Published:Updated:

`90 வீடியோக்கள்; கொரோனாவுக்கு மருந்து!' -சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சிக்கிய கதை

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

இன்று அதிகாலை சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை பிடித்த போலீஸார் அவரை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிவருகிறது.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

இந்தநிலையில், கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகச் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அதிரடியாகக் கூறினார். இவரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், தன்னிடம் கொரோனா நோயாளிகள் வந்தால் குணப்படுத்துவேன் என்று மருத்துவத் துறைக்குச் சவால்விடுக்கும் வகையில் பேசியிருந்தார். சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக திருத்தணிகாசலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இன்று அதிகாலை சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை பிடித்த போலீஸார் அவரை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அறிக்கை
அறிக்கை
`பொதுமக்கள் நலனுக்கே ஆபத்து!- அரசின் நடவடிக்கையால் சிக்கலில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

விசாரணைக்குப் பிறகு திருத்தணிகாசலத்தை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பிலும் திருத்தணிகாசலம் குறித்து பத்திரிகை செய்தி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் செய்திக் குறிப்பில் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்த திருத்தணிகாசலத்தை தேனியில் இன்று அதிகாலை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தோம். அவரிடம் விசாரித்தபோது கொரோனாவுக்கு என்னிடம் மருந்து உள்ளது என்று கூறினார். அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்ட திருத்தணிகாசலத்தின் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்குப்பதிந்துள்ளோம்" என்றார்.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``திருத்தணிகாசலம், 90-க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொன்றிலும் ஒரு புதிய தகவல்களைக் கூறி மக்களைக் குழப்பி வந்தார். ஒரு வீடியோவில் கொசு வளருங்கள், கொரோனா குணமாகிவிடும் என்று கூறியிருந்தார். கொசுக்கள், கொரோனா வைரஸை சாப்பிட்டுவிடும் என்ற ரேஞ்சில் பேசியிருந்தார். மேலும், முகக் கவசம் அணிய வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனாவுக்குக் கீழாநெல்லியைச் சாப்பிடுங்கள் என்றும் பேசியிருந்தார். திருத்தணிகாசலத்தின் முரண்பட்ட தகவல்களால் சித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அரசு சித்த மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் எங்களிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு