Published:Updated:

`எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை!' - தந்தையின் குடிப்பழக்கத்தால் விபரீத முடிவெடுத்த அண்ணன், தங்கை

கோவையில் தந்தையின் குடிப்பழக்கத்தால் கிணற்றில் விழுந்த தங்கையைக் காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணறு
கிணறு

கோவை மாவட்டம், ஜமீன் காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், மதுக்கரை பகுதியில் உள்ள செந்தில்குமார் என்பவரது தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்கு தோட்ட வேலை செய்து வருகிறார்.

இவருக்கு வேலுமணி என்ற மனைவியும் 2 மகன்கள், 3 மகள்கள் இருந்தனர். அதில், இரண்டு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. இதையடுத்து, தன் ஒரு மகள், மனைவி, மகன்களுடன் முத்துசாமி குடும்பம் நடத்தி வந்தார்.

Vikatan

முத்துசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி வேலுமணியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வந்து வேலுமணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் முத்துசாமி.

இதை மகன் அருண்குமார், மகள் சித்ரா ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த முத்துசாமி, வேலுமணியைத் தாக்கியுள்ளார். சித்ராவும் அருண்குமாரும் எவ்வளவு சொல்லியும் முத்துசாமி கேட்கவில்லை.

இதனால், மனமுடைந்த சித்ரா இரவு 10 மணி அளவில் தோட்டத்துக் கிணற்றில் குதித்துவிட்டார். சித்ராவைக் காப்பற்றுவதற்காக அண்ணன் அருண்குமாரும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

கிணறு
கிணறு

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.