Published:Updated:

"என் மகளைக் கொலை செய்ததுபோல், என்னையும் கொலை செய்ய டெல்லிக்கு அழைத்தான்!" - ஷ்ரத்தாவின் தந்தை பகீர்

ஷ்ரத்தா, அவரின் தந்தை

``என் மகளைக் கொலைசெய்ததுபோல், என்னையும் கொலைசெய்யத்தான் அஃப்தாப் அடிக்கடி டெல்லிக்கு வரும்படி அழைத்ததாக இப்போது சந்தேகப்படுகிறேன்.'' - ஷ்ரத்தாவின் தந்தை

"என் மகளைக் கொலை செய்ததுபோல், என்னையும் கொலை செய்ய டெல்லிக்கு அழைத்தான்!" - ஷ்ரத்தாவின் தந்தை பகீர்

``என் மகளைக் கொலைசெய்ததுபோல், என்னையும் கொலைசெய்யத்தான் அஃப்தாப் அடிக்கடி டெல்லிக்கு வரும்படி அழைத்ததாக இப்போது சந்தேகப்படுகிறேன்.'' - ஷ்ரத்தாவின் தந்தை

Published:Updated:
ஷ்ரத்தா, அவரின் தந்தை

மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் கடந்த மே மாதம் டெல்லியில் காதலனால் கொலைசெய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் காதலன் அஃப்தாப் பூனாவாலா கைதுசெய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறான். இந்தக் கொலை தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை விகாஸ் வாக்கர் (Vikas Walker) புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அஃப்தாப் தன்னையும் கொலைசெய்ய திட்டமிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், ``என் மகள் ஷ்ரத்தா, குடும்பத்தில் மூத்தவர் என்பதால், அனைத்துச் சொத்துகளுக்கும், வங்கிக் கணக்கிலும் அவளுடைய பெயரை வாரிசாக நியமித்திருந்தோம்.

அஃப்தாப்  - ஷ்ரத்தா
அஃப்தாப் - ஷ்ரத்தா

என் மனைவி 2020-ம் ஆண்டு இறந்த பிறகு வங்கியில் அது குறித்து தெரிவித்து, சில மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது. ஆனால், அதற்கு வாரிசுதாரரின் ஒப்புதல் தேவை என்று கூறிவிட்டனர். இதனால், என் மகளைத் தொடர்புகொண்டேன். ஆனால், அவரிடம் போனில் மட்டுமே பேச முடிந்தது. அதுவும் பேசிக்கொண்டிருக்கும்போது போனை பாதியில் கட் செய்துவிடுவார். அவர்கள் இருக்கும் இடம் எங்களுக்குத் தெரியக் கூடாது என்று அஃப்தாப் விரும்பினான். ஷ்ரத்தாவின் நண்பர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் எனக்கு உதவவில்லை. கொரோனாவால் என்னாலும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியவில்லை. 2020-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஷ்ரத்தாவின் நண்பர் லட்சுமண் என்னுடைய மகனைத் தொடர்புகொண்டு ஷ்ரத்தாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை'' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ``நானும் லட்சுமணனும், ஷ்ரத்தாவின் மற்ற நண்பர்களையும் சந்தித்துப் பேசினோம். அவர்களாலும் ஷ்ரத்தாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

இதையடுத்து, அஃப்தாப்பின் தாயாரைச் சந்தித்துப் பேசியபோது ஷ்ரத்தா டெல்லியில் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் வந்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். அதன் பிறகு என்னைச் சந்திக்க அஃப்தாப்பின் தாயார் தயாராக இல்லை. அதன் பிறகே சந்தேகம் ஏற்பட்டு, போலீஸில் புகார் செய்தேன். ஆனால், காணாமல்போனதாக வழக்கு பதிவுசெய்ய மறுத்தனர். டெல்லிக்குச் சென்று புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். கட்டாயப்படுத்திக் கேட்டதால் அஃப்தாப்புக்கு இன்ஸ்பெக்டர் சம்பத் பாட்டீல் போன் செய்து விசாரணைக்காக வந்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே அஃப்தாப் தன் தந்தையுடன் சென்று வசாய் காவல் நிலையத்துக்குச் சென்றான். அதன் பிறகு என்னையும் வந்து பார்த்தான். இதில், டெல்லியில் ஷ்ரத்தா காணாமல்போனதாக புகார் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி அஃப்தாப் திடீரென எனக்கு போன்செய்து போலீஸார் புகாரை வாங்க மறுப்பதாகவும், தான் இப்போது காவல் நிலையத்தில்தான் இருப்பதாகவும் தெரிவித்தான். அதோடு போலீஸ்காரர் ஒருவரிடம் கொடுத்து போனில் பேசும்படி தெரிவித்தான்.

அஃப்தாப் -ஷ்ரத்தா
அஃப்தாப் -ஷ்ரத்தா

நான் காவல் நிலைய லேண்ட்லைன் நம்பரிலிருந்து பேசும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால், அந்த நபர் அப்படிப் பேச மறுத்துவிட்டான். இதனால் அஃப்தாப் காவல் நிலையத்துக்கே செல்லவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அடிக்கடி அஃப்தாப் என்னுடன் தொடர்பில் இருந்தான். ஷ்ரத்தா காணாமல்போனதாகப் புகார் கொடுக்க டெல்லிக்கு வரும்படி அடிக்கடி அழைத்தான். என் மகளைக் கொலைசெய்ததுபோல் என்னையும் கொலைசெய்யத்தான் அஃப்தாப் அடிக்கடி டெல்லிக்கு வரும்படி அழைத்ததாக இப்போது சந்தேகப்படுகிறேன். என்னை அடிக்கடி டெல்லிக்கு அழைத்ததால் அதில் சந்தேகமடைந்து, என் மகள் காணாமல்போனது குறித்து மானிக்பூர் போலீஸாரிடம் போராடி வழக்கு பதிவுசெய்யவைத்தேன். இதையடுத்து, அஃப்தாப்பை மீண்டும் அழைத்து மானிக்பூர் போலீஸார் விசாரித்தனர்.

ஆனால், அஃப்தாப் என்ன சொன்னான் என்பதை என்னிடம் போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நவம்பர் 10-ம் தேதி டெல்லி போலீஸார் என்னைத் தொடர்புகொண்டு டெல்லிக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். என் மகளைப் பார்க்கலாம் என்று நினைத்துச் சென்றேன். ஆனால், என் முன்பு அஃப்தாப்பை ஆஜர்படுத்தினர். ஷ்ரத்தா உயிரோடு இல்லை என்று தெரிவித்தனர். இப்போது என்னுடைய மகளின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்தால் இறுதிச்சடங்கு செய்யலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.