சிவகாசி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்தன் என்கிற பார்த்திபன் (27), சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சிவகாசி அருகிலுள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்குச் சென்றவர், மாலையில் வேலை முடிந்ததும், தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவருடன் டூ வீலரில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். டூ வீலரை, அரவிந்தன் ஓட்டிவந்துள்ளார்.

அவர்கள், கள்ளப்பட்டி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த நான்கு பேர் கும்பல் திடீரென சாலையில் வந்து நின்று அரவிந்தனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு சரமாரியாக அரவிந்தனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்வதற்காக அருகே இருந்த சோளக்காட்டுக்குள் அரவிந்தன் ஓடியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கீழே விழுந்த துரைப்பாண்டிக்கு தலை, கை கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சோளக்காட்டுக்குள் ஓடிய அரவிந்தனைப் பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரைச் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் உடலில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கச் சென்ற துரைப்பாண்டிக்கு தலை, கைகளில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவரவும் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து, கைகள் துண்டாகி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த அரவிந்தன், காயத்துடன் கிடந்த துரைப்பாண்டி இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இதில், அரவிந்தனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிர் தப்பிய துரைப்பாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், எம்.புதுப்பட்டி காவல் ஆய்வாளர் மலையரசி, காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பல தகவல்கள் தெரியவந்தன. அதன்படி, போலீஸ் தரப்பில் பேசியபோது ``வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரவிந்தன் மீது ஏற்கனவே இரண்டு கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. சிவகாசியில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நவநீதிகிருஷ்ணன் என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் அரவிந்தன் உட்பட மூன்று பேர் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கிலிருந்து சமீபத்தில்தான் அரவிந்தன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அரவிந்தன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது ஏற்கெனவே நடந்த கொலைக்குப் பழிக்குப்பழி கொலையாக இருக்கலாம்” என்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அருண்பாண்டியன், பார்த்திபன், மதன், பழனி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர் பழிக்குப்பழியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடருமோ என்ற அச்ச உணர்வை மக்கள் மனதில் விதைத்துள்ளது.