Published:Updated:

பெண்ணுடன் டிக்டாக்... நகையுடன் மாயமான மனைவி..! - வீடியோவை பார்த்துப் பதறிய கணவர்

கணவருடன் வினிதா
கணவருடன் வினிதா

மனைவியின் டிக் டாக் மோகத்தால் கணவருக்கு சோகமான சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அடுத்த சானா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியலியோ. இவருக்கும் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த வினிதாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

வினிதா
வினிதா

புதுமணத் தம்பதியான இருவரும் காளையார்கோயில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். வீடு சரியில்லை என்று வினிதா கூறவும் அவருக்குப் பிடித்ததுபோல் சிவகங்கையில் வேறு வீடு பார்த்து குடிபுகுந்துள்ளார் ஆரோக்கியலியோ. கணவன், மனைவி இருவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. வீட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படவும் ஆரோக்கிய லியோ வெளிநாட்டுக்குச் சென்று வேலை பார்த்து வந்துள்ளார்.

`உங்கள் அன்புக்கு நன்றி!’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்

மாதம் மாதம் பணத்தை அனுப்பிவிடுவாராம் லியோ. வீட்டில் தனியாக இருந்த வினிதாவுக்கு பொழுது போகவில்லை என்பதால் பெரிய அளவு ஸ்மார்ட்போன் ஒன்றும் வாங்கிக்கொண்டார். இதில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்து தினமும் பல்வேறு வீடியோக்களை அப்லோடு செய்துவந்துள்ளார். இதைக்கண்ட வினிதாவின் கணவர் லியோ அவரைக் கண்டித்துள்ளார்.

அபியுடன் வினிதா
அபியுடன் வினிதா

இதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாத வினிதா தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார். டிக்டாக்கில் மூழ்கிப் போன வினிதாவுக்கு அபி என்பவரின் நட்பு இணையம் மூலம் கிடைத்துள்ளது. இதனால் அபியும் வினிதாவும் அடிக்கடி டிக்டாக் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து டிக்டாக் வீடியோக்கள் எடுத்தும் வெளியிட்டுள்ளனர். வினிதா, அபியின் புகைப்படத்தை பச்சையும் குத்தினார். இதை ஆரோக்கியலியோவின் நண்பர்கள் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்துள்ளனர்.

இதைப் பார்த்த ஆரோக்கியலியோ அதிர்ந்து போனார். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த லியோ சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது தான் அனுப்பிய பணம் மற்றும் அவர் வைத்திருந்த நகைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார் லியோ. இதையடுத்து லியோ, வினிதாவை அவரது அம்மா வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை சொல்லிவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் லியோ. அப்போது வினிதாவை அம்மாவும் சகோதரியும் கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த வினிதா அன்று இரவு அவரின் அக்காவின் 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.

வினிதா காணவில்லை என போஸ்டர்
வினிதா காணவில்லை என போஸ்டர்

இதனால் வினிதாவின் தாயார் அருள் ஜெயராணி திருவேகம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்து, வினிதா தனது டிக்டாக் தோழியான அபியுடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் திருவாரூர் மாவட்டம் கீழேரியம் பகுதியைச் சேர்ந்த அபியின் வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர். டிக்டாக் செயலி காரணமாக வினிதா மொத்தம் 45 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு