Published:Updated:

`இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கட்டாயக் கருக்கலைப்பு!’ - சர்ச்சையில் பளுகல் எஸ்.ஐ

Representational Image
Representational Image

போலீஸிடம் மோதாமல் பணம் வாங்கிக்கொண்டு போ என்று மிரட்டியதாக இளம் பெண் பாலியல் வழக்கில் நீதி கேட்டு போராட்டம் நடத்தும் முன்னாள் எம்.எல்.ஏ லீமா றோஸ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவர், திருவனந்தபுரத்தில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி இளம் பெண்ணிடம் இருந்து பணம் பறித்து ஏமாற்றியதாகப் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பற்றி பளுகல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் விசாரணை செய்துள்ளார். இதில், இளம் பெண்ணுக்கும் எஸ்.ஐ-க்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தனக்கு வசிக்க வீடு இல்லாமல் தவிப்பதாக இளம்பெண் கூறியிருக்கிறார். எஸ்.ஐ தான் குடியிருக்கும் பகுதியில் வீடு ஏற்பாடு செய்து தங்க வைத்துள்ளார். இதற்கிடையில் புகார் சம்பந்தமாகப் பேச வேண்டும் எனக் கூறி குடியிருப்பின் மாடிக்கு பெண்ணை அழைத்துள்ளார் எஸ்.ஐ அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். இதுபற்றி எஸ்.ஐ-யிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். கருவை கலைத்துவிடும்படி எஸ்.ஐ வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லையாம். இதையடுத்து சிகிச்சைக்கு எனக் கூறி குலசேகரம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகக் கருக்கலைப்பு செய்ய முயன்றதாகத் தெரிகிறது. உடனே, இளம் பெண் கூச்சல் போட்டதால் அப்பகுதி மக்கள் அங்கு கூடியுள்ளனர். இதையடுத்து எஸ்.ஐ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த மருத்துவமனை திருவட்டார் போலீஸ் லிமிட்டில் வருவதால் போலீஸார் அங்கு வந்து இளம் பெண்ணை ஆட்டோவில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
போலீஸைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் இளம் பெண்ணுக்கு உதவுவதாக வழக்கறிஞர் ஒருவர் சென்றுள்ளார். அவர் அந்தப் பெண்ணிடம் இருந்த ஸ்கேன் சான்று, மொபைல் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சில நாள்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற இளம்பெண் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில், உதவி ஆய்வாளர் தன்னை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்து, தொடர்ந்து மிரட்டி வருவதாகவும். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து எஸ்.ஐ சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இளம்பெண் சிலரிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அந்த ஆடியோவில் எஸ்.ஐ-யிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ஒருவர் பேசியுள்ளார். பணம் குறித்து பேசும்போது ஒரு ஆடியோவில் அமைதியாக இருக்கும் இளம் பெண், மற்றொரு ஆடியோவில் பணம் வேண்டாம் என மறுக்கிறார். இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அந்த இளம் பெண் பலரிடம் நட்பாகப் பழகியுள்ளதாகவும். எஸ்.ஐ சுந்தரலிங்கமும் அந்தப் பெண்ணிடம் பழகியிருக்கிறார். கருவைக் கலைப்பதற்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பு எஸ்.ஐ-க்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் சமரசம் பேசச் சிலர் சென்றுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க எஸ்.ஐ தரப்பு சம்மதித்ததுடன் பணமும் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமரசம் பேசியவர்கள் 60,000 ரூபாயை மட்டும் அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை சுருட்டிவிட்டதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள். இதுதான் அந்தப் பெண் பிரச்னை செய்ய காரணம் எனவும் கூறப்படுகிறது.

நாகர்கோவிலில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்

இந்த விவகாரத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கையில் எடுத்து போராட்டக் களத்தில் குதித்துள்ளது. எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்க வேண்டும் என வலுவாகக் குரல் கொடுத்துவரும் சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ லீமாறோஸ் கூறுகையில், ``அந்த இளம் பெண் பணம் வாங்கியதாகக் கூறுவது பொய். அவர் ஆன்லைனில் புகார் அளித்த பிறகு ரொம்ப டார்ச்சர் கொடுத்தாங்க. `போலீஸிடம் மோதாமல் பணம் வாங்கிக்கொண்டு போ’ என்று மிரட்டியிருக்கிறார்கள். பெண்ணுக்கு அநீதி இழைத்ததற்காக எஸ்.ஐமீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு