Published:Updated:

ஐம்பொன் சிலைகள் மாயமான கோயில் அர்ச்சகர் மர்ம மரணம்! - சீர்காழி சர்ச்சை

அர்ச்சகர் நடராஜ்
அர்ச்சகர் நடராஜ்

அப்போது, கீழமாத்தூர் கிராமத்தில் மெயின்ரோட்டுக்கு அருகிலுள்ள வீரன்கோயில் பின்புறம் நடராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

சீர்காழி அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டுப்போன ஸ்ரீ குமார சுப்ரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருட்டுப்போன ஸ்ரீ குமார சுப்ரமணிய சுவாமி கோயில்
திருட்டுப்போன ஸ்ரீ குமார சுப்ரமணிய சுவாமி கோயில்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் அருள்மிகு குமார சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் அர்ச்சகராக நடராஜ் என்பவர் சேவைபுரிந்து வந்தார். இவர் கோயில் அருகேயுள்ள வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 'கீழ் பழனி' என்றழைக்கப்படும் இந்தக் கோயிலின் மூல ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 17 -ம் தேதி மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், கோயில் பூஜைகளைத் தொடர்ந்து செய்து வந்த அர்ச்சகர் நடராஜ் அங்கிருந்து 5. கி.மீ தொலைவிலுள்ள குன்னம் கிராம சிவன்கோயிலிலும் பூஜை செய்து வந்தார். ஆனால், கொண்டல் கோயில் சிலைகள் திருட்டு போனதிலிருந்து குன்னம் கோயில் பூஜைக்கு தினமும் நடராஜ் செல்வதில்லை. அப்படியே செல்ல நேரிட்டாலும் துணைக்கு ஒருவரை அழைத்துச் சென்றதாகவும் மற்ற நேரங்களில் அவரது மகன்கள் குன்னம் கோயில் பூஜையைக் கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக நடராஜ் தனியாக இருசக்கர வாகனத்தில் குன்னம் கோயில் பூஜை செய்வதற்குச் சென்றுள்ளார். பூஜை முடித்து திரும்பிவரும் நேரம் கடந்ததால் அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தேடியுள்ளனர். அப்போது கீழமாத்தூர் கிராமத்தில் மெயின்ரோட்டுக்கு அருகிலுள்ள வீரன்கோயில் பின்புறம் நடராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சகர்  நடராஜ்
அர்ச்சகர் நடராஜ்

சிலைகள் திருட்டுத் தொடர்பாக அடிக்கடி போலீஸ் விசாரணையால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், திருடர்கள் குறித்து நடராஜ்க்குத் தெரிந்திருக்கலாம். அதனால், அந்தத் திருடர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு