Published:Updated:

சிவகாசி: மனைவியுடன் திருமணம் மீறிய உறவு... இளைஞரைக் கல்லால் அடித்துக் கொன்ற கணவர்!

காவல் நிலையம்

சிவகாசி அருகே மனைவியுடன் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்ட நபரை கல்லால் அடித்துக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி: மனைவியுடன் திருமணம் மீறிய உறவு... இளைஞரைக் கல்லால் அடித்துக் கொன்ற கணவர்!

சிவகாசி அருகே மனைவியுடன் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்ட நபரை கல்லால் அடித்துக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
காவல் நிலையம்

சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. எட்டாக்காப்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இதே பட்டாசு ஆலையில், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மனைவி பத்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். ஒரே பட்டாசு ஆலையில் பணிபுரிந்துவந்த நிலையில், கருப்பசாமியும் பத்மாவும் நெருங்கி பழகிவந்ததாகச் சொல்லப்படுகிறது. நாளடைவில் இவர்கள்‌ இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

கருப்பசாமி
கருப்பசாமி

இந்த நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்துவரும் பத்மாவின் மாமியார், தான் விரதமிருந்து கோயிலுக்குப் பாதயாத்திரை செல்ல விரும்புவதாக பாண்டிச்செல்வத்திடம் தெரிவித்திருக்கிறார். இதனால் தாயை வழியனுப்பி வைத்துவிட்டு வருவதாகக் கூறி, பாண்டிச்செல்வம் மாலை வீட்டிலிருந்து வெளியே கிளம்பியிருக்கிறார். இந்த நிலையில், பாண்டிச்செல்வம் வீட்டில் இல்லாததை, கருப்பசாமிக்கு போன் செய்து தெரிவித்திருக்கிறார் பத்மா. இதைத் தொடர்ந்து பத்மாவின் வீட்டுக்கு வந்த கருப்பசாமி, அவருடன் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை
மருத்துவமனை

அப்போது திடீரென வீட்டுக்குத் திரும்பி வந்த பாண்டிச்செல்வம், தன் மனைவி பத்மாவுடன், கருப்பசாமி தனிமையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த கட்டை மற்றும் கல்லால் அடித்து அவரைக் கொலைசெய்தார். இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த கருப்பசாமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், பாண்டிச்செல்வதை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிவகாசி அருகே, தன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை, கணவர் கல் மற்றும் கட்டையால் தாக்கிக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.