Published:Updated:

`நான் யார் தெரியுமா?' - சிவகங்கை அரசு மருத்துவமனையில் துப்பாக்கியுடன் ரகளை செய்த காவலர்

சிவகங்கை மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களை துப்பாக்கியால் மிரட்டிய போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.

Pandi Sankar
Pandi Sankar

சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தவர் பாண்டி சங்கர். பணியின்போது மது அருந்திவிட்டு தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில், அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Pandi Sankar
Pandi Sankar

பின்னர், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு பணி செய்துவருகிறார். இந்நிலையில் காவல்துறை சீருடை இல்லாமல் மருத்துவமனைக்கு பிஸ்டலுடன் அவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார்.

`ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால் மருத்துவர்கள் தங்களது பட்டப்படிப்பு சான்றிதழை கிழித்துவிட்டு செல்லவேண்டும். முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் எந்த ஒரு நோயாளியும் இறக்கக் கூடாது.

சமாதாணம் செய்யும் சக போலீஸ்
சமாதாணம் செய்யும் சக போலீஸ்

அதற்காக மார்ச்சுவரியில் பார்வையிடுவேன்'' என்று கூறி பாண்டி சங்கர் மருத்துவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். மேலும், ``நான் யார் தெரியுமா? எங்க வேலைபாக்குறேன்னு தெரியுமா?' என்று கூறி கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் பாண்டி சங்கரை தடுத்து நிறுத்தி,``தற்போது இங்கு எதுவும் பேசவேண்டாம் கிளம்புங்கள்” என்று நட்புரீதியாக கூறியுள்ளார். ஆனாலும் அதை கேட்காமல் அவருடனும் சண்டை போடும் தொனியில் பாண்டி சங்கர் பேசி மிரட்டியுள்ளார்.

பாண்டி சங்கர், தொடர்ந்து கூச்சலிட்டு பேசவும் மருத்துவமனையில் இருந்த பொதுமக்களும், பணியாளர்களும் அச்சமடைந்தனர். அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவரும் நிலையில், காவல்துறையில் பணியாற்றும் நபர் சீருடை இல்லாமல் துப்பாக்கியை கொண்டு வந்து மிரட்டி, அநாகாரிகமாக பேசியுள்ள வீடியோ தற்போது மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல் போலீஸ்
மிரட்டல் போலீஸ்

இது குறித்து சிவகங்கை நகர் பகுதி காவலர்கள் சிலர் கூறுகையில்,``பாண்டி சங்கர் தொடர்ந்து மது போதையில் ரகளை செய்ததால்தான் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தற்போது மீண்டும் போதையில் டம்மி துப்பாக்கியுடன் சென்று மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் பாண்டி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தனர்.