Published:Updated:

முன்னாள் மேயரைக் கொன்றது ஏன்?- கைதான தி.மு.க பெண் பிரமுகரின் மகன் அதிர்ச்சி வாக்குமூலம்

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனது தாயின் அரசியல் வளர்ச்சிக்குத் தடையாகச் செயல்பட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன்
உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன்

நெல்லை மாநகராட்சியில், கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மேயராக இருந்தவர், உமா மகேஸ்வரி. தி.மு.க-வைச் சேர்ந்த அவர், தனது கணவருடன் நெல்லையின் புறநகர் பகுதியில் குடியிருந்துவந்தார். கடந்த 23-ம் தேதி, அவரது வீட்டில் நுழைந்த ஒரு கும்பல், அங்கிருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை கொடூரமாகக் கொலை செய்தது. தமிழகத்தை உலுக்கிய இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

கொலை வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் துரிதப்படுத்தினார், நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன். கொலை நடந்த வீடு தனிமையாக இருந்த நிலையில், வீட்டில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லை. அருகில் வீடுகள் இல்லாததால், யாரிடமிருந்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கொலை செய்த நபர்கள், உமா மகேஸ்வரியின் நகைகளை எடுத்துச் சென்றதால், ஆதாயத்துக்காக இந்தக் கொலை நடந்ததா என போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், பீரோவில் இருந்து எந்தப் பொருளையும் எடுக்காததால், வேறு கோணத்தில் விசாரணையைத் தொடர்ந்தார்கள்.

கொலையாளி, மிகவும் சாதுர்யமாக எந்த ஆதாரத்தையும் விட்டுச் செல்லாத நிலையில், தெருவின் கடைசியில் இருந்த ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் ஏதாவது சிக்குகிறதா என போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தி.மு.க கொடி கட்டிய ஸ்கார்பியோ கார் அந்த வழியாகப் பலமுறை சென்றது தெரியவந்தது. அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பேசியவர்களையும் ஆய்வு செய்தார்கள். அப்போது, ஒரு செல்போன் நம்பரில் இருந்து நீண்ட நேரம் பேசியிருப்பது தெரியவந்தது. அந்த நம்பருக்கு உரியவரும் சந்தேகத்துக்கு இடமான காரின் உரிமையாளரும் ஒருவரே என்பதை அறிந்ததும், வழக்கில் முதல் அடியை எடுத்துவைத்த நிம்மதி போலீஸாருக்கு ஏற்பட்டது.

உமா மகேஸ்வரியைக் கொன்றது யார்?- துப்பு கிடைக்காமல் திணறும் நெல்லை போலீஸ்!

காரின் உரிமையாளரான கார்த்திகேயன் என்பவர், தி.மு.க-வின் ஆதிதிராவிட நலக்குழு செயலாளரான சீனியம்மாளின் மகன் என்பது தெரியவந்தது. அதனால், மதுரையில் மகள் வீட்டில் தங்கியிருக்கும் சீனியம்மாளிடம் விசாரித்த போலீஸார், அதன் தொடர்ச்சியாக அவரது மகன் கார்த்திகேயனைக் கைது செய்தனர். இந்த வழக்கு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியதால், வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன்
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன்

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கார்த்திகேயன், பொறியியல் பட்டதாரி. 39 வயதான இவர், போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ’’நெல்லை மாவட்டம் பழங்கோட்டை அருகில் உள்ள செட்டிகுளம் கிராமம் எனது சொந்த ஊர். எனது தாய் சீனியம்மாள், தி.மு.க-வில் செயல்பட்டு வந்தார். அவர் குருவிகுளம் யூனியன் கவுன்சிலராக இருந்துள்ளார். அரசியலில் வளர வேண்டும் என்பதற்காகவே சொந்த ஊரில் இருந்து நெல்லைக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தோம்.

எனது தாயாரின் அரசியல் வாழ்க்கைக்கு தந்தை சன்னாசியும் ஒத்தாசையாக இருந்துவந்தார். அரசியலில் எனது தாயார் பெரிய வளர்ச்சியை அடையவேண்டியவர். ஆனால், உமா மகேஸ்வரியால் அவரது வளர்ச்சி தடைப்பட்டுவிட்டது. அதனால், எனக்கு சிறு வயது முதலாகவே உமா மகேஸ்வரி மீது தீராத கோபம் இருந்துவந்தது. தற்போது, எனது தாய்க்கு வயதாகி விட்டதுடன் நோய்வாய்ப்பட்டதால், மதுரையில் எனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகிறார்.

எனது குடும்பம் அரசியல் வளர்ச்சி அடைய முடியாமல் போனதற்குக் காரணமான உமா மகேஸ்வரியைக் கொலை செய்ய வேண்டும் என்கிற வெறி ஏற்பட்டது. அதற்காக, ஜூலை 23-ம் தேதியைத் தேர்வுசெய்தேன். அன்றைய தினம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் நினைவுதினம் என்பதால், அனைத்து போலீஸாரும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். அதனால், அன்று கொலை செய்ய முடிவெடுத்தேன். எனது காரை அந்தப் பகுதியில் ஓட்டிச்சென்று பார்வையிட்டேன். பின்னர் காரை நிறுத்திவிட்டு நடந்தே உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றேன். வீட்டுக் கதவைத் தட்டியதும் உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் வந்தார். கதவைத் திறக்காமலேயே அவர் என்னைப் பேசி அனுப்ப முயன்றார். ஆனால், ‘''அம்மா உங்களிடம் பேசச் சொன்னார்'' என்று சொன்னதும் கதவைத் திறந்தார்.

உங்களால்தான் என் தாயின் அரசியல் வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் போய்விட்டது என்று ஆத்திரத்துடன் கத்தினேன்.
கைதான கார்த்திகேயன்

வீட்டுக்குள் சென்றதும் உமா மகேஸ்வரி வந்தார். அவரைப் பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. அதனால், ‘உங்களால்தான் என் அம்மாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது’ என்றேன். அவர் கோபமடைந்து வெளியே செல்லுமாறு சொன்னார். ஆத்திரத்தில் இருந்த நான், உமா மகேஸ்வரியைக் கத்தியால் குத்தினேன். அவர் கீழே விழுந்ததும் முருக சங்கரன் கத்தியபடி பெட்ரூமுக்குள் ஓடி கதவைமூட முயன்றார். நானும் உள்ளே நுழைந்து அவரைக் கீழே தள்ளி ஆத்திரம் தீரும்வரை குத்தினேன். பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த உமா மகேஸ்வரியை மீண்டும் பலமுறை குத்திக் கொலைசெய்தேன்.

வீட்டில் இருந்த பணிப்பெண் சிறிது நேரம் கழித்து சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார். அவரை உயிரோடு விட்டால் காட்டிக் கொடுத்து விடுவார் என்பதால், அவரை விரட்டினேன். ஓடிய அவரது முதுகில் இரண்டு முறை ஆழமாகக் குத்தியதும் அவர் குப்புற விழுந்து உயிரைவிட்டார். பின்னர், அனைத்து தடயங்களையும் அழித்தேன். கைரேகை கிடைக்காத வகையில் சுத்தப்படுத்தினேன். நகைக்காக யாரோ கொலை செய்தார்கள் என்பதை போலீஸார் நம்ப வேண்டும் என நம்புவதற்காக பீரோவை உடைத்தேன்.

சிசிடிவி-யில் சிக்கிய நான்கு உருவங்கள்
சிசிடிவி-யில் சிக்கிய நான்கு உருவங்கள்

நகைகளை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறினேன். பின்னர், காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டேன். கொலை செய்த விவரத்தை எனது தாயாரிடம் போனில் சொன்னதும் பயமடைந்த அவர், ‘’இப்படிச் செஞ்சுட்டியே’ என கோபப்பட்டார். அதன் பின்னர், எதுவும் தெரியாததுபோல இருந்து கொண்டேன். ஆனாலும் போலீஸார் பிடித்துவிட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், கூலிப்படை அல்லது உதவிக்கு ஆட்கள் இல்லாமல் தனியாக இந்தக் கொலைகளைச்செய்திருக்க முடியாது என்பதால், உடன் இருந்தவர்கள் யார் யார் என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.