Election bannerElection banner
Published:Updated:

சீர்காழி கொலை: ஜெயங்கொண்டத்தில் போடப்பட்ட பிளான்... சிக்கிய கொள்ளையர்கள்!

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ்
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் ( பா.பிரசன்னவெங்கடேஷ் )

சீர்காழி கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய மகிபால் சிங் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இறந்த நிலையில் ரமேஷ், மணிஷ், கருணாராம் ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

சீர்காழி கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடை நடத்திவந்ததும், அங்கிருந்தபடியே இதற்கான திட்டத்தைத் தீட்டியதாகவும் வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயங்கொண்டத்தில் கடை நடத்திவந்த மணிஷ்
ஜெயங்கொண்டத்தில் கடை நடத்திவந்த மணிஷ்

சீர்காழியில் நேற்று முன்தினம் காலை வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் தாய், மகனைக் கொலை செய்துவிட்டு, 17 கிலோ நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மகிபால் சிங் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இறந்த நிலையில்ரமேஷ், மணிஷ், கருணாராம் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் கொள்ளையர்களில் ரமேஷ், மணிஷ் ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளைச் சம்பவத்துக்கான திட்டத்தைத் தீட்டியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கொலை
கொலை
Representational Image

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம், `ரமேஷ், மணிஷ் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ரமேஷ் ஜெயங்கொண்டத்தில் பத்து ஆண்டுகளாக ஆட்டோமொபைல் கடை நடத்திவந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கடையை வேறு ஒரு வடமாநிலத்தை சேர்ந்தவரிடம் விற்றுவிட்டார்.

பின்னர் கும்பகோணம் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் அவர் சுற்றிவந்ததாகத் தெரிகிறது. இதேபோல் மணிஷ் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்கிற பெயரில் கிளாஸ் அண்ட் பிளைவுட்ஸ் கடை நடத்திவந்தார். இந்தநிலையில் ரமேஷ், ஜெயங்கொண்டத்துக்கு வந்து அடிக்கடி மணிஷைச் சந்தித்து பேசிவந்திருக்கிறார். இங்கிருந்தபடிதான் இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்துக்கான திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள்.

கருணாராம்
கருணாராம்

ரமேஷ் ஜெயங்கொண்டத்தில் தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்திருக்கிறார்.நேற்று முன்தினம் அதிகாலையில் கிளம்பி மணிஷை அழைத்துக்கொண்டு கும்பகோணம் சென்றிருக்கிறார். அங்கிருந்து கும்பகோணத்தில் செருப்புக்கடை நடத்திவரும் கருணாராம் என்பவரின் காரில் சீர்காழிக்குச் சென்றிருக்கிறார்கள்.

பின்னர் ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரைக் கொலை செய்ததுடன், தன்ராஜ், அகில் மனைவி நிகல் ஆகியோரைத் தாக்கிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியிருக்கிறார்கள். செல்போன் பயன்படுத்தினால் மாட்டிக்கொள்வோம் என்பதால், அவர்கள் யாரும் செல்போனையும் எடுத்துக்கொண்டு செல்லவில்லை.

சீர்காழி: வீடு புகுந்த வடமாநில கொள்ளையர்கள்; தாய், மகன் படுகொலை! -இருவர் கைது; ஒருவர் என்கவுன்ட்டர்?

இந்தக் கொலைச் சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் கடும் பரபரப்பை உண்டாக்கியது. துரிதமாகச் செயல்பட்ட போலீஸார் உடனடியாகக் கொள்ளையர்களைக் கைதுசெய்தனர். மணிஷ் கைதுசெய்யப்பட்ட தகவல் வெளியானதுமே ஜெயங்கொண்டம் பகுயில் பெரும் பரபரப்பு உண்டானது.

வியாபாரத்தில் கறாராக இருக்கும் மணிஷ், யாரிடமும் அதிகம் பேச மாட்டான் என்கிறார்கள் அப்பகுதியினர். மணிஷ் கடை வைத்திருந்த கடையின் உரிமையாளர், மணிஷின் அப்பாவைத் தொடர்புகொண்டு, உடனே ஊருக்குக் கிளம்பிவரச் சொல்லியிருப்பதுடன் கடையையும் காலி செய்ய ச்சொல்லிவிட்டார். அவர் வந்ததுமே கடைக்காகக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு கடையைத் திரும்பப் பெறவிருக்கிறார். ரமேஷ், மணிஷ் இருவருமே ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்தவர்கள் என்பதால் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மகிபால் சிங்
சடலமாக மகிபால் சிங்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தபடி மொபைல் ஷாப், பிளைவுட் கடை, பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட கடைகளை நடத்திவருகின்றனர். அத்துடன் 500-க்கும் மேற்பட்டவர்கள் கட்டட வேலை, இன்டீரியர் ஒர்க்ஸ், டைல்ஸ் அமைத்துக் கொடுப்பது எனப் பல்வேறு தொழில்களைச் செய்துவருகின்றனர்.

சீர்காழி: வீடு புகுந்த வடமாநில கொள்ளையர்கள்; தாய், மகன் படுகொலை! -இருவர் கைது; ஒருவர் என்கவுன்ட்டர்?

மேலும் அருகேயுள்ள ஊர்களிலும் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வசித்துவருகின்றனர். இந்தநிலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தக் கொடிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் வட மாநிலத்தவர்கள் வாடகைக்கு எடுத்திருக்கும் வீடு, கடை ஆகியவற்றை உடனே காலி செய்ய வேண்டும் எனவும் சிலர் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பிவருகிறார்கள். வேலைக்காக, சொந்த ஊரைவிட்டு இங்கு வந்திருக்கும் இவர்களில் சிலர் செய்யும் கொடூரத்தனத்தால் அப்பாவி மக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்தச்சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு