Published:Updated:

தலையில் ஹெல்மெட்; இரண்டே நிமிட அவகாசம்! - பைக்கைத் திருடி சிசிடிவி-யில் சிக்கிய இளம்பெண்

எஸ்.மகேஷ்

தலையில் ஹெல்மெட்டுடன் நீலநிற சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பைக்கின் உரிமையாளரும் காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

cctv footage
cctv footage

சென்னையை அடுத்த ஆலந்தூரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் (65) இவரின் உறவினர்கள் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள கடையில் வேலை பார்த்துவருகின்றனர். அவர்களைச் சந்திக்க நேற்று மதியம் பைக்கில் சென்றார். கரையான்சாவடியில் உள்ள கடையின் முன்புறம் பிற்பகல் 2.30 மணியளவில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

உறவினர்களிடம் பேசிவிட்டு கடையைவிட்டு வெளியில் வந்தார் நாகூர்மீரான். அப்போது கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர், பைக்கைத் தேடும் பணியில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பைக்கைத் தேடினர். ஆனால், பைக் கிடைக்கவில்லை.

Young lady
Young lady

இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை நாகூர்மீரான் மற்றும் அவரின் உறவினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கடையின் முன்புறம் பைக்கை விட்டுவிட்டு நாகூர் மீரான் உள்ளே செல்வதை இன்னொரு பைக்கில் செல்லும் இளம்பெண் ஒருவர் நோட்டமிட்டபடி செல்கிறார். பிறகு பிற்பகல் 2.32 மணியளவில் அந்தப் பெண், ஹெல்மெட் அணிந்தபடி, கையில் ஹேண்ட் பேக்குடன் அங்கு வருகிறார். நாகூர்மீரானின் பைக்கைக் கண் இமைக்கும் நேரத்தில் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகளைப் பார்த்த நாகூர்மீரானும் அவரின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளுடன் பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு நாகூர்மீரான் சென்றார். தன்னுடைய பைக்கை இளம்பெண் ஒருவர் திருடிச் சென்றதாக அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸாரும் அந்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்தனர். இதையடுத்து, பைக்கைத் திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.

cctv scene
cctv scene

பைக் திருட்டுச் சம்பவம் குறித்துப் பேசும் பூந்தமல்லி போலீஸார், ``கரையான்சாவடிக்கு வந்த நாகூர்மீரான், பைக்கை கடையின் முன் நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் உள்ளே சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட நீலநிற சுடிதார் அணிந்தபெண், எளிதாக பைக்கை திருடிச் சென்றுள்ளார். அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரின் முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை.

இருப்பினும் அவர் சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம், அதே நேரத்தில் இளம்பெண், ஞாபக மறதி காரணமாக தவறுதலாக நாகூர் மீரானின் பைக்கை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, அந்த இளம்பெண் வந்த பைக் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதா எனவும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

cctv footage
cctv footage

காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நாகூர் மீரானிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், `பைக்கிலிருந்து பையை எடுத்தேன். ஆனால், சாவியை எடுக்க மறந்துவிட்டேன். உறவினர்களிடம் பேசிவிட்டு சீக்கிரமாக வெளியில் வந்துவிட்டேன். என் பைக்கை 2 நிமிடத்தில் அந்தப் பெண் திருடிச் சென்றுவிட்டார். சாவியை மட்டும் எடுத்துச் சென்றிருந்தால் என் பைக்கை மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். நாகூர் மீரானுக்கு ஆறுதல் கூறிய போலீஸார், `விரைவில் உங்களின் பைக்கை கண்டுபிடித்துக் கொடுக்கிறோம்' என்று கூறியுள்ளனர்.