Published:Updated:

`ரூ.500 கொடுத்தால் போலி ஆதார் தயார்!' - சிவகங்கைக்கு அதிர்ச்சி கொடுக்கும் 7 பெண் ஏஜென்டுகள்

போலி ஆதார் கார்டு
போலி ஆதார் கார்டு

மாரியம்மன் கோயிலின் அருகில் இருக்கும் ஒரு கணினி மையத்தில்தான் போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் போலி ஆதார் கார்டு தயார் செய்து கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. இதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது டெமோகிராபி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தியர்களின் ஓர் அடையாளச் சான்று போல ஆதார் விளங்குகிறது.

 ஆதார்
ஆதார்

இப்படிப் பல்வேறு விதிகளைக்கொண்ட ஆதார் அட்டைக்கு உச்ச நீதிமன்றம் பல அம்சங்களை வகுத்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகள் பல்வேறு இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் அட்டையைப் போலியாகத் தயார் செய்து சில தனியார் நிறுவனங்கள் லோன் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சிவகங்கை மகளிர் குழுவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலர் பேசுகையில், ``மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் பெறுவதற்கு ஆதார் கார்டு கேட்கின்றனர். ஆனால், ஏற்கெனவே நாம் பல்வேறு இடங்களில் கடன் பெற்றிருந்தால் நமக்குப் பணம் கிடைக்காது. இதை ஆதார் கார்டு மூலமாகவே தனியார் நிறுவனங்கள் கண்டறிகின்றன.

பெண் ஏஜென்டுகள்
பெண் ஏஜென்டுகள்

இதனால் முறைகேடாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் ஊழியர்கள் சிலர் பிரவுசிங் சென்டர்களின் உதவியோடு ஆதார் கார்டில் குறிப்பிட்ட நபர்களின் ஆதார் எண்ணில் தங்களது குழந்தைகளின் ஆதார் எண்ணை மாற்றிக்கொடுக்கின்றனர். ஆதார் கார்டை ஸ்கேன் செய்து சாஃப்ட்வேர்கள் மூலம் பிரவுசிங் சென்டர்களில் மாற்றுகின்றனர்.

இதற்காகப் பல பெண்கள் ஏஜென்ட்டாகச் செயல்படுகின்றனர். மேலும் மதுரை லேக் ஏரியாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். இந்த விஷயம் உரிய நிறுவனத்துக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. எனவே இவ்வாறு போலியாக ஆதார் கார்டு தயார் செய்யும் நபர்களையும் அதற்கான ஏஜென்டுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

போலி ஆதார் ஜெராக்ஸ்
போலி ஆதார் ஜெராக்ஸ்

போலி ஆதார் கார்டு குறித்து சமூக ஆர்வலர் குருசாமி மயில்வாகனம் கூறுகையில், ``சிவகங்கையில் பல தனியார் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் குழுக்களுக்குக் கடன்கள் வழங்குகின்றன. இதற்காகப் போலியாக ஆதார் கார்டுகளைத் தயார் செய்கின்றனர். கமிஷனுக்கு ஆசைப்பட்டுச் செய்கிறார்களா எனவும் தெரியவில்லை. சிவகங்கை மாரியம்மன் கோயிலின் அருகில் இருக்கும் ஒரு கணினி மையத்தில்தான் போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

`போலி ஆதார்; ஆன்லைனில் ஹோட்டல் புக்கிங்!' - மதுரை போலீஸை அதிரவைத்த உஸ்பெகிஸ்தான் இளம்பெண்

ஒரு அட்டைக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையில் வசூலிக்கின்றனர். இதற்கான ஏஜென்டுகளாக 7 பெண்கள் உள்ளனர். அவர்கள்தான் எங்கே கடன் வாங்கியிருந்தாலும் பரவாயில்லை, நான் ஃபைனான்ஸில் கடன் வாங்கித் தருகிறேன் என ஆட்களைக் கூட்டி வருகிறார்கள்.

கலெக்டர் ஜெயகாந்தன்
கலெக்டர் ஜெயகாந்தன்

சிவகங்கை மாவட்டத்தில் சர்வசாதாரணமாக இந்த மோசடி நடக்கிறது. இதனை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

போலி ஆதார் கார்டு தயாரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ``இந்த விவகாரத்தை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார் உறுதியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு