Published:Updated:

`பேனர் வைக்க ரூ.1,000 லஞ்சம் வாங்கியிருக்கிறீர்கள்'- சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு வெளியான ஆடியோ

பேனர் விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த இன்ஜினீயர் சுபஸ்ரீ வழக்கை விசாரிக்கும் பள்ளிக்கரணை சப்-இன்ஸ்பெக்டரும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரும் போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

SUBASREE
SUBASREE

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், இன்ஜினீயர் சுபஸ்ரீ பைக்கில் சென்றார். அப்போது, சாலையின் தடுப்புச் சுவரில் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவின் பேனர், சுபஸ்ரீ பைக்கின் மீது விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சுபஸ்ரீ சிக்கினார். உயிருக்குப்போராடிய அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

BANNER
BANNER

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் லாரி டிரைவர், பேனரை வைத்த அ.தி.மு.க பிரமுகர் பள்ளிக்கரணை ஜெயகோபால் ஆகியோர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிவுசெய்தனர். பேனர் அச்சடித்துக் கொடுத்த அச்சகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. ஒரே மகளை பேனர் விபத்தில் பறிக்கொடுத்த சுபஸ்ரீயின் அப்பா ரவி, அம்மா கீதா ஆகியோரைச் சந்தித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறிவருகின்றனர். அதோடு, பேனர் வைக்க அனைத்து கட்சியினரும் தொண்டர்களுக்கு தடைவிதித்துள்ளனர்.

சுபஸ்ரீ வழக்கை விசாரிக்கும் பள்ளிக்கரணை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவரும் போனில் பேசும் ஆடியோ, இன்று வெளியாகியுள்ளது. அந்த உரையாடல் இதோ!

எஸ்.ஐ: பேனரை முதலில் பார்த்தது யார்?

ஒப்பந்த ஊழியர்: நான்தான் முதலில் பேனரைப் பார்த்தேன்.

எஸ்.ஐ: அப்படியென்றால் மாறன், மதன் பார்க்கவில்லையா? நீ எத்தனை மணிக்கு கோர்ட்டுக்குச் சென்றாய்... சுபஸ்ரீ இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?

ஒப்பந்த ஊழியர்: சுபஸ்ரீ இறந்தது எனக்குத் தெரியாது. கோர்ட்டுக்குச் சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு வந்தேன். அப்போது, இன்ஸ்பெக்டர் எனக்கு போன் செய்து புகார் கொடுக்கக் கூறினார்.

எஸ்.ஐ: நீ மாறி மாறி தகவல்களைச் சொல்கிறாய்.

ஒப்பந்த ஊழியர்: நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.

subhasree
subhasree

எஸ்.ஐ: நீங்கள்தான் வம்பில் மாட்டிக்கொள்ளப்போகிறீர்கள்.

ஒப்பந்த ஊழியர்: மதன் பெர்மிஷனில் இருந்தார். பேனர் வைத்தது அவருக்குத் தெரியாது. ஆபீஸில் நானும் அவரும்தான் இருந்தோம்.

எஸ்.ஐ: புகார் கொடுத்தது மதன் அல்ல, உதவி கமிஷனர்தான் புகார் கொடுத்திருக்கிறார். மதனை வழக்கில் சேர்க்கவா வேண்டாமா?

ஒப்பந்த ஊழியர்: உதவி கமிஷனரிடம் போனில் பேசுங்க சார்.

எஸ்.ஐ: நான் ஏன் பேச வேண்டும்? துரை (மாநகராட்சி உதவி கமிஷனர்) பேச மாட்டாரா, எங்களை மாநகராட்சி ஊழியர் என்று நினைக்கிறாயா? ஜெயகோபாலும் மேகநாதனும் உங்களுக்கு பேனர் வைக்க 1,000 ரூபாய் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதை அப்படியே ரிப்போர்ட் போட்டு கமிஷனருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். நீ போனையும் எடுக்கிறதில்லை. செல்போன் வேற சுவிட்ச் ஆப்ல இருக்கு.

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்: நான் நேரில் வருகிறேன்.

எஸ்.ஐ: நீ என்ன ஐபிஎஸ் ஆபீஸரா? சிசிடிவி புட்டேஜை எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு வழி பண்ணிடுறேன். உதவி கமிஷரை என்னிடம் பேசச் சொல்லு... என்பதோடு ஆடியோ முடிவடைகிறது.

இந்த ஆடியோ வெளியானதும், காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து பரங்கிமலை காவல் சரக போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆடியோ வெளியானது எப்படி? என்று உடனடியாக ரிப்போர்ட் கொடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`அவளின் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது!'- பேனரால் உயிரிழந்த ஐ.டி நிறுவன ஊழியரின் தந்தை கதறல்

இந்த ஆடியோகுறித்து விளக்கம் கேட்க, பள்ளிக்கரணை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகர், ஆடியோவில் பேசும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம். இந்த ஆடியோகுறித்து பரங்கிமலை சரக போலீஸ் உயரதிகாரி ஒருவரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கூறிய அவர்,`` சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், சுபஸ்ரீ வழக்கு தொடர்பாக போனில் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, அவரும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரும் பேசுகின்றனர். இந்த விசாரணை ஆடியோவை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தரப்பிலிருந்து வெளியில் வந்துள்ளது எங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்றார்.