Published:Updated:

`நடுவழியில் திருத்தப்பட்ட குரூப் 4 விடைத்தாள்கள்!' -மூளையாகச் செயல்பட்ட முகப்பேர் ஜெயக்குமார் யார்?

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீஸார், நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட விடைத்தாள்களை நடுவழியில் திருத்திய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வேலை பார்த்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன், ஆவடியைச் சேர்ந்த தரகர் வெங்கட்ராமன், கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ரமேஷ், எரிசக்தித்துறையில் பணியாற்றிய திருக்குமரன், தேர்வு எழுதிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவேல்முருகன், கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜசேகர், ஆவடியைச் சேர்ந்த காலேஷா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுந்தர் ராஜ் ஆகிய 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இந்த வழக்கில், தேர்வு எழுதிய வகையில் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய 99 பேரும் போலீஸாரின் சந்தேக வளையத்தில் உள்ளனர். கைது செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தன் அளித்த தகவலின்படி சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஜெயக்குமாரை போலீஸார் தேடிவருகின்றனர். அவர்தான் மேஜிக் பேனா மூலம் எழுதப்பட்ட விடைத்தாள்களை ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் காரிலேயே வைத்து திருத்தியதாக ஓம்காந்தன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இந்த முறைகேட்டில் ஜெயக்குமார் மட்டும் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவரோடு இன்னும் ஒரு டீம் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் பட்டியலிட்டுள்ளனர். அந்த நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், ``குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு விடைத்தாள்கள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட ஓம்காந்தன், மாணிக்கவேல் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இதில் ஓம்காந்தனிடமிருந்த வாகனத்தின் சாவி, புரோக்கர் ஜெயக்குமாரின் கைக்குச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு தரவரிசை பட்டியல்

எங்களின் சந்தேகம் ஜெயக்குமார் மட்டுமே 99 விடைத்தாள்களை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் திருத்தியிருக்க வாய்ப்பில்லை. அதனால் ஜெயக்குமாருடன் ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு காரில் பயணித்தவர்கள் யார், யார் என்ற விவரங்களைச் சேகரித்துள்ளோம். அதில் தேர்வு எழுதிய சிலரும் உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட கவர்களில் விடைத்தாள்களில் வைக்கப்பட்டிருக்கும். அந்த சீல்களை உடைத்துதான் விடைத்தாள்களை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விடைத்தாள்களுக்கு சீல் வைத்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.

ஓம்காந்தனைத் தவிர டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றும் சிலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக, தேர்வு மையத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்கள் ஏன் விடைத்தாள் பண்டல்கள் கிழிக்கப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டதை கவனிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றும் கறுப்பு ஆடுகளின் உதவியோடுதான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. மேலும் விடைத்தாள்களைத் திருத்த பயிற்சி மையங்களைச் சேர்ந்த சிலர் அந்தக் காரில் வந்துள்ளனர். இந்தத் தகவல் செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
`இது முதல் தடவையல்ல; தொடரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு!' -அதிர்ச்சிப் பின்னணி

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரபலமான கோச்சிங் சென்டரின் கிளைகள் ராமநாதபுரம் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையங்களில் படித்தவர்கள், டி.என்.பி.எஸ்.சி நடத்திய பல தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்றுவந்துள்ளனர். அந்தப் பயிற்சி மையத்திலிருந்து வந்த சிலர், விடைத்தாள்களைத் திருத்தியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தற்போது அந்தப் பயிற்சி மையங்களைச் சேர்ந்த சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இன்னும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகும்" என்கின்றனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஓம்காந்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்களைக் கூறியுள்ளார். அவர் போலீஸாரிடம், `பழனி என்பவர் மூலம் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் எனக்கு அறிமுகமாகினார். அவர்தான், ராமநாதபுரம் மாவட்ட தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்களைக் கொண்டுவரும் பணியைத் தேர்வு செய்யும்படி கூறினார். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டக் கருவூலங்களிலிருந்து விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்தபோதுதான் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. அதற்கு உதவினேன்' என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
`அந்த' 52 விடைத்தாள்கள்; சிக்கிய வட்டாட்சியர்கள்! -ஆய்வில் அதிர்ந்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள்

`யார் இந்த முகப்பேர் ஜெயக்குமார்?' எனப் போலீஸார் விசாரித்தபோது, ``ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சி நடத்திய பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் சிக்கியவர் இவர். ஜாமீனில் வெளியில் வந்தபிறகு குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்' என்றும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமாரை போலீஸார் தேடிவருகின்றனர். இதற்கிடையில், கைதான ஓம்காந்தனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களில் சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஓம்காந்தனுடன் போனில் பேசிய ஆடியோக்களும் வாட்ஸ்அப் மெசேஜ்களும் பண பேரம் நடத்திய விவரங்களும் கிடைத்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு