Published:Updated:

`வெட்டாதீங்க; அவனுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு'- `சினிமா' பாணியில் கண்முன் வெட்டப்பட்ட நண்பன்!

சிகிச்சையில் சுதாகர்
சிகிச்சையில் சுதாகர்

டென்னிஸ்ராஜ் போலீஸ் இன்ஃபார்மராக இருந்துகொண்டு தகவல்களை போலீஸுக்குக் கொடுக்கிறார் என நினைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் டென்னிஸ்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் இன்ஃபார்மராகச் செயல்பட்டு நம்மைப் பற்றிய தகவல்களை போலீஸாருக்குத் தெரிவிக்கிறார் என சந்தேகப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

டென்னிஸ் ராஜ்
டென்னிஸ் ராஜ்

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் டென்னிஸ் ராஜ். இவருடைய நண்பர் வழக்கறிஞர் சுதாகர். இருவரும் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் டென்னிஸ்ராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். `வெட்டாதீங்க' என்று இதைத் தடுக்கச் சென்ற அவரது நண்பர் சுதாகரையும் தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்தச் சம்பவம் தஞ்சைப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை தொடர்பாக வழக்கறிஞர் சுதாகர் தரப்பில் விசாரித்தோம், ``எங்க ஊரில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் இரண்டு சக்கர வாகனம் திருடுவது, ஜெயின் பறிப்பில் ஈடுபடுவது போன்ற செயல்களை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். நடுக்காவேரி காவல் நிலையத்தில் இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் தொடர்புடைய குணா என்கிற குணசேகரன் என்பவர்தான் இவர்களுக்குத் தலைவனாகச் செயல்படுகிறான். இந்தக் குணா மீது கொலை வழக்குகள் உள்ளன.

சிகிச்சையில் சுதாகர்
சிகிச்சையில் சுதாகர்

இந்தத் நிலையில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் சிலரை கடந்த வாரத்தில் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதேபோல் அடிக்கடி போலீஸார் வந்து இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதும் வழக்கமாக நடந்து கொண்டிருந்தது. திருட்டில் வரும் பணத்தை வைத்து புதிய இரண்டு சக்கர வாகனங்கள், நவீன மொபைல் போன் வாங்கி ஆடம்பரமாக இருப்பதையும் இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இது தவறு இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனப் பெரியவர்கள் பலர் சொல்லியும் அந்தக் குறிப்பிட்ட இளைஞர்கள் திருந்துவதாக இல்லை. இந்த நிலையில் டென்னிஸ்ராஜ்தான் போலீஸ் இன்ஃபார்மராக இருந்து அவர்களின் செயல்களை போலீஸுக்குக் கொடுக்கிறார் எனப் பல மாதமாகவே அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர்.

சிகிச்சையில் சுதாகர்
சிகிச்சையில் சுதாகர்

இந்தநிலையில்தான் டென்னிஸ்ராஜை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற சுதாகரையும் தலை, கை போன்ற பகுதிகளில் வெட்டினர். சரிந்து கீழே விழுந்த சுதாகர் `வெட்டாதீங்க... அவனுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு. அவன் புள்ளகுட்டிக்காரன்' என ரத்தம் வழிந்த நிலையிலும் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார். ஆனால் அது அந்த ரவுடிகள் காதில் விழவே இல்லை. டென்னிஸ்ராஜை வெட்டிவிட்டு அவர் மூச்சு நின்று விட்டதா எனப் பார்த்து உறுதிசெய்த பிறகே அந்தக் கும்பல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பியிருக்கிறது.

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் வருவது போல் ஒரு நாள் முழுவதும் உடன் இருந்த நண்பன் தன் கண் முன்னாலேயே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்ததைப் பார்த்த சுதாகர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து விலகாமல் மிரட்சியுடன் காணப்படுகிறார். `வெட்டாதீங்கடா விடுங்கடா என எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை' எனக் கூறிக்கொண்டே அடிக்கடி அவர் தன்னையும் அறியாமல் அழுகிறார்.

`ரெண்டு பிள்ளைகளை வெச்சுக்கிட்டு இனி டென்னிஸ்ராஜ் மனைவி எப்படி கஷ்டப்படப் போகுதோ' என நினைச்சாதான் ஈரக்கொலையே நடுங்குது என்றும் புலம்பிக்கொண்டிருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாபா என்பவருடன் வந்த கொலைக் கும்பல்தான் இந்தச் செயலைச் செய்திருக்கிறது.

சிகிச்சையில் சுதாகர்
சிகிச்சையில் சுதாகர்

காவல்துறையினரின் மெத்தனமான செயல்பாடுதான் இதற்குக் காரணம். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை முறையாக கவனித்து சிறையில் அடைக்காததே தொடர்ந்து அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் போலீஸ் இன்ஃபார்மர் என நினைத்துக்கொண்டு ஒரு அப்பாவியை வெட்டிக் கொன்றுவிட்டனர். இப்போதாவது அவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்" என்றனர்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது அவர்களோ, ``டென்னிஸ்ராஜ் காவல் நிலையத்திற்கு வந்து ஆறுமாசம் இருக்கும். அவர் எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவித்தது இல்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நின்றுபோன உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பகுதிக்குப் போட்டியிட வக்கீல் சுதாகர் மனுத் தாக்கல் செய்தார். அந்தக் கோணத்திலும் இதற்கான விசாரணையைச் செய்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு