Published:Updated:

`4 ரவுண்டு; வாகனம்தான் குறி; ஒருவர் பலி!' - துப்பாக்கிச் சூட்டை விவரிக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ( ANI )

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வின் பாதுகாப்பு வாகனம்மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 70 உறுப்பினர்களைக்கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு, கடந்த 8-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது. 36 இடங்களை வென்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிகையில், தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சியின் கை ஓங்கியே இருந்தது. 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலைபெற்ற ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் டெல்லி அரியணையைப் பிடித்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடம்
துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடம்
ANI

இந்தத் தேர்தலில், மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் நரேஷ் யாதவ், இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். இவர், நேற்றிரவு தனது ஆதரவாளர்களுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கிஷன்கார்க் பகுதி வழியே அவரது வாகனம் வந்துக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருடன் பயணித்த ஆம் அத்மி தொண்டர் அசோக் மான் என்பவர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மற்றொரு தொண்டருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டெல்லி எம்.எல்.ஏ-வின் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிஷான்கார்க் (Kishangarh) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த காவலர்கள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை
ANI

நரேஷ் யாதவ் கூறுகையில், ``இந்தச் சம்பவம், உண்மையில் துரதிர்ஷடவசமானது. தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், திடீரென நடந்துவிட்டது. எங்களை நோக்கி 4 முறை சுட்டனர். போலீஸார் நேர்மையாக விசாரணை மேற்கொண்டால் இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்த உண்மை வெளிவரும். இந்தத் தாக்குதலில் அசோக் மன் உயிரிழந்துள்ளார். ஹரேந்தர் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. என்னைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தினார்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், எங்கள் வாகனத்தைக் குறிவைத்துதான் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான் உட்பட யார் வேண்டுமானாலும் சுடப்பட்டிருக்கலாம்” என்றார் அதிர்ச்சி விலகாமல்.

அடுத்த கட்டுரைக்கு