Published:Updated:

``எங்க அப்பா எப்ப வருவார்?'' - டி.ஜி.பி திரிபாதியிடம் கலங்கிய எஸ்.ஐ.வில்சனின் இரண்டாவது மகள்

எஸ்.ஐ.வில்சன் இறுதிச் சடங்கில்...
எஸ்.ஐ.வில்சன் இறுதிச் சடங்கில்...

இனிமேல் மனநலம் பாதித்த அவரின் இரண்டாவது மகளை எப்படிச் சமாளிப்பது என உறவினர்கள் கலங்கியுள்ளனர். தூத்துக்குடியில் முதலில் பணியாற்றி வந்த வில்சன், மகளின் சிகிச்சைக்காகவே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாற்றம் கேட்டு வாங்கியிருக்கிறார்.

களியக்காவிளையில் எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட குண்டுகள், பெங்களுரூவில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ரகம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, எஸ்.ஐ. வில்சனின் கொலையில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எஸ்.ஐ குடும்பத்துக்கு திரிபாதி ஆறுதல்
எஸ்.ஐ குடும்பத்துக்கு திரிபாதி ஆறுதல்

இதற்கிடையே, எஸ்.ஐ வில்சன் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. வில்சன் இறுதிச்சடங்கின்போது நடந்த உருக்கமான நிகழ்வைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். வில்சனின் இறுதிச்சடங்கில் தமிழக டி.ஜி.பி திரிபாதி கலந்துகொண்டார். திரிபாதியிடம், வில்சனின் மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டாவது மகள், 'எங்க அப்பா எப்ப வருவார்' என்று கேட்டு அழுதுள்ளார். இதைக் கண்டு, இரும்பு மனம் படைத்த போலீஸ் அதிகாரிகளே கண் கலங்கி விட்டனர்.

வில்சனுக்கு இரு மகள்கள் உண்டு. மூத்த மகளுக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. வில்சனின் 26 வயது இளையமகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால், வில்சன் இரண்டாவது மகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்திருக்கிறார். குழித்துறையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பள்ளியில் சேர்த்துள்ளார். வில்சன் டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நேராக இளைய மகளைத்தான் பார்ப்பார். மகளுக்கு உணவை தன் கையால் ஊட்டி விடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்பாவைக் கண்டதும் மகளும் உற்சாகமாகிவிடுவார். வில்சன் இறுதிச்சடங்கின்போது, அப்பாவுக்கு ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்ட வினிதா அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதைக் கண்டு அங்கே குழுமியிருந்தவர்கள் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனர்.

கலங்கி நிற்கும் எஸ்.ஐ வில்சன் குடும்பம்
கலங்கி நிற்கும் எஸ்.ஐ வில்சன் குடும்பம்
`அந்தப் பெண்ணிடம் ஏமாந்தது நான் மட்டுமல்ல!' -என்ன சொல்கிறார் கோடம்பாக்கம் ஸ்ரீ?

'என் மகள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள். ஓய்வுக்குப் பிறகு, அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று வில்சன் அடிக்கடி தன் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். வில்சன் ஓய்வு பெற, இன்னும் 15 மாதங்கள்தான் இருந்தன. அதற்குள், சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். இதனால், மகளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அவரின் கடைசி ஆசையும் நிறைவேறாமலேயே போய்விட்டது. இனிமேல், மனநலம் பாதித்த அவரின் இரண்டாவது மகளை எப்படிச் சமாளிப்பது என உறவினர்கள் கலங்கியுள்ளனர். தூத்துக்குடியில் முதலில் பணியாற்றி வந்த வில்சன், மகளின் சிகிச்சைக்காகவே கன்னியாகுமாரி மாவட்டத்துக்கு பணி மாற்றம் கேட்டு வாங்கியிருக்கிறார்.

இதற்கிடையே, எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, கேரள மற்றும் தமிழக போலீஸார் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கொலை விவகாரத்தில், இடலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் தேடப்படும் நபர்களாக போலீஸார் அறிவித்துள்ளனர். இவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தவுபிக் மற்றும் அப்துல் சமீம் வீடுகளில் கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கம்ப்யூட்டர் போன்றவற்றை கைப்பற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை பெங்களூருவில் தமிழக போலீஸார் கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வில்சன் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேவேளையில், குற்றவாளிகளுக்கு தக்கத் தண்டனை கண்டிப்பாக வழங்க வேண்டும். அந்தத் தண்டனை வேறு விதமாக இருக்க வேண்டுமென்று தமிழக போலீஸ்துறை கொந்தளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு