Published:Updated:

‘‘சத்தம் போடாமல் பின்னால் வந்து கட்டிப் பிடித்தார்!’’

அழகப்பா பல்கலைக்கழகத்தை அலறவைக்கும் பாலியல் புகார்

பிரீமியம் ஸ்டோரி
‘‘சத்தம் போடாமல் பின்னால் 
வந்து கட்டிப் பிடித்தார்!’’

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத அழகப்பா பல்கலைக்கழகத்தில் அடுத்த சர்ச்சை. ‘‘ஆய்வகத்தில் வேலை செய்துகொண்டிருந்த எனக்கு பேராசிரியரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது’’ என்று இளம்பெண் ஒருவர் புகார் கொடுக்க, வெட்கித் தலைகுனிந்திருக்கிறது அழகப்பா பல்கலைக்கழகம்.

என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் பேசினோம். ‘‘எங்க அம்மா மூன்றரை வருஷமா அழகப்பா யுனிவர்சிட்டியில தான் உதவியாளரா வேலை பார்த்துட்டு இருக்காங்க. நான் பத்தாவதுக்கு மேல படிக்காததால, ஒரு வருஷத்துக்கு முன்னால என்னையும் அங்கேயே வேலைக்குச் சேர்த்து விட்டுட்டாங்க. பாட்டனி லேப்லதான் எனக்கு வேலை. லேப்ல இருக்கிற பொருள்களைச் சுத்தம் பண்றது. புரஃபஸர்ங்க கேக்குற பொருள்களை எடுத்துத் தர்றதுன்னு நான்பாட்டுக்கு என் வேலையைப் பாத்துகிட்டு இருப்பேன். ஆரம்பத்துலயிருந்து புரஃபஸர் ஆறுமுகம் சார் ஒரு டைப்பாத்தான் பேசுவார். அதனால நான் அவர்கிட்ட ஒதுங்கியே இருந்தேன்.

அழகப்பா பல்கலைக்கழகம்
அழகப்பா பல்கலைக்கழகம்

கடந்த நவம்பர் 13-ம் தேதி, வழக்கம்போல லேப்ல வேலை பார்த்துகிட்டிருந்தேன். நான் கண்ணாடி குடுவைகளைத் துடைச்சுகிட்டிருந்தப்ப சத்தம் போடாமல் பின்னாடியிருந்து வந்த ஆறுமுகம் சார் என்னைக் கட்டிப்பிடிச்சுட்டார். எனக்கு பகீர்னு ஆகிருச்சு. ‘விடுங்க... விடுங்க’ன்னு கத்திகிட்டு அவரைப் பிடிச்சு தள்ளிவிட்டுட்டு, அழுதுகிட்டே வெளியில ஓடியாந்துட்டேன்.

என் பின்னாலேயே ஓடிவந்து, ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா? இதுக்கெல்லாம் அழலாமா? இதெல்லாம் சாதாரணம். வெளியிலபோய் யார்கிட்டேயும் இதைச் சொல்லிடாத. நான் ஒரு வாத்தியார்... என் மானமே போயிடும்’னு கெஞ்சினார். நான் பதிலேதும் சொல்லாம அழுதுகிட்டே வீட்டுக்குப் போயிட்டேன்.

நடந்த சம்பவத்தை பாட்டனி டிப்பார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி-கிட்ட மறுநாள் புகாரா கொடுத்துட்டேன். இதுபத்தி விசாரிக்கறதுக்காக விசாரணைக் குழு அமைச்சாங்க. ‘ஆறுமுகம்மீது நடவடிக்கை எடுக்குறோம். இதைப்பத்தி வெளியில சொல்ல வேணாம். உனக்கு வேற டிபார்ட்மென்ட்ல வேலை போட்டுத் தர்றோம்’னு பதிவாளர் சொன்னார். ஆனா, ரெண்டு மாசமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எங்களை வேலைக்குச் சேர்த்த கான்ட்ராக்டர் கணேசனிடம் சொன்னதற்கு, ‘யார் யாரை வேணும்னாலும் கட்டிப் பிடிப்பாங்க. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ன்னு அலட்சியமா சொன்னார். அதுமட்டுமல்லாம, ‘இனிமே நீயும் உங்க அம்மாவும் வேலைக்கு வர வேணாம்’னு சொல்லி விரட்டிவிட்டுட்டார். அதுக்குப் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தோம்’’ என்றார் கண்ணீருடன்.

பாலியல் புகார்
பாலியல் புகார்

‘‘மாணவிகளுக்கும் பெண் விரிவுரையாளர்களுக்குமே இதுபோன்ற பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன. வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்பதாலும், வேறு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சத்தாலுமே, அவற்றை வெளியில் யாரும் சொல்வதில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தினால், கண்டிப்பாக உண்மைகள் வெளிவரும்’’ என்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள் சிலர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேராசிரியர் ஆறுமுகத்திடம் பேசியபோது, ‘‘கீழே உடைந்துகிடந்த கண்ணாடிக்குடுவை அந்தப் பெண்ணின் காலில் குத்திவிடக்கூடாது என்பதற்காகத் தள்ளித்தான் விட்டேன். இதை அந்தப் பெண்ணிடமும், பெண்ணின் அம்மாவிடமும் விளக்கமாகச் சொல்லிவிட்டேன். இருப்பினும், என்னைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் சிலரின் தூண்டுதலால், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அப்போதே என்மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவிட்டது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து காவல்நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர். இதனை நான் சட்டரீதியாக சந்திக்க உள்ளேன்’’. என்றார்.

 குருமல்லேஷ் பிரபு - ராஜேந்திரன்
குருமல்லேஷ் பிரபு - ராஜேந்திரன்

அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் குருமல்லேஷ் பிரபுவிடம் பேசியபோது, ‘‘அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிண்டிகேட் உறுப்பினர்களை வைத்து விசாரணை நடத்தினோம். ஆறுமுகத்திடம் கேட்டபோது, ‘ஆய்வ கத்தில் உடைந்துகிடந்த கண்ணாடிக் குடுவைத் துண்டுகள் அந்தப் பெண்ணின் காலில் குத்திவிடும் என்பதால், அவரைத் தள்ளித்தான் விட்டேன்’ என்றார். ஒரு பெண்ணை அனுமதியில்லாமல் தொட்டாலே குற்றம்தான். எனவே, பல்கலைக்கழக விதிப்படி அவரை பேராசிரியர் பணியில் இருந்து தற்காலிகமாக மாற்றி, பசுமை வளாகப் பணிக்கு அனுப்பிவிட்டோம். மற்றபடி அந்தப் பெண்ணையும் அவரின் தாயாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லை. அதே இடத்தில் வேலைசெய்தால், தேவையில்லாத சிக்கல் உண்டாகும். எனவே, பல்கலைக்கழகத்திலேயே வேறு இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்ய விருப்பம் இருந்தால், அவர்கள் மீண்டும் பணியைத் தொடரலாம்’’ என்றார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரனிடம் பேசினோம். ‘‘பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகார் வந்த உடனே கமிட்டி அமைத்து விசாரணை செய்யப்பட்டுவருகிறது. விசாரணை முழுமையாக முடிந்த பின் விசாரணை கமிட்டி என்ன முடிவு செய்கிறதோ, அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு