி டாக்கி, ஹேர்கட்டிங் எல்லாவற்றையும் பார்த்து பயந்துபோயிருக்கிறார் அந்தப் பெண். பைக்கை ஓட்டுபவனின் பின்னால் அந்தப் பெண்ணை உட்காரவைத்து, அதற்குப் பின்னால் இன்னொரு இளைஞன் அமர்ந்திருக்கிறான். பெண்ணின் போனையும் பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கி... வாக்கி டாக்கி... போலீஸ் வேடம்... கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரர்கள்!

ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று உணர்ந்த அந்தப் பெண் கத்த முயல்கையில், பின்னாலிருப்பவன் கத்தியால் முதுகில் அழுத்த, அடுத்த சில நிமிடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக் நிறுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு கொடூரர்களும் கத்திமுனையில், அந்தப் பெண்ணை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். “வெளியே சொன்னால்...” என்ற மிரட்டலுக்குப் பிறகு, மீண்டும் அந்தப் பெண்ணை விடுதி அருகிலேயே இறக்கி விட்டுவிட்டு சாகவாசமாகத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிறகே அவர், ‘காவலன் செயலி’ மூலம் போலீஸ் உதவியைக் கேட்டிருக்கிறார். பிறகு போலீஸ் உதவியுடன், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனக்கு நடந்த கொடுமைகளையெல்லாம் கண்ணீர்மல்க, புகாராகக் கொடுத்தார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தும், அவர்கள் சிக்கவில்லை!

அடுத்த சம்பவம்!

சரியாக ஒரு மாதம் கழித்து இன்னொரு சம்பவம்... பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், போலீஸ் எனக் கூறி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 12.1.2023-ம் தேதி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார் 21 வயது பெண் ஒருவர். இது ஒரு தொடர் குற்றம் என்பதுடன், குற்றவாளிகள் போலீஸ் பெயரைச் சொல்லியே அதில் ஈடுபடுகிறார்கள் என்பதால், பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தியது காவல்துறை.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுமே, தங்களை மிரட்டிய இளைஞர்கள் ‘வாக்கி டாக்கி’ வைத்திருந்ததாகத் தெரிவித்ததால், ‘வாக்கி டாக்கி’ பயன்படுத்துபவர்களின் விவரங்களைச் சேகரித்தது போலீஸ். அதில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. குற்றவாளிகள் பயன்படுத்திய பைக்கின் பதிவு எண்களை வைத்து விசாரித்தபோது, அவை திருடப்பட்ட வாகனங்கள் எனத் தெரியவந்தது. இனிமேலும் விசாரித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை என, குற்றவாளிகளைப் பொறிவைத்துப் பிடிக்க முடிவுசெய்தது காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்.

துப்பாக்கி... வாக்கி டாக்கி... போலீஸ் வேடம்... கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரர்கள்!

காதலர்கள் வேடத்தில் காவலர்கள்!

அதன் பிறகு நடந்தது என்ன எனத் தனிப்படை போலீஸாரிடம் கேட்டோம். ``அடுத்தடுத்து ஒரே மாதிரியான பாலியல் வன்கொடுமைப் புகார்கள் வந்ததால், குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ‘புழுவை தூண்டிலில்வைத்து, மீனைப் பிடிப்பதுபோல போலீஸாரையே மஃப்டியில் ஜோடியைப்போல நடிக்கவைத்து குற்றவாளிகளைப் பிடிக்கலாம்’ என்ற ஐடியாவை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார். அந்தத் திட்டத்தின்படி, கடந்த 13-ம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூர் பை-பாஸில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக் ஒன்றை நிறுத்திவிட்டு, ஆண், பெண் காவலர்கள் இருவர் சாதாரண உடையில் காதலர்கள்போல வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்ததைப்போலவே, இரண்டு இளைஞர்கள் போலீஸ் மிடுக்கோடு இவர்களிடம் விசாரிப்பதுபோல மிரட்ட ஆரம்பித்தார்கள். அப்போது, ஏற்கெனவே தட்டச்சு செய்துவைத்திருந்த ‘Come’ என்ற மெசேஜை, தயாராக இருந்த எங்களுக்குத் தட்டிவிட்டார் பெண் காவலர்.அடுத்த கணமே இரு திசையிலிருந்தும் அங்கே பாய்ந்து சென்றோம்.

எங்களைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றோம். விசாரணையில், ஒருவன் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நாகா என்கிற நாகராஜ் (31) என்பதும், இன்னொருவன் நாகாவின் உறவினர் பிரகாஷ் (31) என்பதும் தெரியவந்தது. இதில் நாகராஜ் மீது திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், செய்யாறு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ரெளடிப் பட்டியலில் இருப்பவன் என்பதும் தெரியவந்தது.

துப்பாக்கிச்சூடு ஏன்?

இவர்களிடம் விசாரித்தபோது, தங்களது இன்னொரு பைக்கை பாலசெட்டிசத்திரம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் நிறுத்திவைத்திருப்பதாகச் சொன்னார்கள். அந்த பைக்கை மீட்கவும், கள விசாரணைக்காகவும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு உடனே அங்கு சென்றோம். பைக் சாவியை எடுப்பதுபோல, டேங்க் கவரிலிருந்து துப்பாக்கியை எடுத்த நாகா மின்னல் வேகத்தில் போலீஸாரை நோக்கி அதை நீட்ட, ஒரு கணம் திகைத்த போலீஸார் அது டம்மி துப்பாக்கியாக இருக்கலாம் என அவனை நெருங்க முயன்றனர். உடனே வானத்தை நோக்கி இரண்டு ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டான். இந்த நேரத்தில் அங்கிருந்து பிரகாஷ் தப்பியோட, பின்னாலேயே தானும் தப்பியோடுவதற்காக, தனிப்படை பெண் இன்ஸ்பெக்டரை நோக்கித் துப்பாக்கியைக் காட்டினான்.

சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து நாகாவின் காலில் சுட்டார். அந்தக் குண்டு அவனின் முழுங்காலைத் துளைத்ததும் அவன் சுருண்டு விழுந்தான். தப்பி ஓடிய பிரகாஷுக்கும், தவறி விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது. இப்போது அவர்கள் இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்” என்றனர்.

நாகராஜ் - பிரகாஷ்
நாகராஜ் - பிரகாஷ்

துப்பாக்கி, அரிவாள், கத்தி, லத்தி..

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ரெளடி நாகாவும் பிரகாஷும் கடந்த சில ஆண்டுகளாகவே இதே தொழிலாக இருந்து வந்திருக்கிறார்கள். பை-பாஸ் சாலையில் மறைவிடத்தில் காதல் என்ற பெயரில் எல்லை மீறும் ஜோடிகளே இவர்களது இலக்கு. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் என்பதால், நைட் டூட்டி முடித்துவிட்டு வரும் சில பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களோடு பைக்கில் வருவது வழக்கம். அவர்களைக் குறிவைத்து நாகாவும் பிரகாஷும் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ஒரு வழிப்பறி நடந்திருக்கிறது. ஒருசில பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்கள். யார் மீது கைவைத்தால் புகாராகாது என்று கணித்தே எல்லா காரியங்களையும் செய்திருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் பெண் விஷயத்தில் இவர்களது கணிப்பு தவறாகிவிட்டது.

கைதான இருவரிடமிருந்தும் துப்பாக்கி, அரிவாள், கத்தி, பொம்மை வாக்கி டாக்கி, லத்தி, திருட்டு பைக்குகள், நம்பர் பிளேட் கட்டர், மிளகாய்ப்பொடி, சாவி, இரும்பு ராடு, கையுறை, முகமூடி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தே துப்பாக்கியை வாங்கியதாக நாகா, விசாரணையில் கூறியிருக்கிறான். கைதான இருவருமே திருமணமானவர்கள். எட்டாம் வகுப்பு வரை படித்த இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாகக் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். அவர்களின் வகுப்புத் தோழர்கள் சிலர் மாடு மேய்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் இப்படி ஓரமாக ஒதுங்கும் காதல் ஜோடிகள் குறித்துத் தகவல் கொடுத்து இவர்களுக்கு உதவியிருக்கிறார்கள். அது குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றார்.

இதே போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், ஆனால் போலீஸில் புகாராவதில்லை என்றும் சொல்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். உடனடித் தேவை அந்தப் பகுதியில் கூடுதல் ரோந்து!