சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை

சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் சந்திரசேகர், மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக வந்த புகாரையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவக் கல்லூரியில், உதவிப் பேராசிரியர் மருத்துவர் சந்திரசேகர் என்பவர், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் தனியாக இருக்கும் மாணவிகளிடம் சந்திரசேகர் அத்துமீறியிருக்கிறார். இது குறித்து எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் மாணவிகள் தவித்துவந்திருக்கின்றனர். இந்தநிலையில், அறுவை சிகிச்சை வகுப்பிலிருந்த மாணவிகளிடம் வெளிப்படையாக சந்திரசேகர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில், மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி டீனிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் சந்திரசேகர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
மாணவிகளிடம் பலகட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சந்திரசேகர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி தனது வீட்டுக்கு அருகிலுள்ள அண்ணாநகர் அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் பெற்று சென்றிருக்கிறாராம்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், ``உதவிப் பேராசிரியர் சந்திரசேகர், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டனாகப் பணியாற்றிய காலகட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரைத் தாக்கியிருக்கிறார். அந்த விவகாரத்தை கல்லூரி நிர்வாகம் பேசி முடித்துவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதே அவருக்கு வழக்கமாக இருந்தது. கொரோனா காலகட்டத்தில் சர்ச்சையில் சிக்கிய சந்திரசேகர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம், இடமாறுதலை ரத்து செய்துவிட்டு பந்தாவாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வந்தார். அவர் மருத்துவர்கள் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துவருகிறார். மாணவிகள் தைரியமாக குற்றம் சாட்டிய பிறகு இடமாறுதல் செய்யப்பட்டார். ஆனால் இம்முறையும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டின் அருகிலேயே இடம் மாறியிருக்கிறார். பாலியல் சர்ச்சையில் சந்திரசேகர் சிக்குவது இது முதன்முறையல்ல" என்றனர்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினோம். ``சில மாணவிகள் உதவிப் பேராசிரியர் சந்திரசேகரன் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக, சுகாதாரத்துறைச் செயலாளருக்குப் புகார் அனுப்பியுள்ளனர். அந்தப் புகாரை விசாரித்த செயலாளர், மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், ஒன்பது பெண் உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஆண் உறுப்பினர்கள் கொண்ட 11 நபர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், தற்போது அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
இந்த விசாரணை குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் பேசினோம். ``வந்திருந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் நடைபெற்ற விசாரணையைக் கொண்டு அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணை முடிவுகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இது சம்பந்தமாகச் மருத்துவர் சந்திரசேகரனைத் தொடர்புகொண்டோம், ``கடந்த பிப்ரவரி மாதம் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். விசாரணையில், சில மாணவிகள் என்மீது குற்றம் சுமத்தியிருப்பதாகவும், அதற்காக விளக்கமும் கேட்டார்கள் நான் அனைத்து விளக்கங்களையும் அவர்களிடத்தில் கூறினேன். இவர்கள் கூறும் பாலியல் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. அங்கு படிக்கும் மாணவிகள் என் குழந்தைகள்போல. ஸ்டான்லி மருத்துவமனையில் உயர்பதவியில் இருப்பவர்களில் என்னைப் பிடிக்காத சிலர் எனக்கு எதிராக மாணவர்களை திசைதிருப்பிவருகிறார்கள். புகாரில் தெரிவித்ததுபோல எந்தக் குற்றமும் நடைபெறவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றிவருகிறேன். இப்படி உண்மையில்லாத குற்றங்களை என் மாணவர்கள் மூலமாகவே என்மீது சுமத்தி என் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவருகின்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்" என்று கூறினார்.
இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு விசாரணைகளில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பித்துவந்தவர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த முறையும் விசாரணையிலிருந்து அவரைத் தப்பிக்கவிடாமல் அவர் செய்த தவறுகளுக்கு தக்க தண்டனையை சுகாதாரத்துறையும், தமிழக அரசும் பெற்றுத் தர வேண்டும் என்பதே அரசு மருத்துவ வட்டாரங்களின் வேண்டுகோளாக இருக்கிறது.