Published:Updated:

`என்னை அரிவாளால் வெட்டிட்டு ஓடிடுங்க!’ - பதவிக்காக தனக்கே ஸ்கெட்ச் போட்டுக்கொண்ட அரசியல் பிரமுகர்

வெட்டுக் காயங்களுடன் பகவான் நந்து
வெட்டுக் காயங்களுடன் பகவான் நந்து

பகவான் நந்து அவருடைய டிரைவரை வைத்து, அவரையே அரிவாளால் வெட்டச் சொல்லி நாடகமாடியிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். நேற்றிரவு 9 மணிக்கு இவர் நடந்திவந்த எலெக்ட்ரானிக்ஸ் கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்புகையில், மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் உடலில் 8 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

`இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிலருடன் ஏற்கெனவே பகவான் நந்துவுக்கு முட்டல் மோதல் இருந்திருக்கிறது. அவர்கள்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கக் கூடும்’ என இந்து மக்கள் கட்சியினர் கொதித்துக் கிளம்பினர். இதனால் பெருமாநல்லூர் பகுதியில் இரு மதத்தினரிடையே பிரச்னை வெடிக்கும் சூழல் உருவானது. குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகக் களத்தில் இறங்க, விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிரவைக்கும் வகையில் இருந்திருக்கின்றன.

வெட்டுக் காயங்களுடன் பகவான் நந்து
வெட்டுக் காயங்களுடன் பகவான் நந்து

பகவான் நந்து வெட்டப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து முதலில் பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அந்தக் காட்சிகளில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பகவான் நந்துவின் டிரைவர் ருத்ரமூர்த்தி இருந்திருக்கிறார். ஏதோ முன்பகைக்காக ருத்ரமூர்த்திதான் இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கிறார் என போலீஸார் அவரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ, `என்னை வெட்டுங்கடான்னு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே பகவான் நந்து அண்ணன் தான்’ எனக்கூறி போலீஸாரையே நிலைகுலைய வைத்திருக்கிறார்.

`கட்சியில சேர்றதைப்பத்தி பேசணும்'- பைக்கை நிறுத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகிமீது கொடூர தாக்குதல்

தன்னை வெட்டிவீச எவனாவது ஆள் செட் பண்ணுவானா? என போலீஸாரே குழம்பிப் போயிருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ தெளிவாக, `கட்சியில் நல்ல பதவி கிடைக்கணும். ஊர்ல நமக்குன்னு மாஸ் வரணும் என அண்ணன்தான் அவரை வெட்டச் சொன்னார். முதுகில் லேசா வெட்டிட்டு ஓடிடுங்கடா, மத்ததை நான் பாத்துக்குறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அவரை லேசா வெட்டிட்டு அவர் கையிலயே அரிவாளை கொடுத்துட்டு ஓடிட்டோம். அதைவச்சி அவரே உடம்பில் சில வெட்டுக்களைப் போட்டுக்கிட்டாரு. அவர் சொன்னதால்தான் ஆள் செட் பண்ணி சின்னதா ஒரு சம்பவம் செஞ்சோம். வேற மதத்தைச் சேர்ந்தவங்க மேல பழியைப் போட்டு பிரச்னையை திசை திருப்பிடலாம்னு சொன்னார். கடைசியில இப்படி ஆகிடுச்சி’ என கூறியிருக்கிறார்.

`என்னை அரிவாளால் வெட்டிட்டு ஓடிடுங்க!’ - பதவிக்காக தனக்கே ஸ்கெட்ச் போட்டுக்கொண்ட அரசியல் பிரமுகர்

இதையடுத்து கொலைமுயற்சி என்றிருந்த வழக்கை மாற்றி, ருத்ரமூர்த்தியோடு சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், `சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என அறிக்கை கொடுத்திருக்கிறார்.

அரசியல் பதவிக்காக தன்னை வெட்ட தானே ஆள் செட் செய்த, இந்து மக்கள் கட்சிப் பிரமுகரின் செயல் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`பாப்புலராகணும்னு நெனச்சு, பைக்கை நானே கொளுத்தினேன்!' - திருச்சியில் கைதான இந்து முன்னணிப் பிரமுகர்
அடுத்த கட்டுரைக்கு