Published:Updated:

``10 நாள்கள் காதலித்தோம்; 21-வது நாளில் கணவனை எரித்துக் கொன்னுட்டேன்!”- மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

ஜெ.முருகன்
தே.சிலம்பரசன்

திருமணமான 14 நாள்களிலேயே கணவனை மனைவியே மண்ணெண்ணையை ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள டி.வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி (24). புதுச்சேரியில் பஞ்சர் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். பெற்றோரை இழந்த இவர் தட்சிணாமூர்த்தி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்திருக்கிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முருகவேணி(19) என்ற இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 11-ம் தேதி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

கொலை செய்யப்பட்ட சேதுபதி
கொலை செய்யப்பட்ட சேதுபதி

அதையடுத்து திண்டிவனம் டி.வி.நகர் விரிவாக்கம் பகுதியில் தனியாக ஒரு கூரை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் முருகவேணியின் தாய் குமுதா மற்றும் சகோதரனும் அங்கேயே தங்கியிருந்திருக்கின்றனர். நேற்று முன்தினம் தனது மகனுடன் குமுதா வெளியே சென்றுவிட்ட நிலையில், முருகவேணியும், சேதுபதியும் மட்டுமே வீட்டில் இருந்திருக்கின்றனர்.

அப்போது, இவர்கள் இருந்த கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் வந்து தீயை அணைத்தபோதிலும் முற்றிலுமாக எரிந்துவிட்ட அந்த வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் சேதுபதி மட்டும் சடலமாகக் கிடந்தார்.

சேதுபதி - முருகவேணி திருமணம்
சேதுபதி - முருகவேணி திருமணம்

சிறிது நேரத்தில் அங்கே வந்த முருகவேணி தனது கணவனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதிருக்கிறார். வீடு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்ததால் முன் பகை காரணமாக யாரோ திட்டமிட்டு சேதுபதியைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறை, முருகவேணியையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை செய்தது.

ஒருகட்டத்தில் குடிபோதையில் இருந்த தனது கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்ட முருகவேணி, “சேதுபதிக்கும், எனக்கும் ஒரே பகுதியில்தான் வீடு. இருவரும் 10 நாள்கள் காதலித்தோம். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். அதன்படி கடந்த 11-ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டோம்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த சேதுபதி, புது மனைவி என்றும் பார்க்காமல் திருமணமான 2-வது நாளிலிருந்தே என் மீது சந்தேகப்பட்டு அடித்துக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். சம்பவம் நடந்த அன்றும் குடிபோதையில் என் பழைய ஆண் நண்பர்களுடன் சம்பந்தப்படுத்தி என்னைச் சந்தேகப்பட்டு அடித்ததோடு, என் குடும்பத்தினர் பற்றியும் கேவலமாகப் பேசினார்.

அப்போது இப்படியே பேசிக் கொண்டிருந்தால் உன்னை எரித்துக் கொலை செய்துவிடுவேன் என்று கோபத்தில் கூறினேன். ஆனால் அதன்பிறகும் என்னை அடித்துவிட்டு போதையில் தூங்கிவிட்டார். அப்போது இவன் உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று நினைத்தேன். அதனால் வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, மண்ணெண்ணெயை வீட்டின் கூரை மேல் பரவலாக ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டேன்.

திருமணம்
திருமணம்

தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தபோது என் கணவர் உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். அது விபத்து என்று அனைவரையும் நம்ப வைக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.