Published:Updated:

சிவகங்கை: ஹாக்கி பயிற்சி; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - போக்சோவில் பயிற்சியாளர் கைது

பயிற்சியாளர் சங்கர்
பயிற்சியாளர் சங்கர்

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் பேசியவர்கள், சங்கர் அடிக்கடி அவர் அறைக்கு வரச் சொல்லி பாலியல்ரீதியாகத் தொந்தரவு கொடுத்தாகவும், `இதை வெளியில் சொன்னால் உயிரோடு விட மாட்டேன்’ என்று மிரட்டியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் `செட்டிநாடு பெண்கள் ஹாக்கி கிளப்’ என்ற அமைப்பு செயல்பட்டுவருகிறது. கடந்த சில வருடங்களாகச் செயல்படும் இந்த கிளப்பில் ஏராளமான பெண்கள் ஹாக்கி பயிற்சி பெற்று, பல இடங்களில் பரிசுகளும் பெற்றுவருகின்றனர். இதில் பயிற்சியாளராக இருக்கும் சங்கர் தி.மு.க-விலும் பொறுப்பு வகித்துவருகிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

மேலும், சங்கரின் தந்தை ரைஸ்மில் நடத்தும் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பள்ளத்தூரைச் சேர்ந்த பயிற்சியாளர் சங்கர், தன்னிடம் பயிற்சி பெறும் சில மாணவிகளுக்குப் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோர்களிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பயிற்சியாளர் சங்கர் மற்றும் அவரின் உதவியாளர் கண்ணன் ஆகியோர்மீது புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புகாரைப் பதிவு செய்த காரைக்குடி காவல்துறையினர், சங்கர், அவரது உதவியாளர் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை செய்துவருகின்றனர்.

 பயிற்சியாளர் சங்கர்
பயிற்சியாளர் சங்கர்

இது குறித்து காரைக்குடி டி.எஸ்.பி அருண், ``பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து குற்றவாளிகள்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். மேலும், இவர்கள்மீது வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவா என்பதையும் விசாரணை செய்துவருகிறோம்" என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் பேசியவர்கள், சங்கர் அடிக்கடி அவர் அறைக்கு வரச் சொல்லி பாலியல்ரீதியாகத் தொந்தரவு கொடுத்தாகவும், `இதை வெளியில் சொன்னால் உயிரோடு விட மாட்டேன்’ என்று மிரட்டியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சங்கரிடம் பயிற்சிபெறும் வேறு சில மாணவிகள், ``எங்கள் பயிற்சியாளர்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு திட்டமிட்டு புகாரளித்திருப்பதாக” காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு