Published:Updated:

`அ.தி.மு.க-வினரோடு கைகோக்கும் தி.மு.க-வினர்!' - மணல் கொள்ளையால் கொந்தளிக்கும் சிவகங்கை மக்கள்

தமறாக்கியில் மணல் கொள்ளை
தமறாக்கியில் மணல் கொள்ளை

சிவகங்கை மாவட்டத்தில், அமைச்சரின் சொந்த ஊரில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் ஆற்று மணல், சவுடு மணல் கொள்ளை தொடர்ந்து அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மானாமதுரை, இளையான்குடி, தமறாக்கி, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக ஆற்று மணல் சவுடு மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் வாசிக்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினர் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறுகிறார்கள்.

தமறாக்கியில் மணல் கொள்ளை
தமறாக்கியில் மணல் கொள்ளை

கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சொந்த ஊரான தமறாக்கியில், இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தோம். ``தமறாக்கி தெற்குப் பகுதியில் உள்ள எருமைக் குளம் கண்மாயில், உப்பாறு என்ற இடத்தில் தினமும் இரவுபகலாக மணல் கொள்ளை நடந்துவருகிறது. ஜே.சி.பி, டிராக்டர் மற்றும் டிப்பர் உதவியால் தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது.

காரைக்குடி செஞ்சை
காரைக்குடி செஞ்சை

இதுதொடர்பாக, கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடம் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. அமைச்சரின் உறவினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப் பயப்படுகின்றனர். எங்கள் ஊரில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் போட்டோம். அப்போதும் நின்றபாடில்லை. கிராமத்தின் சார்பாக பல மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை.

அதிகாரிகள் ஒத்துழைப்போடு அமைச்சரின் உறவினர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதை உடனடியாகத் தடுக்க வேண்டும்'' என்றனர் ஆதங்கத்தோடு.

இதுதொடர்பாக அமைச்சர் ஜி.பாஸ்கரனிடம் கேட்டோம். ``அப்படி மணல் அள்ளுவதாகத் தெரிந்தால், உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கச்சொல்லி கலெக்டர் மற்றும் எஸ்பி-யிடம் கூறுகிறேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்தார் .

மணல் கொள்ளை
மணல் கொள்ளை

மேலும், இதுதொடர்பாக சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாத்திடம் பேசினோம். ``சிவகங்கையில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். கடந்த வாரம்கூட 4 பேர்மீது வழக்குப் பதிந்துள்ளோம்.

அமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை?

சில கிராமங்களில் ஊர் மக்களே மணல் அள்ளுகின்றனர். அதனால் தகவல்கள் வெளியே தெரிவதில்லை. மணல் அள்ளுவது தொடர்பாகப் புகார் அளித்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

வி.மலம்பட்டி
வி.மலம்பட்டி

சிவகங்கை மாவட்ட மணல் கொள்ளையில், அ.தி.மு.க-வினர் அதிக அளவு ஈடுபட்டாலும் ஆங்காங்கே தி.மு.க-வினரும் அவர்களோடு கைகோத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களில் மணல் அள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் தற்போதைய அமைச்சர், தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆகியோரின் ஆதரவோடு மணல் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு