Published:Updated:

`ஹெட்போனின் விலையைக் கேட்டார், வாங்கவில்லை!'- ஆசிரியரை அடித்தே கொன்ற டெல்லி வியாபாரிகள்

ச.அக்‌ஷை குமார்

கும்பலாகத் தாக்கும் சம்பவங்கள் வட இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த விவகாரங்களில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Murder
Murder

கடந்த திங்கள்கிழமை அன்று பழைய டெல்லி ரயில் நிலையம் அருகே ஹெட்போன் வாங்க மறுத்த காரணத்துக்காக முகமது ஓவைஸ் என்ற நபரை அங்கிருந்த வியாபாரிகள், கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Headset
Headset
Representational image

முகமது ஓவைஸ், நொய்டா நகரத்தில் வசித்து வந்த ஆசிரியர். கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி வந்த அவர் மீண்டும் நொய்டா செல்வதற்காகப் புறப்பட்டுள்ளார். திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் சாந்தினி சௌக் வந்த முகமது, ஹெட்போன் வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்றுள்ளார். கடைக்காரர் அயூப் சொன்ன விலை அதிகமாக இருந்ததால் தனக்குப் பொருள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து வந்த அயூப், `அதைப் பயன்படுத்திவிட்டாய். அதனால் பொருளை வாங்கியே ஆக வேண்டும்' எனக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்தபோது அங்கிருந்த தனது சக வியாபாரிகளை அழைத்த அயூப், அவர்களோடு சேர்ந்து முகமது ஓவைஸை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தவர், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் முகமது பலமாகத் தாக்கப்பட்டார் என்றும் அவர் தனது சுயநினைவை இழக்கும் வரை தாக்கப்பட்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால், காவல்துறை அதிகாரிகளோ அதை மறுத்து, முகமது உடம்பில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள்.

Arrest
Arrest
கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை! - சூதாட்ட கும்பல் நெருக்கடியா?

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அயூப் மற்றும் லல்லான் என்ற இருவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. மேலும், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுபோன்று கும்பலாகத் தாக்கும் சம்பவங்கள் வட இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.