Published:Updated:

`கஞ்சா வியாபாரம்; குற்றப் பின்னணி' - துப்பாக்கியுடன் மிரட்டிய டெல்லி இளைஞரின் `பகீர்' பின்னணி

ஷாருக்கான்
ஷாருக்கான்

டெல்லி கலவரத்தில், பணியில் இருந்த காவலரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டெல்லி கலவரத்தின் தொடர்பாக வெளியான ஒரு புகைப்படத்தில், இளைஞர் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் புகைப்படும் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கையில் லத்தியுடன் நிற்கும் காவலரை அந்த இளைஞர் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டினார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து, அவரைத் தேடும் பணியை டெல்லி போலீஸார் மேற்கொண்டனர்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

அவர் பெயர் ஷாருக்கான் என்பது தெரியவந்தது. இணையத்தில் தன்னுடைய புகைப்படம் வெளியான நிலையில், போலீஸாரால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தலைமறைவாக இருந்தார். தற்போது அவரை, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வைத்து டெல்லி போலீஸார் கைதுசெய்துள்ளனர். ஏ.கே.சிங்லே தலைமையிலான டெல்லி க்ரைம் பிரிவு போலீஸார் ஷாருக்கானைக் கைதுசெய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்துவந்துள்ளனர். அவரது குடும்பம் குற்றப் பின்னணி உடைய குடும்பம் என்பது டெல்லி காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

`` `துரோகி’ என வாளைச் சுழற்றினான்; கலவரக்காரர்கள் செய்ததைக் கூறவா?” -அதிர்ச்சி விலகாத டெல்லி மக்கள்

இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், “ இளைஞரின் புகைப்படம் வெளியானதையடுத்து, உள்ளூர் போலீஸாரால் அந்த இளைஞர் குறித்த முழுவிவரமும் தெரியவந்தது. டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தியதால் ஷாருக்கானை உடனடியாகக் கைதுசெய்ய முடியவில்லை. நாங்கள், அவரது வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அந்தக் குடும்பம், 20 வருடங்களுக்கு மேலாக அரவிந்த நகர் பகுதியில் வசித்துவருவது தெரியவந்தது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

யமுனா நகர் பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில்தான் ஷாருக்கான் வழக்கமாக உடற்பயிற்சி செய்வதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்தோம். அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, பெரிதாக எந்தத் தகவலும் தெரியவில்லை. சமூக வலைதளத்தில் ஷாருக் புகைப்படத்தைப் பார்த்தபோது, எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றனர்.

அந்த இளைஞனின் தந்தை கானுக்கு, போதை மருந்து கும்பலுடன் பழக்கம் உள்ளது. இதன்காரணமாக, அவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் அந்த நபர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அந்த இளைஞரின் நெருங்கிய உறவினரான இர்ஃபான், குற்றப் பின்னணி கொண்டவர். இர்ஃபான் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இர்ஃபான் இந்தப்பகுதியில் சேனு பெஹல்வன் ( Chhenu pehalwan) என அறியப்படுகிறார். கடந்தாணு சேனு குரூப்புக்கும் மற்றொரு பிரிவுக்கும் ஏற்பட்ட மோதலில், அந்த எதிரணியின் தலைவனான அப்துல் நஷீரை காலி செய்துள்ளனர். இதன் காரணமாக, இர்ஃபான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஷாருக்
ஷாருக்

இர்ஃபான் உதவியுடன் ஷாருக் எங்காவது மறைந்திருக்கலாம் என சந்தேகித்தோம். இதையடுத்து, ஏ.கே.சிங்கலா தலைமையில் டெல்லி க்ரைம் பிரிவு போலீஸார் ஒரு குழுவாகவும், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஒரு குழுவாகவும் அந்த இளைஞரைத் தேடி வந்தனர். பரேலியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த ஏ.கே.சிங்கலா தலைமையிலான டெல்லி க்ரைம் பிரிவு போலீஸார், உத்தரப்பிரதேசத்தில் வைத்து ஷாருக்கை கைதுசெய்தனர்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு