Published:Updated:

`வீட்டில் 65 பவுன், கடையில் 3 கிலோ தங்கம்!' -நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்

கொள்ளை நடந்த நகைக்கடை
கொள்ளை நடந்த நகைக்கடை

`நகைக்கடை சாவியை எடுத்துச் சென்று நகைக்கடையைத் திறந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். எனவே, இது நன்கு தெரிந்த யாரோ நோட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம்' என்கின்றனர் போலீஸார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் பொன் விஜய். இவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் நகைக்கடை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவர் தனது நகைக்கடை சாவி, நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டின் மாடியில் உள்ள பூஜை அறையில் வைப்பது வழக்கம்.

நேற்று இரவு வீட்டில் குடும்பத்தாருடன் தூங்கியவர், இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பூஜை அறையில் இருந்த 65 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த நகைக்கடை சாவியையும் காணாததால் அதிர்ச்சியடைந்தவர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது ஜூவல்லரிக்குச் சென்று பார்த்தார்.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

நகைக்கடையின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் சுமார் மூன்று கிலோ நகைகளைக் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வீடு மற்றும் நகைக்கடைகளில் நடத்திய விசாரணையில், பொன் விஜய் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் அவரது வீட்டு மாடிக் கதவை உடைத்து வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 65 சவரன் நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்திருக்கிறான்.

பின்னர் அங்கிருந்த நகைக்கடை சாவியை எடுத்துச் சென்று நகைக்கடையைத் திறந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். எனவே, நன்கு தெரிந்த யாரோ நோட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

`காய்கறி, மீன் வியாபாரிகள்தான் டார்கெட்!' -அதிகாலை குரங்கு குல்லா கொள்ளையர்களால் கலங்கும் கும்பகோணம்

நகைக்கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் நகைக்கடைக்குள் குரங்கு குல்லா அணிந்த ஒருவர் நகைகளைத் திருடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சியை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளை நடந்த கடை
கொள்ளை நடந்த கடை

கடந்த டிசம்பர் மாதம் இதே பகுதியில் உரிமையாளரின் வீட்டுடன் இணைந்திருந்த நகைக்கடைக்குள் புகுந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அந்தக் கொள்ளையில் ஈடுபட்டது யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில் மீண்டும் அதே ஸ்டைலில் கொள்ளை நடந்திருப்பதால் மார்த்தாண்டம் பகுதி வியாபாரிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பின் செல்ல