Published:Updated:

புதுச்சேரி: `நான் செத்துட்டா நீ பதில் சொல்வியா?' -அரிவாளோடு சுற்றிய ரவுடிகள்; அதிர்ச்சி வீடியோ

வீடியோ காட்சிகள்
வீடியோ காட்சிகள்

அரிவாளுடன் வீதியில் நடந்துசென்ற இரண்டு ரவுடிகள், கொலை செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், அருண். பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் இவர் மீது கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், தனது நண்பர்களுடன் கடந்த ஆண்டு புதுவையை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான வழுதாவூர் பகுதியில் மது அருந்தியுள்ளார்.

வீதியில் நடக்கும் முரளி, சந்துரு
வீதியில் நடக்கும் முரளி, சந்துரு

அப்போது, இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் முரளி கோஷ்டியினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, பின் மோதலில் முடிந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அருண் தனது நண்பர்களுடன் வழுதாவூர் சென்று, முரளி மற்றும் முகிலனின் இருவரது இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.

`ஒரு ரிமாண்ட்டைக்கூட ஒழுங்கா செய்ய முடியல..!' -கால்முறிவிலும் காவலர்களை வசைபாடிய `கஞ்சா' மணி

அரிவாளுடன் வீதியில் நடந்த ரவுடிகள்:

இந்த விவகாரத்தில், இருதரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்றுவந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அருணைக் கொலை செய்ய முடிவெடுத்த சந்துரு மற்றும் முரளி இருவரும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் புதுநகர் பகுதியில் உள்ள அருண் வீட்டின்மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.

கொலை செய்யப்பட்ட முரளி
கொலை செய்யப்பட்ட முரளி

அப்போது, வீட்டிலிருந்த அருணும் அவரது நண்பர்களும் அந்த வெடிகுண்டு வீச்சில் தப்பித்து ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து குடிபோதையில் இருந்த முரளி, சந்துரு இருவரும் தங்களது நண்பர்களுடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அருண் வீடு இருந்த வீதியில் கெத்தாக சுற்றிவந்தனர்.

அதை அறிந்த அருண் மற்றும் அவரது நண்பர்களும் தூரத்தில் இருந்து முரளி மற்றும் சந்துரு மீது கற்களை வீசியிருக்கின்றனர். அதில், முரளி மற்றும் சந்துரு இருவரும் பலத்த காயமடைந்து கீழே விழுந்தனர்.

கொலை செய்யப்பட்ட ரவுடி சந்துரு
கொலை செய்யப்பட்ட ரவுடி சந்துரு

அப்போது அவர்களைச் சுற்றிவளைத்த அருண் தரப்பினர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறித்து சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். அதில், முரளி மற்றும் சந்துரு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பதறவைக்கும் வீடியோ காட்சிகள்:

அதையடுத்து, தப்பிச்சென்ற முக்கியக் குற்றவாளியான அருண் மற்றும் அவரது நண்பர்களான பிரேம்நாத், சிலம்பரசன், செல்வன் ஆகியோரை வில்லியனூர் போலீஸார் கைதுசெய்தனர்.

கொல்லப்பட்ட முரளி மற்றும் சந்துரு
கொல்லப்பட்ட முரளி மற்றும் சந்துரு

இந்நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு முரளி மற்றும் சந்துரு இருவரும் கையில் அரிவாள்களோடு தைரியமாக வீதியில் நடமாடும் வீடியோ காட்சிகளும், பின்னர் அவர்கள் அடிபட்டு கீழே கிடக்கும் காட்சிகளும், எதிரணியினர் கொலை செய்வதற்குத் தயராகும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

”நான் செத்தால் நீ பதில் சொல்வியா ?”

அதில் ஒரு காட்சியில், பலத்த காயங்களுடன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் சந்துரு மற்றும் முரளியை வெட்டுவதற்காக ஒருவர் அரிவாளை எடுக்கிறார். அப்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், வேண்டாமென குரல் கொடுக்கிறார். அதற்கு, கொலை செய்யச் சென்றவர்... “நான் செத்துட்டா நீ பதில் சொல்வியா” என்று கேட்டுவிட்டு வெட்டுவதற்குத் தயாராகிறார்.

Vikatan

அதேபோல அருண் தரப்பு கொலை செய்யத் தயாராகும்போது, அங்கிருந்த அனைவரும் தங்களது செல்போனில் அந்தக் காட்சிகளைப் பதிவுசெய்துகொண்டிருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு