Published:Updated:

``ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரேங்க்; கோச்சிங் சென்டரில் கீ ஷீட்!"- டி.என்.பி.எஸ்.சி அதிர்ச்சி

டி.என்.பி.எஸ்.சி  அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கும் டி.ஆர்.பி நடத்திய தேர்வு முறைகேட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பணத்தை வாங்கிக்கொண்டு ஆடுமேய்க்கும் தொழிலாளியின் விடைத்தாள் திருத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி-யில் வேலைபார்த்து வந்த ஆவண கிளார்க் ஓம்காந்தன், அரசு ஊழியர்கள் ரமேஷ், திருக்குமரன் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டு கைதான அரசு ஊழியர்கள் 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாரை போலீஸார் தேடிவருகின்றனர். கைதான 9 பேர் அளித்த தகவலின்படி அடுத்தகட்டத்துக்கு இந்த முறைகேடு வழக்கு சென்றுள்ளது.

 ``ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரேங்க்; கோச்சிங் சென்டரில் கீ ஷீட்!"- டி.என்.பி.எஸ்.சி அதிர்ச்சி

டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த தடயங்கள் அடிப்படையில் 3 பேரை பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரித்துவருகின்றனர். அவர்களில் 2 பேர் தேர்வு எழுதி தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள். இன்னொருவர் புரோக்கராக செயல்பட்டவர். விசாரணைக்குப்பிறகு இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் இதற்கு முன்பும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், இந்தளவுக்கு ஸ்கெட்ச் போட்டு தங்களின் திட்டத்தை யாரும் செய்ததில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வு மட்டுமல்லாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் 196 பேர் முறைகேடு செய்தது தெரியவந்தது. அதில் 56 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 ``ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரேங்க்; கோச்சிங் சென்டரில் கீ ஷீட்!"- டி.என்.பி.எஸ்.சி அதிர்ச்சி

அந்த முறைகேடுக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. டி.ஆர்.பி நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை மீண்டும் நடத்துவதாக டி.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைகேடு நடந்துள்ளதால் அந்தத் தேர்வை கவனமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் ஜெயக்குமார், டி.ஆர்.பி தேர்வு முறைகேடு வழக்கிலும் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. ஜாமீனில் வெளியில் வந்த அவர்தான் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களிடமிருந்து பணத்தை வசூலித்ததாகத் தெரியவந்துள்ளது.

மேஜிக் பேனாக்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என தேர்வு எழுதியவர்களுக்கு அவர்தான் வகுப்பும் எடுத்ததாக கைதானவர்கள் போலீஸிடம் கூறியுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள கோச்சிங் சென்டர்களில் உள்ள சிலருக்கும் ஜெயக்குமாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் டி.என்.பி.எஸ்.சி மற்றும் டி.ஆர்.பி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்றனர்.

சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில், ``குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களோடு டி.ஆர்.பி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைது எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக தேர்வு எழுதிய பலர், தங்களின் விடைத்தாள்களைத் திருத்த லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தைப் பெற ஒவ்வொரு கோச்சிங் சென்டர்களிலும் புரோக்கர்கள் போல சிலர் செயல்பட்டுள்ளனர்.

அவர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். குரூப் 4 தேர்வுக்கான கீ ஷீட்டோடுதான் ஜெயக்குமார் தலைமையிலான டீம், சென்னைக்கு வந்த டி.என்.பி.எஸ்.சி வாகனத்தை பின்தொடர்ந்துள்ளது. இந்த டீம், கைக்கு விடைத்தாள் கிடைத்ததும் ஒவ்வொருவரும் பணம் கொடுத்தவர்களின் விடைத்தாள்களை அவசர அவசரமாக திருத்தியுள்ளனர். அவர்கள் சிக்காமலிருக்க ஒவ்வொருவரும் பல பேனாக்களைப் பயன்படுத்தி விடைகளை எழுதியுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி தரவரிசை பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி தரவரிசை பட்டியல்

குரூப் 4 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் ஆடுமேய்க்கும் தொழிலாளி ஒருவர் இடம்பிடித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது 9 லட்சம் ரூபாயை புரோக்கர் ஒருவரிடம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அந்தப் புரோக்கர் தற்போது எங்களின் விசாரணை வளையத்திலிருக்கிறார். தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் மீது சந்தேக ரேகை படிந்துள்ளதால் அவர்களின் பின்னணி குறித்து விசாரித்துவருகிறோம். ஓம்காந்தனைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவர் குறித்த விவரங்களை ரகசியமாக சேகரித்துவருகிறோம்" என்றனர்.

பின் செல்ல