Published:Updated:

2019-ல் தமிழகத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - ஒரு பார்வை!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான குற்றவாளிகள் தப்பித்துவிடுவது கவலையளிப்பதாக உள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகின்றன. 2019-ம் ஆண்டில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உட்பட பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் நிறைய நடந்திருப்பது அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது.

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

கலங்கடித்த குரல்!

2019-ம் ஆண்டின் துவக்கத்திலேயே தமிழகத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். ஒருவன், தான் காதலித்த கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து நிர்வாணப்படுத்தி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அனைவரையும் பதறவைத்தது. இதே கும்பல் வேறு பல இளம்பெண்களையும் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அந்தக் குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பொள்ளாச்சிக் கொடுமையைக் கண்டு தமிழகமே கொந்தளித்து.

காஞ்சிபுரம் கொடுமை 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அந்தப் பாலியல் கும்பலிடமிருந்து தப்பிவந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.

குழந்தை வதை
குழந்தை வதை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணை, வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஒரு கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. அதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு விடுதிக்கு அழைத்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டி, 12 பேர் அவரை, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 7-ம் வகுப்பு மாணவியை வளர்ப்புத் தந்தையே பலாத்காரம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிவகங்கையில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஐந்து மாதங்களாக ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கோவை பன்னிமடை பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த கோவை தொகுதி எம்.பி-யான பி.ஆர்.நடராஜன், ``போதைப் பொருள்கள் அதிகரித்துவருவதுதான் இந்தக் குற்றங்களுக்கு முக்கியக் காரணம்” என்று குற்றம்சாட்டினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மாற்றுத்திறனாளிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உட்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடந்த ஆண்டு தமிழகத்தை அதிரவைத்தது.

அதேபோல, திருச்சி மாவட்டம் புளிவக்குளம் பகுதியில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு தாத்தாவின் கண்காணிப்பில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை ஒரு கும்பல் பல நாள்களாகப் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளது. அதில், அந்தச் சிறுமிக்கு கர்ப்பம் ஏற்பட்டது. இதில், குற்றவாளிகள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் பெரமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தவர் என்பதும் அதிர்ச்சிக்குரியவை.

தேனி மாவட்டத்தில் பூதிபுரத்தைச் சேர்ந்த காதுகேளாத வாய்பேச முடியாத ஏழு வயது சிறுமி, அரண்மனைப்புதூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மனநலப் பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அங்கு, அந்தச் சிறுமி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை ஏழு மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பெரும்பாலானவை வெளியே வருவதில்லை. குடும்ப கௌரவம் போன்ற காரணங்களால் பாதிப்புகளை வெளியே சொல்ல பலர் தயங்குகிறார்கள். காவல்துறையில் புகார் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் ஏற்படுகிறபோது சில சம்பவங்கள் வெளியே வருகின்றன. புகார் தருவதற்கு முன்வந்தாலும் பல நேரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய காவல்துறை முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. காரணம், பணபலமும் அதிகார பலமும் கொண்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உட்பட பல பெரிய மனிதர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், பேராசிரியர் ஒருவரையும் ஆய்வு மாணவர் ஒருவரையும் தவிர வேறு யாருடைய பெயரும் வெளியே வரவில்லை. அதேபோல, பொள்ளாச்சி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நபர்களைத் தாண்டி வேறு பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால், கைதுசெய்யப்பட்ட ஆறு பேரைத் தவிர வேறு யாருடைய பெயரும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது.

``ராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்!" - முப்படைகளின் தலைமைத் தளபதி... யார் இந்த பிபின் ராவத்?

பாலியல் குற்றங்களில் மாற்றுத்திறனாளிப் பெண்கள் பாதிக்கப்பட்டால், அதற்கென உள்ள சிறப்புச் சட்டத்தின் கீழ்தான் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், அந்தச் சட்டத்தின்கீழ் பெரும்பாலும் காவல்துறை வழக்கு பதிவுசெய்வதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் பட்டியலினப் பெண்ணாக இருந்தால், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், காவல்துறையினர் பெரும்பாலும் வேறு பிரிவுகளில்தான் வழக்கு பதிவுசெய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தப் போக்கு, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு தைரியத்தை அளிப்பதாக இருக்கிறது. இதனால், பாதிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யத் தயங்கும் நிலை உள்ளது.

குழந்தை
குழந்தை

பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, குற்றவாளிகளைக் கைது செய்வதும், விரைவாக விசாரித்து 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்வதும்தான் இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்தும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாறாக, பரபரப்பை ஏற்படுத்தும் சில பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மக்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்பைச் சமாளிப்பதற்காக என்கவுன்டரில் குற்றவாளிகளைக் கொலை செய்வது ஒருபோதும் தீர்வாக இருக்காது.