Published:Updated:

பாலியல் அச்சுறுத்தல்; கொலை மிரட்டல்! - வண்டலூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியைக்கு நேர்ந்தது என்ன?

கண்ணீர் மல்க, சோர்வான குரலில் அவர் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

sexual harassment
sexual harassment

``எனக்கு பாலியல் தொந்தரவு தருகிறார்கள்; அடித்துத் துன்புறுத்துகிறார்கள்; தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறார்கள்... என்னைக் காப்பாற்றுங்கள்... ப்ளீஸ் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்!''

சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் முகநூலில் வெளியிட்ட வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment
sexual harassment

சென்னை வண்டலூர், ரத்தின மங்களத்தில் இருக்கிறது தாகூர் மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரி, தாகூர் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் கீழ் 2010-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இங்கே பணிபுரிவதாகக் கூறி பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தன் பெயர் பபீலா என்றும், தான் தாகூர் மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுவதாகவும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். கண்ணீர் மல்க, மிகவும் சோர்வான குரலில் அவர் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

``கடந்த ஒன்றரை வருஷமா தாகூர் மெடிக்கல் காலேஜ்'ல நான் துணைப் பேராசிரியரா இருக்கேன். கல்லூரி ஹாஸ்டல்'லதான் தங்கியிருக்கேன். இங்கே, என்கிட்ட தவறா நடக்க சிலர் முயற்சி செய்றாங்க. பாலியல் ரீதியாக துன்புறுத்துறாங்க. கல்லூரி அட்மின் லஷ்மி காந்தனும் செந்திலும் என்னைத் தாக்கினர். வெங்கட ராமையா என்னப் பத்தி தவறான கதைகளை சித்திரிச்சார். வைஸ் பிரின்ஸ்பல் வெங்கட கிருஷ்ணன் கிட்ட கம்ப்ளெயின்ட் செஞ்சேன். அவர், `வேலையை விட்டு போகச்சொல்லிடுவேன், உன் வாழ்க்கை வீணாகிடும்’னு என்னையவே மிரட்டினார்.

Babila
Babila

அவர் மட்டும் இல்ல, சீனியர் புரொபஸரா கிருஷ்ணவேனின்னு ஒருத்தங்க இருக்காங்க. அவங்க, ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி என்னைக் கீழே தள்ளிவிட்டாங்க. கடந்த ரெண்டு வாரமா என்னை ரூமுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. சாப்பாடு கொடுக்கல, குடிக்கத் தண்ணி இல்ல.

நோயாளி மாதிரி ஆகிட்டேன். மனம் படபடப்பா இருக்கு. என்னை பயமுறுத்துறாங்க. என்னைக் காப்பாத்துங்க. என்னை தற்கொலை செய்யத் தூண்டுறாங்க. எனக்கு நியாயம் வேணும். ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க '' என்பதாக அந்த வீடியோ முடிகிறது.

சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டோம்.

``மாணவர்கள், சீனியர் புரொபஸர்களைவிட என்கிட்டதான் பாடம் சம்பந்தமாக அதிகமாகப் பேச வருவாங்க. சந்தேகம் கேட்பாங்க. மாணவிகள், என்கிட்ட ரொம்ப நெருக்கமாக இருப்பாங்க. அது ஒரு சீனியர் புரொபஸருக்குப் பிடிக்கல. அப்படித்தான் முதலில் பிரச்னை ஆரம்பிச்சது. பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்குறதால அவருக்குன்னு காலேஜ்'ல ஒரு குரூப் இருக்கு. அவர்கள்'ல ஒருத்தர்தான் அட்மின் லஷ்மி காந்தன். அவர், வார்த்தைகள் மூலமாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ச்சியாக என்னைத் தொந்தரவு செஞ்சார்.

கடந்த மாசம், என்னை மிகவும் அசிங்கமாகப் பேசினார். அவருடன் நான் ஸ்டே பண்ணணும்னு வற்புறுத்தினார். நான் மாட்டேன்னு சொன்னவுடனே, அவரும் செந்திலும் சேர்ந்துக்கிட்டு என்னைத் தாக்க முயற்சி செஞ்சாங்க. நான் எப்படியோ தப்பிச்சு என் ரூமுக்கு வந்துட்டேன். அப்போ, எனக்கு கோபமா வந்துச்சு, என்ன செய்றதுன்னு தெரியாததால என் கையை அறுத்துக்கிட்டேன். அந்தச் சம்பவம் டீன் கிட்ட போச்சு. டீன் ஒருவாரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாங்க. நான் ஓகே-ன்னு ரூமுக்கு வந்தேன். வந்த பின்னாடிதான் தெரிஞ்சது என்னை ரூமுக்குள்ள வச்சு, வெளியில பூட்டினது.

மூணு நாள் சாப்பாடு, தண்ணி கொடுக்கல. அப்புறம், நான் சண்டை போட்டதால சனிக்கிழமை கேன்டீன் போறதுக்கு மட்டும் என்னை அனுமதிச்சாங்க. காலேஜ் விட்டு வெளியில போக செக்யூரிட்டி என்னை விட மாட்டேங்கிறாங்க. ரொம்ப டார்ச்சர் செய்றாங்க, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியாததாலதான் ஃபேஸ்புக்'ல வீடீயோ போட்டேன் '' என்றவரிடம், வீட்டில் இது குறித்து தெரிவிக்கவில்லையா என்று கேட்டதற்கு, ''என் தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டார்கள். எனக்கு யாரும் இல்லை'' என்றவர் தொடர்ந்து பேசினார்.

sexual harassment
sexual harassment

“நான்கே.எம்.சி-லதான் யூ.ஜி படிச்சேன். பி.ஜி (எம்.எஸ்) படிக்க அப்ராட்'ல சான்ஸ் கிடச்சது. அங்க படிக்கும்போது, என் சித்திக்கு உடம்பு சரியில்லாததால ஊருக்கு திரும்ப வந்தேன். அப்பதான் சும்மா இருக்கவேணாம்னு இந்த காலேஜ்ல வேலைக்குச் சேர்ந்தேன்'' என்றார்.

காவல் துறையில் புகார் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, ''லோக்கல் போலீஸ் மேனேஜ்மென்ட்கிட்ட காசு வாங்கிட்டு அவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க. நான் டியூட்டிக்கு சரியா போகலைன்னு என் மேல எஃப்.ஐ.ஆர் போடுவேன்னு மிரட்டுறாங்க. கிளாஸுக்கு போகலைன்னு யாராவது எஃப்.ஐ.ஆர் போடுவாங்களா? ஆனா, காசு வாங்கிட்டு அப்டித்தான் பேசுறாங்க.

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி வேண்டாம் என்று சொன்னவருக்கு மிரட்டல்!

என்னை டிரக் அடிக்ட்ன்னு சொல்றாங்க. எம்.எஸ் படிக்குறதுதான் என்னோட ஆம்பிஷன். நான் ஏன் டிரக் அடிக்ட்டா ஆகணும்? அவங்க என்னை துன்புறுத்தினதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு. எம்மேல அவங்க சொல்ற புகாருக்கு அவங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு?

நான் கமிஷனருக்கு மெயில் மூலமாக புகார் செஞ்சேன். டிஎஸ்பி வந்து விசாரணை நடத்தினார். டிஎஸ்பி வந்து சொன்ன பின்னாடி எனக்கு சரியா சாப்பாடு கொடுக்கிறாங்க. அவங்க வரலைன்னா நிச்சயமா என்னைக் கொலை செஞ்சிருப்பாங்க. 30 - ம் தேதி வரை இங்க தங்கச் சொல்லியிருக்காங்க. எனக்கு நீதி வேண்டும்'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

உடனடியாக நாம், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யனைத் தொடர்புகொண்டோம். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று கல்லூரிக்குச் செல்வதாகத் தெரிவித்தார்.

Babila
Babila

இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம்பெற, தாகூர் மருத்துவக் கல்லூரி எண்ணுக்கு அழைத்தோம். அது, பல் மருத்துவக் கல்லூரியோடு தொடர்புடைய சம்பவம், அங்கே அழையுங்கள் என்றனர். அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு, கல்லூரியின் முதல்வரிடம் பேசினோம், ''காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேற்கொண்டு தகவல் எதுவும் தற்போது தெரிவிக்க முடியாது. என்ன தகவல் வேண்டுமென்றாலும் காவல்துறையில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்றார் அவர்.

வழக்கை விசாரிக்கும் மாமல்லபுரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் பேசினோம்.

``மூன்று பேரின்மீது புகார் தெரிவித்தார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். சி.சி.டி.வி ஃபுட்டேஜ் ஏதும் இருக்கிறதா, வேறு ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கிறதா எனப் பார்த்துவருகிறோம். விசாரணை முடிந்ததும் முழுமையான தகவல்களைத் தெரிவிக்கிறோம்'' என்றார் அவர்.

`43 வீடியோக்கள், 20 பக்க புகார், கொலை மிரட்டல்..!’ - பாலியல் வழக்கில் கைதான சுவாமி சின்மயானந்த்