Published:Updated:

`அமைதியானவர்; ஏன் இப்படிச் செய்தார்னு தெரியல!' - வங்கி மேலாளரின் விபரீத முடிவால் கலங்கும் நண்பர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் வங்கி உதவி மேலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலாளர் தங்கிருந்த பகுதி
மேலாளர் தங்கிருந்த பகுதி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது கருங்காலக்குடி. இங்கு இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கருங்காலக்குடியைச் சுற்றியுள்ள கிராமத்தினர் அதிக அளவு கணக்கு வைத்துள்ளனர்.

மேலாளர்
மேலாளர்

இந்த வங்கியில் உதவி மேலாளராக ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வந்தார். வெளியூரைச் சேர்ந்த ஸ்ரீதர், அருகில் உள்ள சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதி தனியார் விடுதியில் தங்கி வேலை செய்துவருகிறார். இந்நிலையில், எப்போதும் போல வேலையை முடித்துவிட்டு, தனது அறைக்குச் சென்ற உதவி மேலாளர் ஸ்ரீதர், மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை.

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளின் சாவி ஸ்ரீதரிடம் இருந்தது. இதையடுத்து, போன்செய்தும் எடுக்காததால் வங்கி ஊழியர்கள் ஸ்ரீதர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் ஸ்ரீதர் கிடந்துள்ளார். இதைப்பார்த்து வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஸ்ரீதர் தங்கியிருந்த அறை
ஸ்ரீதர் தங்கியிருந்த அறை

அதையடுத்து வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் விடுதி பணியாளர்களும் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்கம்புணரி போலீஸார், விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீதர், பணிச்சுமை காரணமாக இறந்தாரா இல்லை சொந்தப் பிரச்னை காரணமாக இறந்தாரா என போலீஸ் விசாரணை செய்துவருகிறது.

இறந்த உதவி மேலாளர் ஸ்ரீதர், திருச்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தைத் தொடர்ந்து அவரது தந்தை சந்தானத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீதர் தங்கிருந்த விடுதி
ஸ்ரீதர் தங்கிருந்த விடுதி

இதுகுறித்து ஸ்ரீதரின் நண்பர்களிடம் விசாரித்தோம். ``ஸ்ரீதர் படிப்பில் எப்போதும் கெட்டி. ஆசைப்பட்டுதான் வங்கி வேலையில் சேர்ந்தான். அமைதியாகவே வலம்வருவான். அவன் தற்கொலை செய்துகொண்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவன் தங்கியிருந்த அறையில் ஆவணங்களைப் பார்த்தால் கண்டிப்பாக அவன் இறந்ததற்கான காரணம் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர்.