Published:Updated:

10-ம் வகுப்பு படிக்கும் மகளின் தோழிக்குப் பாலியல் தொல்லை! - தஞ்சை அதிமுக பிரமுகர் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் வேல்முருகன், பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது அந்தக் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூரில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் தோழிக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்ததாகப் புகார் வந்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீஸ் அவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
(Representational Image)

தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோயில் செட்டித் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (40). அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைத் தலைவராக உள்ளார். அத்துடன் தனியார் பேட்டரி கம்பெனி ஒன்றில் மேனேஜராகவும் பணிபுரிந்துவருகிறார். இவருடைய 15 வயது மகள் அரசுப் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் வேல்முருகனின் மகளும் தோழிகள்.

இந்தநிலையில் தனது மகள் செல்போனிலிருந்து அவர் அனுப்பவதுபோல் மகளின் தோழிக்கு வேல்முருகன் மெசேஜ் அனுப்பிவந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தன்னுடைய செல்போனிலிருந்தும் ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல்ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை மேற்கொண்டதுடன், வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து, சிறையில் அடைத்தார்.

பாலியல் புகாரளித்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்; பா.ஜ.க பிரமுகரின் மகன்கள் வெறிச்செயல்!

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். `மகளுடன் படிக்கும் தோழி என்றும் பாராமல் வேல்முருகன் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பிவந்திருக்கிறார். மேலும் சில மாதங்களுக்கு முன் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்றதுடன், அவர் மேல் கைபோட்டு செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அப்போது அந்த மாணவியின் பாட்டி வந்துவிட, `என் மகளைப் பார்க்க எப்பமா வர்றே?’ என்று கேட்பதுபோல் கேட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்தும் அந்த மாணவிக்கு மெசேஜ் அனுப்புவதை அவர் நிறுத்தவில்லை. அந்த மாணவி இதை வெளியே சொல்ல பயந்து மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறார். இந்தநிலையில் மகள் தோழியின் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்த்து குடும்பத்துடன் குடிவந்திருக்கிறார். மேலும் ஆபாச மெசேஜ் அனுப்புவதும் எல்லை மீறியிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட வேல்முருகன்
கைதுசெய்யப்பட்ட வேல்முருகன்

ஒருகட்டத்தில் இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி தோழியின் அப்பாவின் செயலை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவை உண்மை என்பது தெரிய வர போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரைச் சிறையில் அடைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தனர். அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் வேல் முருகன் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது அந்தக் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு